‘மகுடம்’ திரைப்பட விமர்சனம்

விஷால், அஞ்சலி, துஷாரா விஜயன் ,ஜான் விஜய், வம்சி கிருஷ்ணா, தம்பிராமையா, ஜெயபிரகாஷ் ,யோகி பாபு, ஜாவா சுந்தரேசன், அர்ஜய், அபு சலீம் ,சரவண சுப்பையா நடித்துள்ளனர்.

எழுதி இயக்கியிருக்கிறார் நடிகர் விஷால். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம் நாதன், அபிநந்தன் ராமானுஜன், ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.என் பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளன.

இப்படத்தில் விஷால் தந்தை மகன் என்று லிங்கா, கிருபாகரன் என்கிற இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஒரு நிழல் உலகத் தலைவனாக விசாகப்பட்டினத் துறைமுகத்தில் கொடி கட்டிப் பறக்கும் லிங்கா அதிரடி அடாவடி செய்தாலும் உள்ளுக்குள் நல்ல உள்ளம் கொண்டவன். அதனால் அவனுக்குக் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் பலரும் பகைவர்களாக மாறுகிறார்கள். வன்முறையும் வேண்டாம் அதனால் வருகிற வசதியும் வேண்டாம் என்று லிங்காவின் மகன் கிருபாகரன் தந்தை கண்ணில் படாமல் வசித்து வருகிறான்.அவனது மனைவி ஜமுனா ஆண் -பெண் என இரு குழந்தைகள் என்று மருத்துவப் பிரதிநிதியாக வேலை பார்த்துக் கொண்டு நடுத்தர வர்க்கத்து வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.அப்படிப்பட்டவனுக்குப் புதிதாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. இரண்டாவது கை பரிமாறிய ஒரு காரை அவன் வாங்குகிறான். அதனால் அவனைப் பார்த்துவிட்ட லிங்காவின் எதிரிகள் ஒரு துப்பாக்கிச் சூட்டில் அவனது மனைவி ,மகளைக் கொன்று விடுகின்றனர். கிருபாகரன் தன் மகனுடன் ஓடித் தப்பிக்கிறான். தனது தந்தையின் வன்முறைப் பாதையே வேண்டாம் என்று விலகி இருக்கும் போது அவரது பாவத்தின் எச்சத்தால் இப்படி ஒரு கொடூரம் நேர்ந்ததை எண்ணி கலங்குகிறான்.இதற்குப் பிறகு அவனது தந்தையை மேலும் வெறுக்கிறான இப்படிப்பட்ட சூழலில் அவனது தந்தையின் ஆ ட்கள் அவனது மனைவியின் இறுதிக் காரியத்தின் போது வருகிறார்கள். இவன் அவர்களை வெறுத்து , நெருங்கக் கூடாது என்று சொல்கிறான்.அவர்கள் மூலம் லிங்கா, கிருபா மீது பாசத்துடன் இருப்பதையும் கிருபாவின் அம்மா எதிரிகளால் கொல்லப்பட்டு இறந்த கதையையும் அறிந்து கொள்கிறான்.தனது தந்தையைக் கடைசியில் பார்க்க அவன் விரும்புகிறபோது தந்தை லிங்கா உயிருடன் இல்லை.
இதற்கிடையில் என்ன நடந்தது என்பதுதான் 185.28 நிமிடங்கள் கொண்ட ‘மகுடம்’ படத்தின் மீதிக் கதை.

இப்படத்தில் லிங்கா, கிருபாகரன் என்கிற கிருபா என இரண்டு பாத்திரங்களில் அப்பா மகனாக வெவ்வேறு தோற்றங்களில் விஷால் தோன்றியிருக்கிறார். விறைப்பாக நின்று வசனம் பேசி எதிரிகளைப் பந்தாடும் அப்பா பாத்திரம் தனியே தெரிகிறது. அதே பாத்திரம் இளமைத் தோற்றத்தில் முறுக்கு மீசையுடன் அஞ்சலியிடம் வழிந்து வழிந்து காதலைச் சொல்லத் தயங்கும் போதும் பல சித்து விளையாட்டுகள் விளையாடி அது தோல்வியில் முடிந்து அஞ்சலியிடம் அவமானப்படும்போதும் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் போதும் என காட்சிகளில் கலகலப்பூட்டுகிறார்.நரைத்ததாடி உடன் இரண்டாம் பாதி படத்தில் அவர் சண்டையிடும் போது ஆக்ஷனில் விஸ்வரூபம் எடுக்கிறார்.

ஒரு நடுத்தர வர்க்கத்தை குடும்பத் தலைவனாக கிருபாகரன் பாத்திரத்தில் வருகிற விஷால் வேறு மாதிரியாக இருக்கிறார். பாந்தமான தோற்றம் பதவிசான குணம் என்று வருகிறார்.இரண்டு பேரும் இரண்டு விதமான சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளனர்.
குறிப்பாகத் தந்தை பாத்திரம் போடும் சண்டைக் காட்சிகள் வீரியமாக இருக்கின்றன.

இப்படத்தில் அப்பா விஷாலின் ஜோடியாக அஞ்சலி வருகிறார். அந்த மீன்காரப் பெண்மணி அன்னபூரணிபாத்திரத்தில் துடுக்குத்தனமாகப் பேசும் போதும் தன் காதலை விஷால் இடம் வெளிப்படுத்தும் போதும் முகபாவனைகளில் கவர்கிறார்.அனாயாசமாகத்  தலைக்கு மேல் காலைத்தூக்கிச் சண்டை போடும் போது அதிர வைக்கிறார்.

மகன் விஷால் கிருபாவின் மனைவியாக வரும் துஷாரா விஐயன் ,சில காட்சிகளில் வந்தாலும் அந்த நடுத்தர வர்க்கத்து மனைவியாகப் பாந்தமாகப் பொருந்துகிறார்.லிங்காவின் நெருங்கிய நண்பனாக வரும் ஜான் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் வந்து தனது பாத்திரத்தைப் பதிய வைக்கிறார். மகன் விஷாலின் மாமனாராக வருகிற தம்பி ராமையா, தனது மீட்டர் தாண்டிய நடிப்பால் தனது இருப்பைத் தக்க வைக்கிறார்.

படத்தில் ஹீரோ விஷால் என்றாலும் அவரே அனைத்து சண்டை காட்சிகளிலும் தோன்றாமல் பிரதானமான சண்டைக்காட்சிகளில் பெண்களை ஆயுதம் ஏந்த வைத்து, குறிப்பாக எளிய மக்கள் கையில் கத்தி கொடுத்துச் சண்டை போட வைத்துள்ளார்கள்.அதற்குத் திரையரங்கில் ஆரவாரமான பாராட்டு கிடைக்கும்.

இரண்டாவது பாதியில் சண்டைக் காட்சிகளின் நீளத்தைக் குறைத்து இருக்கலாம் .படத்தை மேலும் இறுக்கமாகத் தொகுத்து இருந்தால் மேலும் விறுவிறுப்பாக மாறி இருக்கும். 

பொதுவாகப் படங்களில் துறைமுகங்களைக் காட்டினால் போதை மருந்து கடத்தல் என்று தான் காட்டுவார்கள் . இதில் போலி மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் கடத்தப்படுவதைக் காட்டி அதனால் நாட்டில் ஏற்படும் விபத்துகளைக் கூறி எச்சரித்துள்ளார்கள்.

பொருத்தமான இடங்களில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தி இருப்பது ரசிக்க வைக்கிறது. குறிப்பாகப் பெரிய சண்டைக் காட்சிகளிலேயே இளையராஜாவின் பாடலைப் பின்னணி இசையாக ஒலிக்க விட்டுள்ளார்கள். உச்சகட்டமாக நடைபெறும் சண்டை காட்சியில் லிங்காவைச் சுற்றி அத்தனை துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கும் போது அவன் உயிருடன் இருந்து சண்டை போடுவதாகக் காட்டுவது கொஞ்சம் டூ மச் தான்.

படத்தின் ஒளிப்பதிவும் இசையும் இயக்குநர் கூறிய பாதையில் பயணித்துள்ளன.பல மொழிகளைக் குறிவைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதால் அதற்கான பிரம்மாண்டங்களைக்  காட்சிகளில் காட்டி உள்ளார்கள்.

தந்தைக்குப் பிறகு தந்தையின் வன்முறை மகுடத்தை ஏற்காத மகனின் கதை இது.ஆக்ஷன் பட ரசிகர்களுக்குப் பிடிக்கும்.