சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே. பாலாஜி , இந்திரன்ஸ், நட்டி, சுவாசிகா , ஷிவதா,ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான் நடித்துள்ளனர்.
ஆர். ஜே. பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.படத்தொகுப்பு ஆர்.கலைவாணன்.
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ,எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ளனர்.
வழக்கறிஞர்கள் நீதிபதிகள் காவல்துறையினர் என மூவர் மீதுள்ள நம்பிக்கையில் தான் நமது நீதிபரிபாலன அமைப்பு இயங்கி வருகிறது. ஆனால் அப்படிப்பட்டவர்கள் அறம் மறந்து செயல்பட்டால் அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும். அப்படி அடாவடி வழக்கறிஞர் பேபி கண்ணன் எனப்படும் ஆர். ஜே.பாலாஜி ஆட்களைச் சேர்த்துக்கொண்டு அந்த நீதிமன்றத்தை ஆட்டி வைக்கிறார். அவர்களிடம் நீதி கிடைக்கும் என்று சிக்கிக் கொண்ட ஏழை மக்கள் படும் பாட்டையும் அதற்கு வழக்கறிஞர் சரவணனான சூர்யா, கருப்புசாமியின் தெய்வ சக்தி மூலம் தீர்வு ஏற்படும் கதையை ஒரு சுவாரசியமான பரபரப்பான வணிக வெற்றிக்குரிய அம்சங்களைக் கொண்ட படமாக உருவாகி இருப்பது தான் 150.47 நிமிடங்கள் கொண்ட ‘கருப்பு’ திரைப்படம்.ஏழைகளின் கடைசிப் புகலிடம் நீதிமன்றம் தான். அங்கேயும் அநீதி கிடைத்தால் மக்கள் என்ன செய்வார்கள்? ஆண்டவனிடம் தான் வருவார்கள். அப்படிஇறைவனிடம் முறையிட்டால் என்ன நடக்கும் என்பதை கருப்புசாமி வழியாக இந்தக் கதை சொல்கிறது.
அடாவடி வழக்கறிஞர் பாலாஜியின் பிடியிலிருந்து நீதிமன்றத்தை மீட்க நீதிபதி, வழக்கறிஞர்கள் கூட்டணியினை உடைத்து நீதிக்குப்பாடுபடும் வழக்கறிஞர் சூர்யா கருப்பு சாமியின் முயற்சியால் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
கேரளாவிலிருந்து இந்திரன்ஸ் தன் மகளுக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்காக நகைகளுடன் ரயிலில் புறப்பட்டு சென்னை வருகிறார். பெரம்பூர் செல்ல வேண்டிய அவர் பேசின் பிரிட்ஜில் இறங்குகிறார்.அவர்களிடம் உள்ளூர் பொறுக்கிகள் வழிப்பறி செய்து கொண்டு ஓடிவிடுகிறார்கள். தந்தையும் மகளும் காவல் நிலையம் சென்று புகார் செய்கின்றனர் . காவல்துறையினர் நடவடிக்கையால் 60 பவுனில் 45 பவுன் தான் மீட்கப்படுகிறது.
ஆனால் அந்த நகைகளை நீதிமன்றம் மூலம்தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று போலீசார் கூறுகிறார்கள். இந்த வழக்கு நீதிமன்றம் செல்கிறது இழுத்தடித்துக் கொண்டே செல்கிறார்கள். அடாவடி வக்கீல் ஆர்.ஜே பாலாஜி கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு வழக்குகளில் தில்லுமுல்லு செய்கிறார். அந்த நேரத்தில் ஒரு தெய்வ சக்தியுடன் வழக்கறிஞராக சூர்யா நுழைகிறார். அவரிடம் உள்ள சக்தி என்ன? அந்த சக்தியை வைத்து சூர்யா என்ன செய்கிறார் என்பது தான் உச்சகட்ட காட்சி
வழக்கறிஞர் சரவணன் பாத்திரத்தில் வருகிறார் சூர்யா.அந்த தாடி வைத்த தோற்றமும் மிடுக்கான உடல் மொழியும் அவருக்கு நன்றாகவே பொருந்துகின்றன.காவல்துறையினர் வழக்கறிஞர்கள் அனைவரும் பணம் ஒன்றையே குறியாக நினைக்கும் போது நியாயத்திற்காக அவர் முன் வரும்போது பார்வையாளர்கள் சிலிர்க்கிறார்கள்.சூர்யாவுக்கு இது நல்லதொரு மறுமலர்ச்சி வெற்றியாக அமையும்.பிற பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தாராளம் காட்டிய சூர்யாவின் நல்லிணக்கத்திற்கும் வெற்றி.
கேரளாவில் இருந்து வந்த தந்தையும் மகளும் நகை மீட்கப்போராடும் காட்சிகளில் அவர்களின் பரிதாப நிலை பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும்.எளிய மக்கள் ஒருவருக்கும் இதுதான் கதி என்று கூற வைக்கிறது.
அவர்களுக்காக சூர்யா திடீரென்று நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி நட்டியிடம் சற்றுக்குரல் உயர்த்தி பேசுவதும் அதுவே நட்டியின் ஆணவத்தைச் சீண்டி வழக்குக்குப் பெரிய சிக்கலாக மாறுவதும் எதிர்பாராத அதிர்ச்சி.
சூர்யாவைப் பொறுத்தவரை அவரே கருப்பு சாமியாக வருவது வியக்க வைக்கிறது. கையில் அரிவாளுடன் அவர் ஆடும் ஆவேச நடனம் ரசிகர்களைக் கூட சாமியாட வைத்து விடும்.
திரிஷா மற்றொரு வழக்கறிஞராக ப்ரீத்தி பாத்திரத்தில் வருகிறார். எளிமையான நடிப்பில் நெஞ்சில் பதிகிறார்.
ஆர்ஜே பாலாஜி இதுவரை நடித்த படங்களில் இருந்து எதிர்மறை நிழல் படிந்த பாத்திரத்தில் வருகிறார். சில இடங்களில் பிரதான வில்லனாகவே எழுந்து நிற்கிறார்.
சூர்யா, திரிஷா, ஆர்ஜே பாலாஜி இந்த மூன்று கதாபாத்திரங்கள்தான் படத்தில் பிரதான பாத்திரங்கள்.அவர்களும் இணையாக பொறுப்பை சுமந்துள்ளார்கள்.
ஆணவம் கொண்ட நீதிபதியாக நட்டி நடித்திருக்கிறார். இப்படிக் கூட நீதிபதி இருப்பாரா என்று எண்ணும் அளவுக்கு நடித்துள்ளார்.ஒரு கட்டத்தில் ஆர்.ஜே பாலாஜி, நட்டி முன் கோர்ட்டில் பொய் சொல்லி வாதாட முற்படும்போது வாய் குழறி உண்மையைச் சத்தமாக பேசுவது அரங்கை சிரிப்பலையில் ஆழ்த்திவிடும்.
கேரளாவில் இருந்து வயதான தந்தையாக மட்டஞ்சேரி சுகுமாரன்பாத்திரத்தில் வரும் இந்திரன்ஸ் குயரமான காட்சிகளில் நெஞ்சைப் பிழிய வைக்கிறார்.அவரது மகளாக சிவதா நோயாளி பெண்ணாக வந்து அனுதாபத்தை அள்ளுகிறார்.இன்னொரு வழக்கறிஞராக சுவாசிகா வருகிறார்.அரசியல்வாதியாக வழக்கம்போல வில்லத்தனம் செய்துள்ளார் வேல ராமமூர்த்தி.
ஒரு சட்டப் போராட்டத்துக்கான கதையாக இருந்தாலும் ஏழைகளுக்கு நீதி கிடைக்க போராடும் திசையில் செல்லும் கதையாக இருந்தாலும் அதில் கருப்பசாமி என்கிற தெய்வ சக்தியை இணைத்து பக்திப் படமாகவும் இல்லாமல் மாயாஜாலப் படமாகவும் இல்லாமல் புதிய ரகத்திலான படமாக இதை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஆர், ஜே.பாலாஜி.
சாய் அபயங்கரின் இசை,கதையைப் புரிந்து பயணம் செய்துள்ளது. குறிப்பாக கருப்பசாமி பாடல் மிரட்டல் ரகம்.
ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவின் கேமரா, சமகாலம் , ஆன்மீகம் என இரு வேறு உலகத்துக்கு ரசிகர்களைக் கொண்டு செல்கிறது.
தொன்மங்களைச் சமகாலத்துடன் இணைக்கும் கதையாக உருவாகிஉள்ள படமாக கருப்பு படத்தைக் கருதலாம்.


