‘ராமாயணா’ திரைப்பட விமர்சனம்

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் , அனுபம் கெர்,ரவி துபே,அருண் கோவில்,சன்னி தியோல், விவேக் ஓபராய், ரகுல் ப்ரீத் சிங், ஷோபனா நடித்துள்ளனர். இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார். பங்கஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ ஆர் ரகுமான் மற்றும் ஹன்ஸ் ஜிம்மர் இசையமைத்துள்ளார்கள். நமீத் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரித் துள்ளன.

இந்தியாவில் உள்ள நூறு கோடி மக்களுக்கும் தெரிந்த கதை ராமாயணம்.அந்தக் கதையை ஒரு புனைவாக திரையில் கொண்டு வரும் போது ஆங்காங்கே உள்ள பாத்திரத்தை மேலும் ஆழப்படுத்தி அகலப்படுத்தி சிலவற்றைச் செறிவாக்கி கிளைக்கதைகளைத் தூவி உருவாக்குவதுண்டு. அந்த வகையில் உருவாகி உள்ளது தான் இந்த ‘ராமாயணா’.195 நிமிடங்கள் கொண்டது இந்தப் படம்.

எத்தனை முறை  கேட்டாலும் படித்தாலும் திரையில் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் புதிய அனுபவத்தை தருவதுதான் இதிகாசங்கள். அந்த வகையில் உருவாக்கி இருக்கும் இந்தப் படம் இரண்டு பாகங்களைக் கொண்டது. முதல் பாகம் தீபாவளிக்கு வெளியாகி இருக்கிறது.அடுத்த பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வருகிறது.

படத்தின் முதல் பாதியில் ராவணன் பாத்திரத்தின் சித்தரிப்பு பிரமாதமாக அமைந்திருக்கிறது. அசுரவம்சத்தின் வீழ்ச்சி இழிவு போன்றவற்றைக் காட்டி அவன் தவத்தால் விஸ்வரூபம் எடுப்பதும் அது கொடுத்த ஆற்றலின் மூலம் மூவுலகையும் ஆள நினைப்பதும் என்று ராவணன் பாத்திரம் வானளாவிய ஒன்றாக உயர்ந்து நிற்கிறது.
அடுத்ததாக ராமரின் பிறப்பு வளர்ப்பு என்று அவரது வளர்ச்சி சிறிது நேரம் காட்டப்படுகிறது. அதன் பிறகு காட்டில் தாடகை, சுபாகு என்ற அரக்கர்கள் வதம், மிதிலை சுயம்வரம்,சிவ தனுசை உடைப்பது, சீதையுடன் திருமணம், பரசுராமர் வருகை, அவரது சரண் ,கைகேயின் வரம் வஞ்சகம், தசரதனின் துயரம்,ராமர் வனவாசம் செல்வது , பரதனின் விசுவாசம், சூர்ப்பனகை வருகை,அவளது ஆசை , லட்சுமணனின் கோபம், கானகத்தில் நடக்கும் சண்டைகள், சீதையை ராவணன் கடத்திச் செல்வது என்று தொடர்ந்து, சீதையை மீட்பேன் இது ராமர் வாக்கு என்பதுடன் முதற்பாகத்தின் கதை முடிகிறது.

இந்தக் காவியம் சொல்வதே நன்மைக்கும் தீமைக்கும், வன்மத்துக்கும் அன்புக்கும், மாயைக்கும் தெளிவுக்கும்,வஞ்சகத்திற்கும் விசுவாசத்திற்கும் என்று இரண்டு முரண்பாடுகளுக்கு இடையேயான போர் பற்றியதுதான்.

இந்த ராமாயணம் படத்தை இன்று முன்னேறி இருக்கும் நவீன தொழில்நுட்ப ரீதியில் உருவாக்கி அதுவும் முப்பரிமாணக் காட்சிகளாகக் கண் முன் நிறுத்தி, நிறைத்து பிரம்மாண்டப்படுத்தியுள்ளார் இயக்குநர்.ராமராக ரன்பீர் கபூர் சிறப்பாக அறிமுகம் ஆகிறார்.சாந்தமான முகம் ஒளி வீசும் கண்கள் பொலிவான உடல் தோற்றம் பணிவும் விவேகமும் பொறுமையும் நிறைந்த குணம் என்று ரன்பீர் கபீர்  அந்தப் பாத்திரத்தில் மிளிர்கிறார். சமயம் வரும்போது வில் வித்தை காட்டும் போது மட்டும் ஆவேசமாகி விடுகிறார். சீதையுடன் மையல்கொள்ளும் போதும் கைகேயியுடன் பாசம் காட்டும் போதும் தம்பி லட்சுமணனிடம் பாசத்துடன் கண்டிப்பாகவும் இருக்கும்போதும் அரக்கர்களை வீழ்த்தும்போதும் என்று பல்வேறு காட்சிகளிலும் பல்வேறு உணர்ச்சித் தருணங்களைக் காட்டியுள்ளார்.

சீதையாக நடித்துள்ள சாய் பல்லவி, பாந்தமான தோற்றத்தில் அமைதியின் திருவுருவாக வருகிறார். அவரது தோற்றப் பொலிவு அந்தப் பாத்திரத்திற்கு விளக்க உரை தேவையில்லாத பவித்திரமான பிம்பத்தைக் கொடுத்து விடுகிறது. இதில் சீதை பாத்திரம் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளது சிலரால் விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இது படம் பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவத்தைத் தருகிறது. சீதையின் நடைஉடை அலங்காரங்கள் ஒளி வீசக்கூடியவை. ஆனால் அவருக்கான உணர்ச்சிமிக்க காட்சிகளை மேலும் அதிகப்படுத்தி இருக்கலாம்.

லட்சுமணன் பாத்திரத்தில் ரவி துபே வருகிறார். அவ்வப்போது படம் பார்ப்பவர்களை முறுவலிக்க வைக்கிறார். லாரா தத்தா கைகேயியாக வஞ்சகக் கண்களுடன் வந்து நடித்துள்ளார் . சூர்ப்பனகையாக ரகுல் பிரீத் சிங் எதிர்மறைப் பாத்திரத்தில் வருகிறார்.பெருமிதம், கோபம், காதல்,அவமானம், ஆவேசம் என்று பலகாட்சிகளில் நடித்துள்ளார்.மண்டோதரி பாத்திரத்திற்குக் காட்சிகள் குறைவு என்றாலும் காஜல் அகர்வால் அந்தப் பாத்திரத்தில் பெருந்தன்மையுடன் நடித்துள்ளார் .ராவணனின் தாயாராக ஷோபனா வருகிறார்.

இந்த ராமாயணக் கதையில் ஜடாயு பாத்திரம் நீளமான காட்சிகளுடன் பெரிதாக காட்டப்பட்டுள்ளது. ஜடாயு- ராவணன் சண்டைக் காட்சிகள் தொழில்நுட்ப பங்களிப்பின் மூலம் பார்வையாளர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும்.

தோற்றப்பொலிவில் உடை அலங்காரங்களில் அந்தந்த பாத்திரத்தில் ஒவ்வொருவரும் நடித்து இருந்தாலும் பாத்திரத்தின் குணாம்சத்தை வெளிப்படுத்திய வகையில் ராவணனாக நடித்திருக்கும் யஷ் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார் .அவர் பிறப்பு, வளர்ப்பு ,இந்திரனுடன் போர் புரிதல் தனது வம்சத்தை உயர்த்த சண்டை இடுவது போன்றவற்றில் ரகளை செய்துள்ளார்.எனவே ராவணன் பாத்திரம் மேலோங்கி நிற்கிறது.

இந்த முப்பரிமாணப்படத்தில் காட்சிகள் ஒவ்வொன்றிலும் பிரம்மாண்டம் தெரிகிறது.கிராபிக்ஸ் அசத்தல்களில் பறக்கும் யானைகள், பாய்ந்து செல்லும் காண்டாமிருகங்கள், தேரை இழுக்கும் காட்டுப் பூனைகள் மற்றும் உருமாறும் அரக்கர்கள் போன்றவை வயது மீறி அனைவரையும் ரசிக்க வைக்கும்.

ஏ ஆர் ரகுமானும் ஹன்ஸ் ஜிம்மரும் பின்னணி இசையில் படத்தை வேறொரு கட்டத்திற்குத் தூக்கிச் செல்கிறார்கள். அது உலகளாவிய சினிமா அனுபவமாக மாற்றி இருக்கிறது.படத்தில் தமிழில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் காவிய உணர்வைத் தருகின்றன.

சில இடங்களில் படத்தின் கதாபாத்திர உணர்ச்சிகளை விட தொழில்நுட்பப் பிரம்மாண்டங்கள் மேலோங்கித் தெரிவது ஒரு பின்னடைவாகத் தோன்றுகிறது.சில நீளமான காட்சிகளைத் தவிர்த்து , பாத்திரங்களுக்கான காட்சிகளை உணர்ச்சிமிக்கதாக அதிகப்படுத்தி இருந்தால் இந்தப் படம் மேலும் சிறந்து விளங்கி இருக்கும்.

மொத்தத்தில் ’ராமாயணா’ திரையில் ஒரு பிரம்மாண்ட அனுபவம்.