‘சீன்’ திரைப்பட விமர்சனம்

சூர்யா, நஸ்ரியா நஜிம், நஸ்லன்,ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் ,ஜோதிகா, டோவினோ தாமஸ், கஜராஜ்,சுரேஷ் மதியழகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.ஜித்து மாதவன் இயக்கியுள்ளார் .வசனம்: டிராவிட் செல்வம். ஒளிப்பதிவு: வினித் அகஸ்டியன் . இசை;சுஷின்  ஷாம்.படத்தொகுப்பு: அஜ்மல் சாபு,சண்டை இயக்கம்: சேத்தன் டி சௌசா.தயாரிப்பு: சூர்யா, ஜோதிகா.

கண்ணில் எண்ணெயை ஊற்றிக் கொண்டு கவனமாகக் கொலை செய்யும் ஒருவனை, கண் பார்வை இல்லாத போலீஸ் அதிகாரி எப்படிப் புலனாய்வு செய்து கண்டுபிடிக்கிறார் என்பதுதான் ‘சீன்’ படத்தின் ஒருவரிக்கதை.இதை அழகாகத் திரைக்கதை பின்னி பரபரப்பான திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஜித்து மாதவன்.

இன்பராஜ் என்கிற பெயர் கொண்ட சூர்யா காவல்துறை புலனாய்வு அதிகாரி . மர்மமான முறையில் தொடர்ந்து கொலைகள் நடக்கின்றன. அதைச் செய்பவர் ஒருவரா அல்லது பலரா என்கிற சந்தேகம் வருகிறது.இந்நிலையில் ஒரு மனநோயாளி கொலைகாரனைக் கண்டு பிடித்துச் சிறையில் அடைக்கிறார்கள். ஆனாலும் அதே கொலைகள் தொடர்கின்றன. இந்நிலையில் ஈஸ்வரன் என்கிற ஒருவன் கொலை செய்வதை அதுவும் கூலிக்காகக் கொலை செய்வதை ஒரு சாகசமாகச் செய்து வருகிறான். அவன் நன்கு படித்த திறமை உள்ளவன். எனவே இதை மிகவும் சாதுரியமாகச் செய்கிறான்.அப்படிக் காவல்துறைக்குத் ’தண்ணிகாட்டி’க்கொண்டு அவன் செய்யும் கொலைகளையும் அதற்கான காரணங்களையும் புலனாய்வு அதிகாரி இன்பராஜ் எப்படிக் கண்டுபிடிக்கிறார்,அதுவும் ஒரு கட்டத்தில் போலீஸ் பணியை இழந்து போலீஸ் பணியில் இல்லாத போதும் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதுதான்149 .16 நிமிடங்கள் கொண்ட ‘சீன்’ படத்தின் மீதிக்கதை.

படத்தில் சூர்யாவின் தோற்றம் அந்த ஆவேசம் ,அலட்சியம், அறிவு ,வேகம் அனைத்தையும் காட்டும் உடல் மொழி போன்றவை புதியதொரு சூர்யாவை வேறொரு பரிமாணத்தில் காட்டுகின்றன. கண்பார்வையற்றவராக அவர் இருந்தாலும் வழக்கம் போல பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் போல் தோற்றத்தில் அவர் இதில் தோன்றவில்லை . எதையும் அகக்கண் கொண்டு பார்ப்பவராக தீட்சண்யமிக்க அறிவு கொண்டவராக அந்தக் கதாபாத்திரத்தை அமைத்திருக்கிறார்கள். எனவே அவர் மீது நாம் பச்சாதாபப் படவில்லை. அனுதாபத்தை விட்டு விட்டு அந்தக் கதாபாத்திரத்தின் கூர்மையை ரசிக்க ஆரம்பித்து விடுகிறோம். எதையும் தர்க்க ரீதியாகக் கேள்வி கேட்டுத் தகவல்களைச் சேகரித்துக் கொள்ளும் அந்த துப்பறியும் மனம் அந்த பாத்திரத்தின் மூலம் சரியாகவே வெளிப்பட்டுள்ளது.உச்ச கட்ட காட்சியிலும் அவர் வில்லனை சந்திக்கும் தருணங்களிலும் நமக்கு ரத்த அழுத்தத்தை ஏற்றி விடுகிறார். அந்த அளவுக்கு காட்சிகள் பரபரப்பாக இருக்கின்றன.

நாயகியாக நடித்திருக்கிறார் நஸ்ரியா நஜிம்.சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மறுபிரவேசம் செய்திருக்கிறார். அவரை சூர்யா தனது உதவியாளராக வைத்துக் கொள்ளக் கேட்கும் கேள்விகள் சுறுசுறு ரகம்.காலம் நஸ்ரியாவின் முகத்தில் தனது ரேகையைப் பதித்திருந்தாலும் அதன் மூலம் அவரது தோற்றத்தில் மாற்றம் இருந்தாலும் நல்ல நடிப்பை தனது முக பாவனைகளில் காட்டி பார்வை இழந்த சூர்யாவுக்கு இரு கண்களாக வரும் அந்த மாயா பாத்திரத்தை மெருகேற்றி உள்ளார்.அது மட்டுமல்லாமல் மனதில் கம்பீரம் உள்ள ஒரு பெண்ணாகவும்  வந்து சண்டைக்காட்சிகளில் அசத்தியிருக்கிறார். சூர்யாவின் ஒவ்வொரு அசைவையும் அவர் கவனித்து வெளிப்படுத்தும் சொற்கள், செயல்கள் ஃல்லாமே அந்தப் பாத்திரத்தைக் செழுமைப்படுத்துகின்றன.சூர்யா- நஸ்ரியா இடையே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதன் மூலம் வருகிற எண்ண இணைவு ரசனை மிக்கதாக ரசிக்க வைக்கிறது

அந்தப் பிரதான வில்லன் ஈஸ்வரனாக  வரும் வாலிபக்களை மாறாத இளைஞனாக வரும் நஸ்லன் விளையாட்டுத்தனமாக குற்றங்கள் செய்ய ஆரம்பித்து அதற்குப்பின் அந்தப் போதையில் விழும் வாலிபனாக நன்றாகவே வெளிபட்டுள்ளார். உச்சகட்ட காட்சியில் சூர்யாவை நெருங்கும் தருணங்கள் பரபர ரகங்கள்.சரியான திரையரங்க அனுபவத்தைத் தரும் காட்சிகள்.

ஒரு காலத்தில் வில்லனாக நடித்து வந்த ஆனந்தராஜ் இதில் அவ்வப்போது நினைவாற்றல் இழக்கும் பாத்திரத்தில் வருகிறார். தனக்கு நினைவாற்றல் இழப்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு கவுண்டவுன் சொல்லி நினைவிழந்தவராக மாறும் காட்சிகள் சிரிக்கவும் அனுதாபப் படவும் வைக்கின்றன.சூர்யாவின் அம்மாவாக குடிகாரப் பெண்மணியாக வரும் நடிகையும் மனதில் பதிகிறார்.

சூர்யாவுடன் இருக்கும் இரண்டு போலீஸ்காரர்கள் ஆதரவாளர், ஒவ்வாமை கொண்டவர் என்று இரு ரகமாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் சூர்யா விசுவாசியாகவும் அல்லாதவராகவும் இருந்தாலும் ஒரு கட்டத்தில் தங்கள் முரண்பாடுகளை மறந்து சூர்யாவின் அறிவை மதித்து அவர் மீது பிரமிப்பு கொண்டவர்களாக மாறி உதவுகிறார்கள்.

ஒரு சைக்கோ கொலைகாரன் போல டோவினோ தாமஸ் சில காட்சிகளில் இருந்தாலும் மனதில் பதிகிறார். கௌரவ வேடம் போல் ஒரு காட்சியில் ஜோதிகா வருகிறார்.அந்தப் பாத்திர அமைவிடம் ரசிக்க வைக்கிறது.சூர்யாவின் மேல் அதிகாரியாக வரும் லால் எது செய்தாலும் கோபப்படாதராக வந்து சிரிக்கவும் வைக்கிறார்.பதவியின் அந்தப் பொறுப்பை உணரவும் வைக்கிறார். மேலும் ,வில்லனுடன் பயணிக்கும் அந்தப் பெண், அந்த ஆட்டோக்காரர், நஸ்ரியாவின் அப்பாவாக வரும் கஜராஜ் எல்லாருமே அவரவர் பாத்திரத்தில் மிளிர்கிறார்கள்.

இந்தப் பரபரப்பான திரைக்கதை கொண்ட கிரைம் த்ரில்லர் படத்தில் ஒளிப்பதிவு செய்துள்ள வினித் தனது கேமராவை ஓய்வில்லாமல் ஓட விட்டுள்ளார் . சுஷின் ஷாம் அமைத்துள்ள பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது.காட்சிகளை ஆங்காங்கே தூக்கி நிறுத்துகிறது. சில இடங்களில் எந்தப் பின்னணி இசையும் ஒலிக்காமல் அந்தக் காட்சியின் தீவிரத்தையும் உணர்த்தி உள்ளார் இசையமைப்பாளர்.

இந்த கில்லர் திரில்லர் கதையை ரத்தம், வெட்டு ,குத்து என்கிற வன்முறை இல்லாமல் ஆங்காங்கே அந்த கதாபாத்திரத்தின் அசைவுகளை கொண்டு சிரிக்கவும் வைத்து ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர்.

காவல்துறை விசாரணையில் உள்ள பல்வேறு நுணுக்கமான செயற்பாடுகள் மனித உளவியல் சார்ந்த பல்வேறு உண்மைகள் போன்றவற்றை ஆங்காங்கே பாத்திரங்களின் மூலம் கடத்தி உள்ளார் இயக்குநர்.

முதல் பாதிப் படத்தில் சூர்யாவின் கண்பார்வை சார்ந்து நமக்கு  தர்க்கரீதியான கேள்விகள் வந்தாலும் அனைத்திற்கும் பதில் இரண்டாம் பாகத்தில் வைத்து நம்மை இறுக்கமாக இருக்கைக்குள் அமிழ்த்தி விடுகிறார் இயக்குநர்.
அதேபோல முதல்ப் பாதி படத்தில் சமூக சிந்தனை உள்ள ஒரு நடிகரான சூர்யா சிகரெட் பிடித்துக்கொண்டே இருக்கிறாரே என்பது போல பல கேள்விகள் நமக்குள் எழும்.ஆனால் படத்தின் இரண்டாவது பாதியில் அதற்கான பதில் இருப்பதால் நாம் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறோம்.

புத்திசாலித்தனமான திரைக்கதை, கச்சிதமான பாத்திரச் சித்தரிப்புகள் சலிப்பூட்டாத ஆக்ஷன் காட்சிகள் என்று இந்த ‘சீன்’ திருப்தியான முழுமையான திரையரங்க அனுபவத்தை தருகிறது எனலாம்.கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் படங்களுக்குப் பிறகு நிச்சயமாக ஹாட்ரிக் அடிக்கப் போகிறது இந்தப் படம்.

மொத்தத்தில் தீபாவளி ரேசில் முந்திச் செல்கிறது சூர்யாவின் இந்த ‘சீன்’.