‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள் ‘ திரைப்பட விமர்சனம்

ஃபஹத் ஃபாசில் ,சாரா பாலேகர்,மகேஷ் மஞ்ச்ரேகர்,சௌரப் சச்தேவா ,வெங்கடேஷ் காகுமானு,சுப்பராஜு ,திவ்யா பிள்ளை, எஸ். ஷஷாங்க் ,நடித்துள்ளனர்.ஷஷாங்க் யேலேட்டி எழுதி இயக்கி உள்ளார்.இசை – கால பைரவா,ஒளிப்பதிவு – பிராட் பிரான்சிஸ் ,ஆடை வடிவமைப்பு – ரமா ராஜமௌலி,படத்தொகுப்பு – பிரவீன் ஆண்டனி,திரைக்கதை மேம்பாடு – எஸ். எஸ். காஞ்சி,கலை இயக்குநர்கள் – மோகன் நாத் பிங்கி, சந்தீப் சுவர்ணா.

எஸ். எஸ். ராஜமௌலி வழங்கியுள்ள இந்தப் படத்தை ஆர்கா மீடியா வொர்க்ஸ், ஷோயிங் பிசினஸ் சார்பில் ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி, எஸ். எஸ். கார்த்திகேயா தயாரித்துள்ளனர்.

சூரி என்ற பெயர் கொண்ட ஃபகத் ஃபாஸில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிறார்.எந்த அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் என்றாலும் நேரத்துக்கு கொண்டு போய் விட்டு விடுகிற அளவிற்கு அதில் பெயர் பெற்றவர். பந்தயம் கட்டுவது மோசடி செய்வது என்று அவர் எப்போதும் பணத்தைத் தூரத்திக் கொண்டு ஓடுபவர். அதற்காக சின்ன சின்ன தில்லுமுல்லுகள் செய்பவர்.அப்படி ஒரு சிறிய மோசடியில் உள்ளூர் தாதாவான அஸ்லாம் பாயிடம் சிக்கிக் கொள்கிறார். மிகவும் கொடூரமான குணம் கொண்ட அவரோ இரண்டு நாளில் 25 லட்சம் கொடுக்க வேண்டும் என்று சூரிக்குக் கெடு விதிக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் சூரி ,திவ்யா என்ற சிறுமியைச் சந்திக்கிறார்.திவ்யாவோ சூரியிடம் மேஜிக் திறமை இருப்பதாக நம்புகிறார் அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைகிறது.ஆனால் திவ்யாவிடம் சூப்பர் நேச்சுரல் சக்தி இருக்கிறது.அதன் வலிமை அவளுக்கே தெரியாது . அந்த சக்தியால் ஒவ்வொரு முறையும் சூரியை ஆபத்தில்  இருந்தும் அபாயத்திலிருந்தும் காப்பாற்றுகிறாள் சிறுமி.இதனால் இருவருக்குள்ளும் நல்ல அன்பு பரிமாற்றம் நடக்கிறது.அதை வைத்துக்கொண்டு அந்த சக்தியை தனதாக்கிக் கொண்டு பயன்படுத்தி, தனது பணத் தேவையை நிறைவேற்ற முடிவு செய்கிறார்.திவ்யா தனது பெற்றோரைப் பார்க்க வேண்டும் என்று தவிக்கிறாள்.தான் அவளது பெற்றோரிடம் கொண்டு சேர்ப்பதாக உறுதி கொடுக்கிறார் சூரி. இப்படிப்பட்ட நிலையில் திவ்யாவின் பெற்றோரை சூரி தேடும் போது ,விபத்தில் சிக்கிய நிலையில் அவளது பெற்றோரை ஒரு மலை அடிப் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கிறார் .அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் 158.45 நிமிடங்கள் கொண்டஇந்த ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள் ‘ படத்தின்
மீதிக் கதை.

ஃபஹத் ஃபாசில்  சூரி பாத்திரத்தில் வருகிறார்.அவருக்கான ஜோடியோ சொந்த பந்தங்களோ இல்லாமல் தனியாக இருக்கிறார். இருந்தாலும் ஒரு நபர் ராணுவமாக அவர் தனது பாத்திரத்தைத் தக்க வைத்துக் கொண்டு கடைசி வரை அதைக் காப்பாற்றி பார்ப்பவர்கள் மனதில் இடம் பிடிக்கிறார் .ஆம்புலன்ஸ் டிரைவராக வரும் அவர், போக்குவரத்து நெருக்கடிகளை லாவகமாகவும் அதிரடியாகவும் கையாண்டு எப்படி நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கிறார் என்பதை சாகசக் காட்சிகளாக ஆக்கியிருக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் இந்தப் படம் ஆக்சன் படம் போல் தோன்றினாலும் திவ்யா வந்த பிறகு படம் ஒரு தேவதை கதைக்குள் நுழைந்தது போல் உணர்வைத் தருகிறது. இந்தப் படத்திலும் வில்லன்கள் உண்டு. ஃபஹத் ஃபாசிலை அவர்கள் துன்புறுத்தும் போது திவ்யா ஒவ்வொரு முறையும் வந்து தனது மாய சக்தியால் காப்பாற்றுகிறாள். கூடவே அவளது நாய் ஸ்னூப்பியும் ஒரு கதாபாத்திரம் போலவே வந்து பல்வேறு செயல்களைச் செய்து பார்ப்போர் மனதில் இடம் பிடிக்கிறது .

மாய சக்தி கொண்ட பெண்ணாக திவ்யாவாக வரும் சாரா ,படத்தில் ஒரு தேவதையை போலவே தோன்றுகிறார். அவர் வரும் காட்சிகளில் ஒளிவட்டம் ஒளிர டக்கென்று நாம் தேவதை உலகிற்குள் நுழைந்து விடுகிறோம். ஒவ்வொரு முறையும் ஃபஹத் ஃபாசிலை தனது நண்பரைப் போல் விசுவாசமாக இருந்து காப்பாற்றுகிறார்.அவ்வகையில் சாரா படம் பார்ப்பவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறார்.

சில ஆக்ஷன் காட்சிகள் மாய தந்திர காட்சிகள் என்று செல்கிற கதை இரண்டாவது பாதியில் சாராவின் பெற்றோரைக் கண்டுபிடிப்பதற்காக ஃபஹத் ஃபாசில்  செய்யும் சாகசங்களில் நம்மை உறைய வைத்து உட்கார வைத்து விடுகிறார்கள்.

படத்தின் ஒளிப்பதிவும் இசையும் நம்மை வண்ணமயமான ரம்ய உலகத்திற்குள் ஆழ்த்தி விடுகின்றன.
சாரா தோன்றும் போது வருகிற மாய ஜாலக் காட்சிகள் கண்களுக்கு விருந்தாகும். அந்தக் காட்சிகளில் தெரிகிற தொழில்நுட்ப நேர்த்தி வியக்க வைக்கிறது.நல்லதொரு காட்சி இன்பத்தையும் தருகிறது.

இப்படிப் படம் பல்வேறு அடுக்குகளில் விரிந்து நம்மை வியப்பிலாழ்த்துகிறது. இந்தப் படம் குழந்தைகளுக்கு எடுக்கப்பட்டது போல் தோன்றினாலும் அனைவரும் பார்க்கும் படியாக உருவாகி இருக்கிறது.

ஆகவே  நல்லதொரு விடுமுறை விருந்தாக இந்த’டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள் படம் மாறி இருக்கிறது.