அஷ்வின் குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன், சித்து குமரேசன் வினோத் கிஷன், கலைவாணி பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கி உள்ளார். ஜி5 ஒரிஜினல் வெளியிட்டுள்ளது.
இணையத் தொடருக்கு என்று ஒரு கதை கூறும் முறை உண்டு . அவசரமும் பரபரப்பும் கொண்ட கதையாகவே தொடங்கும். ஆனால் இந்த ஆக்டோபஸ் இணையத் தொடரின் கதை ஒரு தொலைக்காட்சித் தொடர் போலவே தொடங்குகிறது.
சரி கதை என்ன?
அன்புநகர் என்ற குடியிருப்பில் உள்ள மக்கள்,ஒரு சமூகம் போல் அன்னியோன்யமாக ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு வாழ்கிறார்கள்.
புதுமணத் தம்பதிகளான அஸ்வின் குமார் – சித்து குமரேசன் அந்த குடியிருப்பில் புதிதாக குடியேறுகிறார்கள். மனைவியிடம் அன்பாக இருப்பது போல் அவர் தோன்றினாலும் பார்ப்பவர்களுக்கு முரட்டுத்தனமாக யாருடனும் ஒட்டாமலும் இருக்கிறார்.அந்த அஸ்வின் குமார், அவ்வப்போது மனைவியைக் கொடுமைப்படுத்துவதை அக்கம் பக்கம் உள்ளவர்கள் அறிகிறார்கள். இதைக் கவனிக்கும் ரேடியோ ஜாக்கி அர்ச்சனா ரவிச்சந்திரன், அஸ்வின் குமாரைத் தொடர்ந்து கண்காணிக்கிறார் ..ஏதோ தவறு செய்கிறார் என்று அவரைக் கையும் களவுமாகப் பிடிக்க தக்க சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அஸ்வின் குமாருக்கு மற்றொரு பெண்ணிடம் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. இதை அவர் மனைவி சித்து குமரேசனிடம் சொல்ல, அவர் அதிர்ச்சியடைகிறார்.
இந்த நிலையில், ஒரு நள்ளிரவில் அஸ்வின் குமார் வீட்டில் அலறல் சத்தம் கேட்கிறது.ஆனால் அதற்குப் பிறகு சித்து குமார் மாயமாகி விடுகிறார். அஸ்வின் குமாரால் சித்து குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அன்பு நகர் குடியிருப்பு வாசிகள் சந்தேகப்படுகிறார்கள்.போலீஸ் புகார் கொடுக்கப்படுகிறது.ஆனால், விசாரணையின் போது தனக்குத் திருமணமே ஆகவில்லை என்கிறார் அஸ்வின் குமார். பிறகு அவர் சொல்வது உண்மை என்று தெரிய வருகிறது.
அவர் தான் குற்றவாளி என்பதை நிரூபிக்க அன்புநகர் குடியிருப்பு வாசிகள், தகுந்த ஆதாரத்துடன் களத்தில் இறங்குகிறார்கள். அப்போது அவர்களுக்குக் கிடைக்கும் ஆதாரம் ஒன்றின் மூலம் அவருக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்க நீதித்துறையை நாடுகிறார்கள். நீதிமன்ற விசாரணையில், மாயமான சித்து குமார் என்ன ஆனார் ?, அஸ்வின் குமார் சொல்வது உண்மையா ? ஆகிய கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதோடு, அன்புநகர் குடியிருப்பில் புதைந்திருக்கும் ஒர மர்மமும் வெளிச்சத்திற்கு வருகிறது. அது என்ன ? என்பதே ‘ஆக்டோபஸ்’ தொடரின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின் குமார், சைக்கோ போன்ற தோற்றத்தில் வருகிறார்.மர்மமான மற்றும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற சவாலான கதாபாத்திரத்தை மிக சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.தனது பாத்திரத்தின் மூலம் பார்வையாளர்களை எரிச்சலூட்டி வசவுகளை வாங்கிக் கொள்கிறார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா ரவிச்சந்திரன், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டவர். அதை வெளிக்காட்டும் இடங்களில் நடிப்பில் ஈர்க்கிறார். உண்மைக்குப் பின் அவரது சுபாவம் மாறுகிறது.
பார்த்தால் எதிர்மறைத் தோற்றத்தில் தெரியும் வினோத் கிஷன் உணர்வுப்பூர்வமான நடிப்பால் கண்கலங்க வைக்கிறார். அவரது காதலியாக நடித்திருக்கும் கலைவாணி பாஸ்கரின் திரை இருப்பு தொடருக்குப் பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
குடியிருப்பு வாசிகளையே புலாய்வாளர்களாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதைக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.
சஸ்பென்ஸ் கிரைம் திரில்லரை நாடகத்தன்மையோடு படமாக்கிய விதம், மற்ற சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் தொடர்களில் இருந்து முற்றிலும் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது.
கதையின் தன்மையை பிறழவிடாமல் தன் பின்னணி இசை மூலம் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி.
ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போது, அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர். வன்முறை மற்றும் இரத்தம் இல்லாத சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக ஒரு சாதாரண குடியிருப்பு மக்களே துப்பறியும் நபர்களாக மாறும் விதத்தையும், நீதிமன்றக் காட்சிகளில் வரும் திருப்பங்களையும் மிகவும் சரியாகக் கையாண்டிருக்கும் இயக்குநர் ஜெயசந்திர ஹாஷ்மி பாராட்டுக்குரியவர்.
அஸ்வின் குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன், வினோத் கிஷன் ஆகியோரின் உணர்வுப்பூர்வமான நடிப்பு மற்றும் துப்பறியும் நபர்களாக மாறும் குடியிருப்பு வாசிகளின் இயல்பான நடிப்பு தொடரின் மிகப்பெரிய பலம்.
முதல் இரண்டு அத்தியாயங்கள் மெதுவாக நகர்வதும், சில காட்சிகள் தேவையில்லாமல் நீட்டிக்கப்பட்டிருப்பதும் தொடரின் பலவீனம். இதை தவிர்த்திருந்தால் தொடர் இன்னும் மேன்மையாக இருந்திருக்கும்..
மொத்தத்தில், ‘ஆக்டோபஸ்’ அனைவரையும் கவரும் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் தொடர் என்பதில் சந்தேகம் இல்லை.


