‘ஃபிளாக் ‘ (Flag) திரைப்பட விமர்சனம்

திஹான்,மிக்கி மக்கி ஜா,கிரி துவாரகேஷ் ,ஆனந்த் ,அபிநவ் கோசாமி ,அமீர் மாலிக் ,பபுஷா ,சினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் எஸ்பி பொன்சங்கர். ராஜா ரவி வர்மா, பாலசுப்பிரமணியம் இணைந்து இசை அமைத்துள்ளனர்.வரதராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார்.ஐ & ஐ மூவிஸ் சார்பில் வைர பிரகாஷ் தயாரித்துள்ளார்.

மோகனவேல் என்கிற பெயர் கொண்ட திஹான் விளையாட்டில் ஆர்வம் உள்ள சிறுவனாக இருக்கிறான். அவனுக்குச் சிறு வயதிலேயே படிப்பை விட விளையாட்டில்,சாகசங்களில் ஈடுபாடு உண்டு. சிறு வயதிலேயே அவனது பெற்றோரை விபத்தில் இழக்கிறான்.அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் செய்வது அறியாமல் தவிக்கிறான்.ஆரம்பத்தில் தாத்தாவிடம் ஒட்டாமல் இருக்கிறான். பிறகு தாத்தாவைப் புரிந்து கொண்டு அவருடன் நெருக்கமாகி விடுகிறான். அப்படியே தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான்.மூவர்ணக் கொடி தயாரிக்கும் இடத்தில் வேலை பார்க்கும் தாத்தாவிற்கு அந்தக் கொடி பற்றிய கனவு இருக்கிறது. டில்லி கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுவதைப் பார்க்க வேண்டும் என்பது அவரது பெரிய கனவாக இருக்கிறது. தாத்தா ஒரு கட்டத்தில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கவே தாத்தாவின் கனவை நிறைவேற்ற, பெங்களூரில் இருந்து தன்னந்தனியாக திஹான் டில்லிக்குப் புறப்படுகிறான்.அவன் செல்லுகிற பாதையில் பல்வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்த இந்திய மக்களையும் வேறு வேறு நிலப்பகுதியையும் பார்க்கிறான். இடையிலேயே பல்வேறு சோதனைகளையும் சிக்கல்களையும் சந்திக்கிறான்.இந்நிலையில் அவன் தனது தாத்தாவின் கனவை நிறைவேற்றினானா இல்லையா என்பதுதான் 120.59 நிமிடங்கள் கொண்ட ’ஃபிளாக்’ படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக மோகனவேல் பாத்திரத்தில்  நடித்துள்ள திஹான் சிறுவனாக இருந்த போதும் அந்த அடர்த்தியான வேடத்தில் ஈடு கொடுத்து தன்னை நல்ல நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளான்.நன்றாக நடிப்பதற்கான பல்வேறு சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு அந்த நடிப்பு வெளிப்பட்டுள்ளது.

தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிக்கி மக்கி ஜா அச்சு அசலான தாத்தாவாக, படம் பார்ப்பவர்களின் மனதில் ஒட்டிக் கொள்கிறார்.மேலும் படத்தில் நடித்துள்ள, கிரி துவாரகேஷ், ஆனந்த், அபிநவ் கோசாமி, அமீர் மாலிக், பபுஷா, சினி என அனைத்து நடிகர்களும் இந்தியாவின் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்ட மக்களை நினைவுப்படுத்தும் வகையில் வருகிறார்கள்.

ஒரு பயண அனுபவமாக காட்சிகள் விரிகின்றன. அந்த வகையில் இந்தியாவைப் பற்றி அறியும் வகையில் மாநிலம் மாநிலமாக சுற்றிக் காட்டுகிறார்கள் .அங்குள்ள முக்கியமான இடங்களை எல்லாம் காட்டுவது ஒரு சுற்றுலா சென்று வந்த உணர்வைத் தருகிறது. அப்படியே இந்தப் படத்தை எடுத்து இருக்கிறார்கள். ஒரு சிறுவனின் பயணத்தின் கதையாக செல்கிற இந்தப் படத்தைத் தேசியக்கொடியின் மகத்துவத்தையும் உணர்த்தும் வகையில் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.பொன்சங்கர்.

இந்தியாவின் பல மாநிலங்களின் பின்புலங்களைக் காட்டுகிறார்கள்.மொழி, மனிதர்கள்,மதம்,கலாச்சாரம், உணவு ,,உடைகள் எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும், ‘இந்தியர்’ என்ற ஒருமை உணர்வு மக்களை இணைப்பதையும் காட்டியுள்ளார்கள். இந்தப் பயணத்தில் வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவின் அந்தப் பன்முகத்தன்மை காட்டப்படுகிறது.அது ஒரு புதிய காட்சி அனுபவமாக இருக்கிறது. இருந்தாலும் அதையும் சுவாரஸ்யம் கொண்ட திரைக்கதை உடன் பாத்திரங்களுக்கு அழுத்தமான சித்தரிப்பையும் வழங்கி உருவாக்கி இருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்.

ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கும் இயக்குநர் எஸ்.பி.பொன்சங்கர், தனது கேமரா கண்கள் மூலம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நிலவும் இந்தியப் பண்பாட்டை திரையில் கொண்டு வந்துள்ளார்.ஒரு தேசிய கொடி மூலம் இந்திய மக்களிடம் பரவியுள்ள நாட்டுப்பற்றை விளக்கும் வண்ணம் இந்தப் படம் உருவாகியுள்ளது.