காதல் கடிதங்கள் வழியே பயணித்து, ஒலிநாடாக்களில் வாழ்ந்த காலம் ஒன்றிருந்தது. அன்புக்குரியவர்களுக்கு நொடிகளில் செய்திகள் சென்றடைவதற்கும், கையடக்க சாதனங்களில் ஒரு ஐகானைத் தொட்டவுடன் குரல்களைக் கேட்பதற்கும் முன்பு, காதலுக்குத் தனக்கென ஒரு இசை இருந்தது. அது கையெழுத்துக் கடிதங்களிலும், ஒலிநாடாக்களிலும் வாழ்ந்தது; தொலைதூரம் பயணித்துக்கொண்டே தொலைபேசி அழைப்புகளுக்காகப் பொறுமையாகக் காத்திருப்பதையும் உள்ளடக்கியிருந்தது. பார்வையாளர்களை அந்தக் காலத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்லும் வகையில், மீரா கதிரவன் இயக்கிய மனதைத் தொடும் தமிழ் காலக்கட்ட காதல் கதையான ‘ஹபீபி’யை, சோனி LIV செப்டம்பர் 25 முதல் ஒளிபரப்புகிறது.
‘ஹபீபி’ என்பது திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஒரு ஊரில், நான்கு தசாப்தங்கள், குடும்பம், பாரம்பரியம் மற்றும் காலப்போக்கில் மாறிவரும் ஒரு உலகத்தை உள்ளடக்கிய ஒரு காதல் கதை. இதன் மையத்தில், கைத்தறித் தொழில் நலிவடைந்து வரும் நிலையில், தனது பரம்பரை கைத்தறித் தொழிலை உயிர்ப்புடன் வைத்திருக்க உறுதியாக இருக்கும் முகமது யூசுப் (கஸ்தூரி ராஜா) இருக்கிறார். அவரது மகன் அபுதாஹிர் (ஈஷா எம் ), இந்த மரபுரிமைக்கும், நிலோஃபர் (மாளவிகா மனோஜ் ) மீதான தனது அமைதியான, நீடித்த காதலுக்கும் இடையில் சிக்கிக்கொள்கிறார். வளைகுடா இடம்பெயர்வுகளின் பின்னணியில், கடிதங்கள், கேசட் பதிவுகள் மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சந்திப்புகள் மூலம் குடும்பங்கள் இணைந்திருந்த ஒரு காலகட்டத்தை இப்படம் படம்பிடித்துக் காட்டுகிறது. இது மறைந்து வரும் ஒரு கைவினைக்கலை, மாறிவரும் மரபுகள் மற்றும் தூரத்தால் உருவான ஒரு காதல் ஆகியவற்றின் மென்மையான சித்தரிப்பாகும்.
படம் பற்றி இயக்குநர் மீரா கதிரவன் கூறுகையில், “ஹபீபி திரைப்படம் இப்போது சோனி LIV-ல் வெளியாவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இப்படத்தை உருவாக்கியபோது, வழக்கமான சினிமா வடிவத்திற்குள் திணிக்காமல், நேர்மையான மற்றும் யதார்த்தமான ஒரு கதையைச் சொல்வதே எங்கள் நோக்கமாக இருந்தது. இப்படத்தின் பயணம் முழுவதும் என் மனதில் நிலைத்திருப்பது, பார்வையாளர்கள் தங்களது சொந்த வழியில் கதாபாத்திரங்களுடன் இணைந்த விதம்தான். அதுதான் ஒரு கதையின் அழகு என்று நான் நம்புகிறேன்; அது ஒரு குறிப்பிட்ட உலகத்திலிருந்து வந்தாலும், ஒவ்வொரு பார்வையாளரும் அதில் தங்களின் ஒரு சிறு பகுதியைக் கண்டுகொள்ள முடியும்.”
வி.எஸ். முகமது அமீன் எழுதிய, ஹபீபிக்கு மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு மற்றும் சாம் சி.எஸ்.ஸின் ஆத்மார்த்தமான இசையால் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் கஸ்தூரி ராஜா, ஈஷா எம், மற்றும் மாளவிகா மனோஜ் ஆகியோருடன் தனஸ்ரீ சுதாகரன், அருள்குமார் மற்றும் அனுஸ்ரேயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஹபீபி 25 செப்டம்பர் 2026 அன்று சோனி LIV- தளத்தில் மட்டுமே வெளியாகிறது.


