ஜினிமா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் ராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில், ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பட புகழ் பவிஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘லவ் ஓ லவ்’. இதில் நாயகியாக அறிமுக நடிகை நாகதுர்கா நடித்திருக்கிறார். இவர்களுடன் வனிதா விஜயகுமார், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஃபாக்ஸ்ன் என்ற பெயரில் வெயின் பவி மற்றும் பிரதீப்.பி.ஜே இணைந்து இசையமைத்துள்ளனர். என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்ய, சண்டைக்காட்சிகளை அபிஷேக் ஸ்ரீனிவாஸ் வடிவமைத்துள்ளார்.
வரும் ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா , சென்னை, கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தினேஷ் பேசுகையில், “தனஞ்செயன் சாருடன் சேர்ந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. கடந்த 21/2 ஆண்டு காலமாக தூக்கமில்லாமல் ஆத்மார்த்தமாக உழைத்திருக்கிறார். நீண்ட நாட்களாக சரியான நாயகனை தேடி பவிஷ் கிடைத்தார். நாயகி தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். யூடியூப்-ல் நடனம் மூலம் பிரபலமானவர். இசையமைப்பாளருக்கு இது முதல் படம். ஆனால், பரிமளா & கோ முதலில் வெளியாகி விட்டது. இப்படத்தின் கதை அனைவருக்கும் நெருக்கமாக இருக்கும். கருத்து சொல்ல கூடிய படமாகவும் அதே சமயம் நகைச்சுவையுடனும் இருக்கும்.” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “சிறிய அரங்கில் பார்ப்பதை விட கமலா போன்ற பெரிய திரையில் பார்க்கும் போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. திங்க் மியூசிக் அவர்களுக்கும் நன்றி. ஒரு படைப்பு என்பது கூட்டு முயற்சி. அதற்கு திங்க் மியூசிக் மிகவும் உறுதுணையாக இருந்தது. இப்படம் விரைவாக வெளியாக அமேசான் தான் காரணம். அவர்களின் அழுத்தத்தால் ஜூலை 10 அன்று வெளியாக இரவு பகலாக வேலை நடந்து கொண்டிருக்கிறது.
நல்ல திரைப்படங்களை மக்கள் கொண்டாட தவறியதே இல்லை. அதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் நூறு சாமி படம் தான். சசி சார் 10 படங்கள் தான் கொடுத்திருக்குறீர்கள், இன்னும் 100 படம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். நூறு சாமி படம் இந்த வருடத்தின் சிறந்த படமாக பேசுப்படும்.இந்த படத்திற்கு பிறகு வனிதா பெரிய வலம் வருவார். நடிகை நாக துர்கா யூடியூப்-ஐ நிறுத்தி விடுங்கள். சுபராசு சார் பணத்தில் எந்த சமரசமும் இல்லாமல் இந்த படத்தை வெளியே கொண்டு வரோம் என்று முன் பணம் கொடுத்தார்.
ஆரம்ப காலத்தில் தனுஷ் சாரை பார்த்தது போல பவேஷை பார்த்ததும் தோன்றியது. இன்னும் 2 படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பெரிய நாயகனாக வருவார். ஆனால் தொடர்ந்து வெற்றி பெற வேண்டுமென்றால் இதே பணிவோடு இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.” என்றார்.
தயாரிப்பாளர் தாணு பேசுகையில், ”20 கோடி செலவாகும் பட்ஜெட்டை 10 கோடியாக்கும் தனஞ்செயனுடன் கூட்டு வைத்திருக்கிறீர்கள். காதல் எப்போதும் மாறாது, அந்த காதலை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள்.” என்றார்.
நடிகர் சித்ரா லட்சுமணன் பேசுகையில், “தனஞ்செயன் பவிஷை பார்த்து எவ்வளவு வேண்டுமானாலும் சம்பளம் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். நாக துர்காவிடம் யூடியூப் பக்கம் போகாதீர்கள் என்றார். அதை கேட்காதீர்கள். அது தான் உங்களை இந்த இடத்தில் உட்கார வைத்திருக்கிறது. கஸ்தூரி ராஜா பேரனை நாயகனாக்கி விட்டார். பவிஷ் காதல் காட்சிகளிலும் உணர்வு பூர்வமான காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.” என்றார்.
தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் பேசுகையில், “பாடலாக இருந்தாலும் பின்னணி இசையாக இருந்தாலும் எந்த இடத்தில் என்ன மாதிரியான பாதிப்பு கொடுத்தால் படம் வெற்றியாகும் என்பதை தெரிந்து கொண்டு இசையமைத்திருக்கும் Wayne Pavey, Pradeep PJ, FOXn இருவருக்கும் பாராட்டுகள்.” என்றார்.
இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசுகையில், “புதிதாக வருபவர்களுக்கு பல விஷயங்கள் தெரிவதில்லை. ஆனால், விஷயம் தெரிந்த தனஞ்செயனை தேர்ந்தெடுத்து உடன் வைத்திருக்குறீர்கள். அவர் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகளையும் கூறுவார். இந்த படத்தின் ட்ரைலர் பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். யார் இந்த பையன் பிரமாதமாக நடித்திருக்கிறான் என்று கேட்டேன். கஸ்தூரி ராஜா பேரன் என்று தெரிந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு மகனை இயக்கு நராகவும், இன்னொரு மகனை நடிகராகவும் உருவாக்கியுள்ளார் கஸ்தூரி ராஜா. தன்னுடைய பெரியப்பாவிற்கு பவிஷ் நல்ல பெயர் வாங்கி கொடுக்க வேண்டும்.” என்றார்.
இசையமைப்பாளர் தீனா பேசுகையில், “6 நாட்கள் கோவாவில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கு இந்த படத்தை பற்றி தனஞ்செயனும் இயக்குனர் சசியும் கூறினார்கள். 23 வருடத்திற்கு முன்பு திருடா திருடி படத்தில் தனுஷை பார்த்தது போல இன்று பவேஷை பார்க்கிறேன். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள்.” என்றார்.
இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசுகையில், “பவிஷ் அம்மா இன்று வர இயவில்லை, அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். தனுஷின் பிரதி தான் பவேஷ். உன்னுடைய இயக்குனரோ தயாரிப்பாளரோ அவர்கள் சொன்ன நேரத்திற்கு சென்று விடு என்று தனுஷிடம் கூறினேன். இன்று வரை அதை பின்பற்றி கொண்டிருக்கிறார். அதே போல் பவேஷ் தன்னை தானே வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் நான் யாருக்கும் அறிவுரை சொல்வது கிடையாது.என்னுடைய வீட்டில் பவிஷ் ஸ்பெஷல், என் மனைவிக்கு செல்வராகவன் ஸ்பெஷல். எனக்கு பவிஷ் அம்மா ஸ்பெஷல். 3 பாடல்களிலேயே வியக்க வைத்து விட்டான் பவிஷ். தயாரிப்பாளர் மற்றும் தனஞ்செயன் இருவரும் பவிஷ் பற்றி பெருமையாக சொல்கிறார்கள்.” என்றார்.
இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், ”ரோஜாவை அறிமுகப்படுத்தியது செல்வமணி என்பது மாறி ரோஜாவின் ராஜா செல்வமணி என்ற பெயர் வந்துவிட்டது. அது தான் நடிகருக்கு இருக்கும் சிறப்பு. லவ் ஓ லவ் பெயருக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த கதையை 1 1/2 மணி நேரம் கதை கூறினார். கேட்கும் போது நேரில் பார்ப்பது போல் இருந்தது.தனஞ்செயன் வாயால் நல்ல பெயர் எடுப்பது கஷ்டம். அதை இந்த படத்தின் இயக்குனர் மகேஷ் வாங்கியிருக்கிறார். அன்று படம் வெளியாவது தயாரிப்பாளர் கட்டுப்பாட்டில் இருந்தது, பிறகு நடிகரிடம் இருந்தது. இப்போது ஓடிடி -யிடம் இருக்கிறது. இங்கு இருக்கும் ஓடிடி அலுவலகம் மும்பையில் இருக்கிறது.
200 படங்கள் இலவசமாக கொடுத்தால் கூட வாங்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. வாரந்தோறும் 50 படங்களாவது ஓடிடியில் வெளியானால் நன்றாக இருக்கும். ரஜினியிடம் இருக்கும் தன்னம்பிக்கை முதல் படத்திலேயே தனுஷுக்கு இருந்தது. அதே நம்பிக்கை இன்று பவிஷிடம் பார்க்க முடிகிறது.” என்றார்.
சுப்பிரமணிய சிவா பேசுகையில், “செல்வமணி அண்ணன் பேசியது ரொம்ப முக்கியமானது. பவிஷ் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். கருப்பண்ண சாமி மூலம் தாத்தா எப்படி வெற்றி அடைந்தாரோ அதே போல பவிஷ் வர வேண்டும். எல்லா காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.
எம் ஜி ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ் வரிசையில் பவிஷ் இடம் பெறுவார். ஆனால், அவருக்கு இணையாக யார் வருவார் என்று தெரியவில்லை.” என்றார்.
இயக்குநரும் தயாரிப்பாளருமான லக்ஷ்மணன் பேசுகையில், “6 வருடங்களுக்கு முன்பே இந்த கதையை மகேஷ் கூறும் போது இந்த படம் நிச்சயம் வெற்றியடையும் என்று கூறினேன். மகேஷ் மற்றும் பவிஷ் இருவரும் அழகாக இருக்கிறீர்கள்.” என்றார்.
இசையமைப்பாளர்கள் ஃபாக்ஸ்ன் பேசுகையில், “இந்த வாய்ப்பை கொடுத்த தனஞ்செயன் சார், மகேஷ் மற்றும் அனைவருக்கும் நன்றி. இந்த படத்தின் பாடல்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்.” என்றார்.
நடிகை நாக துர்கா பேசுகையில், “டீஸருக்கு நீங்க கொடுத்த ஆதரவிற்கு நன்றி. அதே போல படத்திற்கும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.
நடிகர் பவிஷ் பேசுகையில், “எந்த மேடையாக இருந்தாலும், எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்வேன். தனஞ்செயன் மற்றும் தினேஷ் சாருக்கு நன்றி. மகேஷ் சார் கதை கூறுவதில் சிறந்தவர்.
பிரதீப் மற்றும் இருவரும் சேர்ந்து பாக்சன் என்ற பெயரில் இசையமைத்திருக்கிறார்கள். சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். நாக துர்கா பயிற்சி இல்லாமல் பார்த்ததுமே நடனம் ஆடி வியக்க வைத்தார். சண்டை பயிற்சி இயக்குனர் என்னுடைய பணியை எளிமையாக்கினார்.” என்றார்.
நடிகர் அஜய் திஷான் பேசுகையில், “லவ் ஓ லவ் ட்ரைலர் நன்றாக வந்துருக்கிறது. பவிஷ், நாக துர்கா, நன்றாக நடித்திருக்கிறார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.
இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் பேசுகையில், “இங்கு வந்த அனைவருக்கும் நன்றி. 1 1/2 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்ற முடியுமென்றால் கடவுளால் தான் முடியும். அந்த வகையில் தனஞ்செயன் சாருக்கும், தினேஷ் சாருக்கும் நன்றி.
கலை இயக்குனர் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். நாக துர்கா நன்றாக நடித்திருந்தீர்கள். சசி சார் நூறு சாமி என்ற சிறப்பான படைப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. கடவுளுக்கு நன்றி.” என்றார்.
நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், “நான் சினிமாவை விட்டு சென்ற பிறகும் மீண்டும் என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். என்னுடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். எனக்கும் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. இன்றைய காலத்திற்கு தேவையான தலைப்பு லவ் ஓ லவ். அனைவரும் திரையரங்கம் சென்று பாருங்கள். நேர்மையான விமர்சனம் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.


