டாக்ஸிக் என்றால் விஷத்தன்மை என்று பொருள். விஷமும் கசப்பும் இருண்மையும் கொண்ட மனிதர்களின் கதை தான் இந்த ‘டாக்ஸிக்’.
1947 காலகட்டத்தில் தொடங்குகிறது கதை. கோவாவுக்கு போர்ச்சுக்கீசியர் ஆதிக்கத்துக்கு வந்த காலச்சூழலில் சம்பவங்கள் நடக்கின்றன.கோவா பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாஃபியாக்களின் மோதலில் இப்படக்கதை தொடங்குகிறது. மாபியாக்கள் மோதலில் அறத்துக்கிடமில்லை. எனவே ஆளாளுக்குப் போட்டுத் தள்ளுகிறார்கள்.
நம் நாயகன் யாஷும் அவரது அக்கா நயன்தாராவும் சிதிலமடைந்த வாழ்க்கையில் இருந்து வளர்ந்து வருபவர்கள். அவர்களது முன் கதை இருண்மை கொண்டது. தன் தம்பியை ஆதிக்க சக்தியாக வளர்ந்தவனாக பார்க்க வேண்டும் என்பதற்காக வளர்த்து வருகிறார் நயன்.அலட்சியமான உயிர்ப் பயமறியாத மனோபாவம் கொண்ட துடிப்பான முரட்டுத்தனம் மிக்க இளைஞரான நாயகன் யாஷ் மற்றும் அவரது சகோதரி நயன்தாரா இருவரும் இணைந்து தங்களது எதிரிகளை போட்டுத் தள்ளுகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பல கொடூர சம்பவங்கள் நடக்கின்றன நயன்தாரா சுடப்படுகிறார் .யாஷுக்குப் பல்வேறு ஜோடிகள் காதலிகள் பிள்ளைகள் என்று செல்கிறது கதை. ஒவ்வொரு நாளும் ஆபத்துகளும் மர்மங்களும் பரவசங்களும் சாகசங்களும் ஆகச் செல்கிற யாஷின் வாழ்க்கையின் முடிவு என்ன என்பதுதான் 194.12 நிமிடங்கள் கொண்ட ‘டாக்ஸிக்’ படத்தின் மீதிக் கதை.
‘கே.ஜி.எப்’ என்கிற திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியின் மூலம் தென்னகத் திரையுலகில் தனக்கான ஒரு நாற்காலியைத் தயாரித்துக் கொண்டு அமர்ந்திருப்பவர் யாஷ்.
அவரது கதை கூறும் முறையும் திரைப்பட உருவாக்கமும் ரசிகர்களிடம் ஒரு தனிக் கவனிப்பு பெற்றது என்பது உண்மைதான் .ஆனால் தனது படத்திற்கான எதிர்பார்ப்பைப் பிரமாண்டம் மற்றும் அதீத வன்முறைக் காட்சிகளின் மூலமாக பூர்த்தி செய்து விடலாம், என்று நினைத்துச் செயல்பட்டு இருக்கிறார். அது தவறான முடிவு என்பது படத்தின் போக்கில் தெரிகிறது.
ராயா மற்றும் டிக்கெட் என்ற அப்பா-மகன் வேடங்களில் நடித்திருக்கும் யாஷ், விதவிதமான உடைகளில் பவனி வருகிறார். எப்போதும் மது மாது என்று இருக்கிறார். இடையிடையே கண் இமைக்கும் நேரத்தில் தலை, கை, கால்களை வெட்டித்தள்ளுகிறார். இல்லையேல் சுட்டுத் தள்ளுகிறார்.வன்முறையும், ஆபாசமும் நிறைந்த ஒரு வாழ்க்கையைக் கண் முன் காட்டி வாழ்கிறார். அப்பா, மகன் இருவரும் இவ் விஷயத்தில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது காட்சிகளில் தெரிகிறது. படம் முழுக்க நடை உடை கொலை மது மாது என்று தான் செல்கிற யாஷ், கிளைமாக்ஸுக்கு முன்பு சிறிது நடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அங்கேயும் வன்முறை ஆதிக்கம் செலுத்துவதால் யாஷ் என்ற நடிகர் பலவீனப்பட்டுக் காணாமல் போய் விடுகிறார்.
யாஷின் சகோதரியாக வருகிறார் நயன்தாரா. ஆரம்பத்தில் சில அதிரடியான காட்சிகளில் அமர்க்களமாக நுழைகிறார். ஆனாலும் என்ன? போகப்போக அந்தப் பாத்திரத்திற்கு அழுத்தம் இல்லாமல் போய்விடுகிறது.
யாஷின் முதல் மனைவியாக வரும் கியாரா அத்வானி, இரண்டாவது மனைவியாக வரும் ருக்மணி வசந்த், காதலியாக வரும் தாரா சுதாரியா, எதிர்மறை வேடத்தில் வரும் ஹுமா குரேஷி என நாயகிகள் திரையை நிறைக்கிறார்கள்.இருப்பினும் அவர்களின் நடிப்பை விட அவர்களின் நடையுடை தோற்றமே கவனம் ஈர்க்கிறது.
அப்பா மகன் பாசம் ,அம்மா மகன் பாசம் ,தந்தையைப் பிரிந்த மகனின் துயரம், காதலியிடம் நம்பிக்கை, எதிரியின் நம்பிக்கைத் துரோகம் போன்ற பிற உணர்ச்சிகளையும் அழகாக வெளிப்படுத்தி இருக்க வேண்டிய வாய்ப்பு இருந்தும் இயக்குநர் அதைச் சரியாக செய்யவில்லை.
ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, காட்சித் தொழில்நுட்ப அசத்தல்களுக்கு இடம் அளிக்கும் வகையில் ஒளிப்பதிவு செய்து படத்தைப் பிரமாண்டமாகக் காட்டியிருக்கிறார்.
1947 முதல் கால் நூற்றாண்டு காலக்கட்டப் பயணத்தில் பின்புலங்கள் அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள் பிரமிப்பூட்டுகின்றன.
ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி ஆகியோரது இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் ஆக்ஷன் காட்சிகள் தெறிக்கின்றன.
படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்னி, அவ்வப்போது விரியும் கிளைக்கதைகளை முடிந்தவரை கோர்த்துள்ளார்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் கதை சொல்வது தந்தையா ? மகனா ? என்று புரியாமல் குழம்ப நேரிடுகிறது.
யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதையை உருவாக்கி இருக்கிறார்கள் அதனால் தானோ என்னவோ ஒரு கட்டத்தில் கதை இரண்டுங் கெட்டானாகத் தவிக்கிறது.கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிரமாண்டத்திற்கும், ஆக்ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது இந்தத் திரைப்படத்திற்கே மிகப்பெரிய பலவீனமாக வந்துவிட்டது .
இயக்குநர் கீது மோகன்தாஸ், கதை என்னவாக இருந்தாலும், ஹாலிவுட் பாணியில் அதை காட்சிப்படுத்த வேண்டும் என்று முயன்றி இருக்கிறார் படம் பார்வையாளர்களுக்குப் புரியும் மொழியில் இருக்க வேண்டும். நிறைய அந்நிய மொழி வசனங்கள் பெரிய தடையாக இருக்கிறது.படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை வன்முறைக் காட்சிகளும், ஆபாசக் காட்சிகளும் அதிகம் வருகின்றன.
சரியான கதை என்கிறஅடித்தளமற்ற பிரமாண்ட மாளிகையாக இந்த ‘டாக்ஸிக்’ திரைப்படம் அமைந்திருக்கிறது.


