‘கார் மேனி செல்வம்’ திரைப்பட விமர்சனம்

சமுத்திரக்கனி, லட்சுமி பிரியா, சிறுவன் கரன் சக்கரவர்த்தி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், அபிநயா, படவா கோபி, கார்த்திக் குமார், கோதண்டம், மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா, ஜெயந்தி, பேபி கே லயா நடித்துள்ளனர். ராம் சக்ரி எழுதி இயக்கியுள்ளார். யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.மியூசிக்லவ்டு ஸ்டுடியோ அண்ட் டெக்னாலஜி இசையமைத்துள்ளது .ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பு செய்துள்ளனர். தயாரிப்பு: அருண் ரங்கராஜுலு.

இந்த உலகமயமாக்கல் சுழலில் சுழன்று கொண்டு பணத்தைத் துரத்திக் கொண்டு பந்தயத்தில் மூச்சிரைக்க நுரை பொங்க ஓடும் ஒரு பந்தயக் குதிரையின் ஓட்டத்தில் சேர்ந்து கொண்டு ஓடும் ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதன்தான் செல்வம் .எப்படியாவது பணம் சம்பாதித்து மேலே வரவேண்டும் என்று நினைக்கிறான். அவனது போராட்டம் தான் இந்த ’கார்மேனி செல்வம்’ படத்தின் கதை.

ஒரு நெய்தல் நிலப்பகுதியில் சிறிய வீட்டில் வாழ்ந்து வரும் சமுத்திரக்கனி , பணக்காரர் கௌதம் மேனனிடம் கார் டிரைவராக இருக்கிறார். அவரது மனைவி லட்சுமி பிரியா எப்படியாவது பணம் சம்பாதித்து மேலே வர வேண்டும் என்று நினைக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்து மனைவி.அவர்களுக்கு பாலு என்கிற ஒரே மகன்.  தன் பங்குக்காக ஒரு இட்லிக் கடை நடத்தி வரும் லட்சுமி தனது கணவனை ஏதாவது செய்து சம்பாதி சம்பாதி என்று தூண்டிக்கொண்டே இருக்கிறார்.பணம் சம்பாதிப்பது எப்படி என்று பல்வேறு வழியில் முயற்சி செய்கிறார் சமுத்திரக்கனி.

கௌதம் மேனன் வெளிநாடு செல்லவே அவரது காரை மேனனுக்குத் தெரியாமலேயே ட்ராவல்ஸ்ஸில் சேர்த்து சம்பாதித்து வருகிறார் கனி.
சாண் ஏறினால் முழம் சறுக்குவது போல் அவரது வாழ்க்கையில் விதி விளையாடிக் கொண்டே இருக்கிறது. புத்திசாலித்தனமாகவும் தந்திரமாகவும் நினைத்து ஒவ்வொரு வழி தேடிச் சம்பாதித்தாலும் எதிர்பாராத செலவுகள் குடும்பத்தை வாட்டுகின்றன. விளைவு? கடன்களை அடைக்க, கடன் வாங்கிப் பெரிய கடனாளி ஆகிறார் .கழுத்தை நெரிக்கும் கடன் சுமையால வேறு வழியே இல்லை, இவற்றில் இருந்து தப்பிக்க வெளிநாடு செல்வதுதான் ஒரே வழி என்று வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். இரண்டு ஆண்டுகள் சம்பாதித்தால் நலமாக வாழலாம் என்று பலர் அறிவுறுத்தினாலும் ஓராண்டு முடிந்தவுடன் ஊருக்குச் செல்ல நினைக்கிறார். மனைவி,மகனுடன் வாழ வேண்டிய வாழ்க்கையை தவற விடுவதாக உணரும் சமுத்திரக்கனி, ஓராண்டு முடிந்தவுடன் ஊருக்குக் கிளம்புகிறார். ஊர் திரும்பிய அவர் கடன்களை அடைத்தாரா? சுபிட்சமான வாழ்வு அவருக்குக் கிடைத்ததா?கௌதம் மேனனைஅவர் எப்படி எதிர்கொண்டார் ?
அவரது வீடு கட்டுவது என்கிற கனவு நிறைவேறியதா என்பதையெல்லாம் சொல்வது தான் 149.47 ‘கார்மேனி செல்வம் ‘படத்தின் மீதிக் கதை. 

காரை தனது மேனிபோல் நினைத்து நேசிக்கும் ஒரு டிரைவராக செல்வம் பாத்திரத்தில் சமுத்திரக்கனி வருகிறார். படத்தில் அவர் அடக்கி வாசித்திருப்பதே அந்தப் பாத்திரத்திற்கு மிகவும் வலு கூட்டி உள்ளது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வெகுண்டெழுந்து வீரவசனம் பேசாமல் திமிறி எழாமல் பாத்திரத்தின் மீட்டர் தவறாமல் தடம் புரளாமல் நடித்துள்ளது சிறப்பாக உள்ளது .தோல்வியின் நாயகனாக
பல காட்சிகளில் கண் கலங்கவும் வைக்கிறார். அவரது மனைவி சாந்தியாக லட்சுமி பிரியா வருகிறார்.நடுத்தர வர்க்கத்து தம்பதியாக அவர்களது அன்றாட அல்லாட்டங்கள் பார்ப்பவரைக் கலங்க வைக்கும். அப்பா நீ அறிவாளிப்பா என்று அடிக்கடி சொல்லும் மகன் பாலு பாத்திரத்தில் நடித்திருக்கும் கரண் சக்கரவர்த்தி அவன் பங்குக்கு அசத்தியுள்ளான்.இட்லி குண்டான் என்று மனைவியைச் சமுத்திரக்கனி கிண்டல் செய்வதும் ஆளும் மண்டையும் பாரு என்று மனைவி லட்சுமி பிரியா கணவனைக் கிண்டல் செய்வதும் என்று அன்னியோன்யமான பிணைப்பு இருவருக்குள்ளும் உண்டு

பெருந்தன்மையான எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளும் அந்த பணக்காரர் சம்பத்தாக  வரும் கௌதம் மேனன் பார்ப்பவர்களை வசீகரிக்கிறார் .அவரது மனைவி தேவியாக வரும் அபிநயாவும் பெருந்தன்மைக்குச் சொந்தக்காரராக வருகிறார்.இறுதியில்
அவருக்கு ஏற்படும் நிலைமை கலங்க வைக்கிறது.சிறுமி லயா,துர்காவாக வந்து மனதில் பதிகிறாள் .படத்தில் வரும் படவா கோபி, ரியல் எஸ்டேட் புரோக்கராக வரும் கோதண்டம் போன்றவர்கள் அவரவர் பங்குக்குப் படத்திற்கு வலு சேர்த்து உள்ளார்கள்.

ஒரு கதையை வணிக ரீதியிலான திரைப்படமாக  வெளிப்படுத்துவது வேறு, கதைக்கு நியாயம் செய்யும் வகையில் படமாக உருவாக்குவது வேறு. இதில் இரண்டாவது ரகமாக இந்த படத்தைச் சொல்லலாம். எனவே மிகை இல்லாத பாத்திரங்கள் இயல்பான தருணங்கள் என்று பார்ப்பவரைக் கட்டிப் போடுகின்றன காட்சிகள். ஒரு நல்லதொரு உணர்வை வெளிப்படுத்தும் திரைப்படமாக கார்மேனி செல்வம் உருவாகி இருக்கிறது .

பார்ப்பவர்கள்  படத்துடன் பாத்திரங்களுடன் பாத்திரங்கள் சந்திக்கும் தருணங்களுடன் தங்களைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் ஒரு திரைப்படமாக நம்மை நானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும்படியான அனுபவமாகவும் அதற்கான காட்சிகள் கொண்டதாகவும் இந்தப் படம் அமைந்திருக்கிறது.அவ்வகையில் நல்ல உணர்வுகளைச் சித்தரித்துள்ள படம் என்று கூறலாம்.