விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி ,ரம்யா கிருஷ்ணன், மோக்ஷா, யோகி பாபு, தீப்தி, கருணாஸ், முனீஷ் காந்த், காளிவெங்கட், கருணாகரன்,லிசி ஆண்டனி,கஜராஜ்,ஸ்ரீஜா ரவி, சாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார் செல்லா அய்யாவு.
இசை : ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு: கே எம் பாஸ்கரன், படத்தொகுப்பு: பரத் விக்ரமன், கலை இயக்கம் :ஜெயச்சந்திரன்.
தயாரிப்பு: வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்.
வணிகரீதியான வெற்றி பெற்ற ‘கட்டா குஸ்தி’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. ரெஸ்ட்லிங் எனப்படும் மல்யுத்தத்தில் வீராங்கனையாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, திருமணத்துக்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொண்டால் தனது இலட்சியத்தை அடைய முடியுமா என்கிற தயக்கத்தில் இருக்கிறார். ஆனால் குழந்தை பெற்ற பிறகும் கணவரது ஊக்கத்தால் எப்படி தனது லட்சியத்தை அடைகிறார் என்பதை நோக்கிச் செல்லும் வாழ்வில் பல்வேறு திருப்பங்களும் போராட்டங்களும் முடிச்சுகளும் கொண்ட கதையாக அமைந்து உருவாகி உள்ளது ‘கட்டா குஸ்தி’ இரண்டாம் பாகம்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பதைப் போல் ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னணியில் ஆண் இருக்குமாறு விஷ்ணு விஷால் தனது மனைவிக்காகக் குடும்ப பாரத்தைச் சுமந்து ‘ஹவுஸ் ஹஸ்பண்டா’க இருந்து தன் மனைவியின் லட்சியத்தை நிறைவேற்றப் பாடுபடுகிற இந்தக் கதையில் ஐஸ்வர்யா லட்சுமி போட்டியில் ஒவ்வொரு படிநிலையாக மேலேறிச் சென்று தேசிய அளவில் உயர்ந்து செல்கிறார். ஆனால் தனது ஆறு வயது மகளைக் கவனிக்க முடியவில்லை என்ற கவலை அவருக்குத் தொற்றிக் கொள்கிறது அப்பாவின் செல்லத்தில் மகள் கெட்டுவிடுவாளோ என்று பயந்து தான் பொறுப்பு எடுத்துக் கொள்கிறார் .இதனால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சில தவறான புரிதல்களால் ஆணவச் சிக்கல்களால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகி விரிசல் விழுந்து விவாகரத்து வரை செல்கிறது. இப்படிப் பிரிந்து போன இருவரும் எப்படிச் சேர்கிறார்கள்?அதற்குப் பிறகு அவர்கள் வாழ்வில் நடக்கிற மாற்றம் என்ன என்பதைச் சொல்வது தான் இந்த ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் மீதிக் கதை.
முதல் பாகம் ஒரு கலகலப்பான திரைப்படமாக வெற்றி பெற்றது. ஆனால் அதற்குச் சற்றும் குறையாமல் அதிகமான கலகலப்புடன் ஜாலியான காட்சிகளுடன் படத்தின் வெற்றியை மட்டுமே குறிவைத்து அனைத்து வணிக அம்சங்களும் கலந்து இந்தப் படம் கலகலப்பாக உருவாகி உள்ளது.இயல்பு குறையாத காட்சிகளும் கதை கூறும் முறையும் இயக்குநர் செல்லா அய்யாவுவை தெளிவான ஒரு தொழில்நுட்பராக வெளிப்படுத்தி உள்ளது.
நாயகனாக வீரா பாத்திரத்தில் நடித்துள்ள விஷ்ணு விஷால், தண்ணீர் பிடிக்கும் பெண்கள் கூட்டத்தில் முண்டி அடித்துக்கொண்டு இரண்டு கைகளிலும் ஏராளமான குடங்களுடன் உள்ளே நுழைந்து வெளிவரும் காட்சியில் தொடங்குகிற கலகலப்பு, படம் முழுக்க சரவெடியாய் வெடிக்க வைக்கிறது.ஹவுஸ் ஒய்ஃப் போல அவர் ஹவுஸ் ஹஸ்பெண்ட் ஆக அவர் செய்யும் செயல்களும் மனைவியை ஆதரிப்பதும் ஊக்குவிப்பதும் பெண்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தருகிறது.அது மட்டுமல்லாமல் சில ஆக்சன் காட்சிகளில் பின்னிப் பெடல் எடுத்து தான் ஒரு மாஸ் ஹீரோ என்பதையும் நிரூபித்துள்ளார். குறிப்பாக “அப்படி போடு..போடு..” பாடலுக்கு நடிகை மோக்ஷாவுடன் போடும் ஆட்டம் திரையரங்கையே குலுங்க வைக்கும்.ஒரு முழுமையான ஹோம் மேக்கராக அவர் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.அதன் மூலம் பெண்கள் மத்தியில் அவர் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.
இன்னொரு வகையில் பார்த்தால் கீர்த்தியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமியையே கதை மையம் கொள்கிறது.அப்படி அந்த மல்யுத்த வீராங்கனை பாத்திரத்தில் பல்வேறு முகபாவனை காட்டி அதிரடியாக நடிக்கும் தருணங்களில் சரியாக வெளிப்பட்டுள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி.உடல் ரீதியாக முரட்டுத்தனத்தையும் மனரீதியாக விஷ்ணு விஷாலிடம் காதலையும் வெளிப்படுத்துகிறார்.அவர் ஆடும் ‘சம்பவக்காரி’ பாடல் சரியான அதிரடி.
விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி தம்பதியின் மகளாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் சாரா,வயதுக்கு மீறி பேசி மொத்த திரையரங்கையும் கலகலக்க வைக்கிறார்.அவர் செய்யும் சுட்டித்தனங்கள் அந்த காட்சிக்கு அழகு சேர்க்கின்றன.
விஷ்ணு விஷாலின் மாமா ரத்தினம் பாத்திரத்தில் வரும் கருணாஸ் ,ஆண் ஜம்பம் ஜெபம் பேசிக்கொண்டும் குலப்பெருமை பேசிக்கொண்டு சிரிக்க வைக்கிறார்.அவரது மனைவியாக வரும் லிசி ஆண்டனி திடுக்கென்று விஸ்வரூபம் எடுத்து கவனத்தைக் வருகிறார்.பஞ்சாயத்து தலைவராக மாறி கருணாஸ் அவரை நடத்த விதம் வெடிச்சிரிப்பு வர வைக்கும்.
மற்றொரு நாயகியாக, மீனு டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோக்ஷா, ‘முந்தானை முடிச்சு’ தீபாவை நினைவூட்டுகிறார். மோக்ஷா விஷ்ணு விஷால் சம்பந்தப்பட்ட காட்சிகள் திரையரங்கை களை கட்ட வைக்கின்றன.
கீர்த்தியின் சித்தப்பா கணேசனாக வரும் முனிஷ்காந்த், வழக்கறிஞர் சட்டநாதன் பாத்திரத்தில் வரும் காளி வெங்கட் , கீர்த்தியின் தந்தையாக வரும் கஜராஜ், தாயாராக வரும் ஸ்ரீஜா ரவி, டிடிஆர் பார்த்தா பாத்திரத்தில் வரும் கருணாகரன்,கீர்த்தியுடன் போட்டியாளராக மோதும் தீப்தி ஆகியோரது பாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்குப் பக்கபலமாக அமைந்துள்ளன.நீதிபதி ராஜ ராஜேஸ்வரியாகச் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல்பீர் சிங்காக வரும் யோகி பாபு இருவரும் படத்தின் நட்சத்திர வெளிச்சத்துக்கு உதவுகிறார்கள். கோச்சாக வரும் அந்த நடிகரும் ஆர்ப்பாட்டம் இல்லாமலேயே அந்த எதிர்மறைப் பாத்திரத்தில் மிளிர்கிறார்.படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் அவரவர் பாத்திரத்தையும் மனதில் பதியும்படி உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.
ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன் படம் முழுவதையும் வண்ணமயமாகவும் காட்சி விருந்தாகவும் மாற்றி இருக்கிறார்.வீட்டுக்குள், பள்ளிக்குள் ,வெளியில், குஸ்திக் களத்தில் என்று ஒவ்வொரு எபிசோடாக ரசிக்க வைக்கிறார்.ஒரு கட்டத்தில் கேரளா, பாலக்காடு செல்கிற கதைக் காட்சிகள் வேறு ஒரு நிறத்தைக் காட்டுகின்றன.
ஷான் ரோல்டன் இசையில் ஒரு வணிகப்படத்திற்கான பொருத்தமான வகையில் பாடல்களும் பின்னணி செய்யும் கைகோர்த்து பலம் சேர்த்துள்ளன.
காட்சிகளின் முக்கியத்துவத்தை சரியாகப் புரிந்து கொண்டு படத் தொகுப்பு செய்துள்ளார் பரத் விக்ரமன்.காட்சிகளை ஒரு வினாடியும் தொய்வு விழாமல் சரியாகக் கோர்த்து இருக்கிறார் .
சில படங்களைத் தனி ஒருவராகப் பார்த்து ரசிக்க முடியும் .சில படங்களைத் திரையரங்கில் அரங்கு நிறைந்த மனிதர்களோடு பார்ப்பதில் ஓர் இன்பம் இருக்கும். அப்படி ஒரு திரையரங்கு அனுபவத்தை முழுமையாகத் தருகிற படமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது.
ஒரு வணிகப்படத்தில் பெண் உரிமை, ஆண் பெண் சமத்துவம், பெண் விடுதலை, ஆணாதிக்க எதிர்ப்பு ,குடும்பப் பொறுப்புகளைப் பகிர்வதில் பாலினப் பாகுபாடின்மை போன்ற பலவற்றையும் பிரச்சார தொனியின்றி கருத்து கூறும் கறார்த்தனமின்றி நகைச்சுவை கலந்த கலகலப்பான காட்சிகளின் மூலம் சலிப்பூட்டாத வகையில் ஒரு படமாகக் கொடுத்திருக்கும் இயக்குநரைப் பாராட்ட வேண்டும்.
மொத்தத்தில், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் காண்பவர்களுக்குக் குஷி தரும் .


