நானி ,கயாடு லோகர் ,ராகவ் ஜுயல் ,கீர்த்தி சுரேஷ், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு ,சம்பூர்ணேஷ்பாபு, தனிக்கர பரணி, ஈஸ்வரி ராவ், ராஜா ரவிந்த்ரா, எம்எஸ் சௌத்ரி ,ராம் ஜெகன் நடித்துள்ளனர்.ஸ்ரீகாந்த் ஒதெலா எழுதி இயக்கியிருக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் . சி.எச். சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார். கொல்லா அவினாஷ் தயாரிப்பு வடிவமைப்பு செய்துள்ளார். முரளி கொண்டேட்டி கலை இயக்கத்தைக் கவனித்துள்ளார்.உடைகளை அஜய்குமார் கவனித்துள்ளார்.
ஆங்கில ஆட்சிக்காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது ஓர்அவலம்.ஓர் ஊரில் உள்ள சவாரி இனத்தைச் சேர்ந்த மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதிகார மமதை கொண்ட குழு. நாடு சுதந்திரம் அடைந்தாலும் சவாரி இனமக்கள் சுதந்திரம் இல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் தங்களுக்கு என்று இந்திய நாட்டில் அடையாளம் பெற்று அங்கீகாரம் பெற நினைக்கிறார்கள்.ஆனால் அந்த முதலாளி வர்க்கம் அதைத் தடுத்து அவர்களை அடிமைகளாக வைத்து வாட்டி வதைக்கிறது.அவர்கள் போராடி வந்தாலும் ஒரு முடிவும் எட்டப்படாமல் இருக்கிறது.அந்த ஊரில் உதித்து வரும் நாயகன் நானி அவர்களின் உரிமைக்காகப் போராடும் தலைவனாக உருவெடுக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா ?, என்பதை யுத்தத்தில் ரத்தக்களரியான காட்சிகள் பின்னணியில் சொல்வது தான் ‘தி பாரடைஸ்’.
சடையன் என்ற பாத்திரத்தில் இரட்டை ஜடையுடன் வித்தியாசமான தோற்றத்தில் வலம் வரும் நானி, தனது ஆவேசமான நடிப்பின் மூலம் படத்தைத் தன் தோளில் சுமந்துள்ளார்.அவர் தனது கதையை ரத்தத்தில் எழுதியிருக்கிறார். எனவே வன்முறைக் காட்சிகள் அதிகமாக உள்ளன.பெரும்பாலும் மோதல் சண்டை என்று இருப்பதால் அவருக்கு வேறு வகையான நுணுக்கமான நடிப்பைக் காட்ட வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.
நாயகியாக வரும் கயாடு லோஹர், நன்றாக நடிக்கத் தெரிந்தவர். இதுவரை கனவுக்கன்னியாக வந்தவரை இதில் கவர்ச்சிக் கன்னியாக மாற்றி இருக்கிறார்கள்.அவர் அப்படி மாறி இருப்பது கூட அந்தப் பாத்திரத்தின் தீவரத்தைக் காட்டவே என்கிற வகையில் நாயகனுக்கு நிகரான பாத்திரமாக அது வெளிப்படுகிறது.வெட்டுக்குத்து ரத்தம் என்று செல்லும் படத்தில் அவர் வரும் காட்சிகள் மட்டுமே பார்வையாளர்களுக்கான ஆறுதல் பகுதி எனலாம்.
மாலிக் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் மோகன் பாபு,கிழட்டு சிங்கம் என்றாலும் வீரம் போகாது என்று தோன்ற வைக்கிறார்.இரண்டு விதமான காலகட்ட தோற்றத்தில் வருகிறார்.இரண்டிலுமே அவரது பாத்திரம் கம்பீரம் காட்டுகிறது.
நானியின் அம்மாவாக நடித்திருக்கும் சோனாலி குல்கர்னி பாசக்காட்சிகளில் மிரட்டுகிறார். நானியின் நண்பராக நடித்திருக்கும் சம்பூர்னேஷ் பாபு, தணிகலபரணி, விஷிகா, கிருஷ்ண தேஜா, ஈஸ்வரி ராவ் என மற்ற துணைப்பாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பணியைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.படத்தில்இவர்கள் ஒவ்வொருவரது இருப்பும் பார்வையாளர்கள் மனதில் நெருக்கமாகப் பதியும் வண்ணம் நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் சி.எச்.சாய்,படத்தின் பிரதான தூணாக விளங்குகிறார்.ஒவ்வொரு சிறு காட்சியிலும் ஏராளமான மக்கள் என்று பிரம்மாண்டம் கட்டி நிற்கிறது காட்சி.சவாரி இன மக்களின் அவலத்தை காட்டும் குப்பை கூளங்கள் அழுக்கு போன்ற காட்சிகளும் ஒளிப்பதிவில் ஈர்க்கின்றன.ஒரு மாஸ் படம் என்பது மனதில் வைத்து ஒவ்வொரு காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.வசனங்கள் இல்லாமலேயே ரசிக்குளேவிற்கு அந்தக் காட்சிகள் உள்ளன. அடுத்து இன்னொரு தூணாகத் தாங்கி நிற்பது அனிருத்தின் இசை.இந்த மாஸ் படத்திற்கு விறுவிறுப்பையும் வேகத்தையும் கூட்டி உயர்த்திப் பிடிக்கிறது பின்னணி இசை.வன்முறைக் காட்சிகளுக்கு வேகம் கூட்டுவது மட்டுமல்ல பாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியையும் செய்துள்ளது அனிருத்தின் பின்னணி இசை.
சண்டைக்காட்சிகள் அதிகம் இருப்பதால் படத்தின் நீளத்தை அதிகமாக அனுமதித்துள்ளார் படத்தொகுப்பாளர் நவீன் நூலி.அதனால் இரண்டாம் பாதியின் நீளம் சற்றே அலுப்படைய வைக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஸ்ரீகாந்த் ஓதெலா, அடிமை விலங்கை உடைப்பதற்குப் போராடும் நாயகன், என்ற ஒரு வரிக்கதையை வைத்துக்கொண்டு, அதற்கான திரைக்கதையை இழை பிரித்து, கிளை பிரித்து ஒரு யுத்த காவியமாக நினைத்து இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார்.
பாரடைஸ் என்கிற உலகத்தையும் அதில் உள்ள கதை மாந்தர்களையும் அமைத்ததில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார் என்றாலும்
ஒரு கட்டத்தில் அதீத வன்முறையும் அதீத சென்டிமென்ட் காட்சிகளும் சலிப்படைய வைக்கின்றன.
நானியின் நடிப்பு , பாரடைஸ் உலக வடிவமைப்பு, அதில் வாழும் அடிமை மக்கள் போன்றவற்றிற்கு ஏற்ற ஆடைகள் பின்புலங்கள் என்று தயாரிப்பு வடிவமைப்பும் கலை இயக்கமும் இணைந்து கொடிகட்டிப் பறக்கின்றன.கிராபிக்ஸ் காட்சிகளையும் நிஜத்துக்கு நிகராக உருவாக்கி மிரட்டி உள்ளார்கள்.வன்முறைக் காடாகப் படத்தின் கதை அமைந்துள்ளதும் படத்தின் பின் பாதியில் நிலவும் நீளமும் படத்தின் மதிப்பைக் குறைக்கின்றன.என்றாலும் காதைப் பொத்திக் கொண்டு பார்த்தால் கூட ஒவ்வொரு காட்சியும் கண்களை மிரட்டும் வகையில் பிரம்மாண்டம் காட்டியுள்ளது நல்ல திரையரங்கு அனுபவத்தைத் தருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
மொத்தத்தில், ‘தி பாரடைஸ்’ இரத்தத்தில் எழுதப்பட்ட வன்முறைக் காவியம் .


