துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி ,ஸ்ருதிஹாசன், ருஹானி சர்மா ,நாசர், கௌதம் வாசுதேவ் மேனன்,முரளி சர்மா, ஸ்வாசிகா, கோட்டா ஜெயராம், மானசி சுதிர், சின்னி ஜெயந்த், பிரவீன், காசிரெட்டி நடித்துள்ளனர்.
பவன் சதினேனி இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார் .கதை திரைக்கதை குன்னம் கங்கராஜு எழுதியுள்ளார். பிரவீன் கே எல் படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்வேதா சாபுசரில் தயாரிப்பு வடிவமைப்பு செய்துள்ளார். வம்சி கிருஷ்ணா கலை இயக்கம் செய்துள்ளார்.
கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமா, லைட் பாக்ஸ் மீடியா நிறுவனங்கள் வழங்க சந்திப் குன்னம், ரம்யா குன்னம் தயாரித்துள்ளனர் .
முன்னேற்றங்கள் எட்டிப் பார்க்காத ஒரு கிராமத்தில் இருக்கும் கல்பனா நன்றாகப் படிக்கக்கூடிய மாணவி. சிறிய கிராமத்தில் பிறந்தாலும் அவளது கனவு பெரிய அளவில் இருக்கிறது. விமானம் ஓட்ட வேண்டும் விண்வெளியில் பறக்க வேண்டும் ,ராக்கெட் வடிவமைக்க வேண்டும் என்பது கனவாக இருக்கிறது.அது சார்ந்து படிக்க வேண்டும் என்கிறபோது பலரும் அவளைப் பரிகசிக்கிறார்கள்; ஏளனப்படுத்துகிறார்கள். ஏன் வீட்டுக்குள்ளேயே மகள் படிக்கக் கூடாது என்று தந்தையே தடையாக நிற்கிறார்.அவளது தாயையும் அவளது தந்தை அடிமை போல் வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் வளர்ந்ததும் கல்பனாவுக்குத் திருமணமாகிறது. ஆனால் அவள் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்து மாநில அளவில் இடம்பெற்றதை அறிந்து கொண்டு அவளது கனவைத் தெரிந்து கொண்ட அவளது கணவன் கிருஷ்ணா, அவளைப் படிக்க வைக்கிறான் .அதற்காக மிகவும் சிரமப்பட்டு உழைத்து சம்பாதித்துக் கல்லூரிக் கட்டணத்திற்காகச் செலவழிக்கிறான். ஒரு கட்டத்தில் கல்பனா அந்த கல்பனா சாவ்லாவைப் போல அறிவியலில் உயர்ந்து ராக்கெட் வடிவமைப்பில் பெயர் பெற்றவளாக விளங்கி விண்வெளியில் பறக்கிறாள். அப்போது அவளது கணவன் மட்டுமல்ல இந்த நாடே பெருமை கொள்கிறது.
இந்த ஒரு சாதாரண கிராமத்து மாணவியின் கனவு நனவாகும் பெரும் பயணத்தைப் பிரம்மாண்டமான காட்சிகள் மூலமும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஊட்டும் காட்சிகளின் மூலம் பார்ப்பவர் அனைவரையும் கவரும் படியான ஒரு திரைப்படமாக வெற்றிகரமாக இயக்கி ஒரு வணிக ரீதியிலான ஒரு படத்தை ஓர் உதாரணப் படமாக மாற்றி இருக்கிறார் இயக்குநர் பவன் சதினேனி.
படத்தில் துல்கர் சல்மான் ஒரு சாதாரண கார் ஓட்டுநராக அந்தப் பாத்திரத்தில் பொருந்தி மிக அழகாக வெளிப்பட்டுள்ளார். தனது மனைவியின் கனவை நிறைவேற்ற அவர் எதிர்கொள்ளும் துயர்களும் படும் கஷ்டங்களும் ஒரு சாமானியனின் போராட்டத்தைக் கண் முன் நிறுத்துகின்றன.
கல்பனாவாக நடித்த சாத்விகா வீரவல்லி தோற்றத்தில் மட்டுமல்ல உடல் மொழியிலும் அந்தப் பாத்திரமாகவே மாறி இருக்கிறார் .தனது தந்தையால் கொடுமைப்படுத்தப்படும் போதும் கணவரால் அரவணைக்கப்படும் போதும் என அவர் பல்வேறு உணர்ச்சித் தருணங்களை வெளிக்காட்டி நடித்துள்ளார். ஆய்வில் கருமமே கண்ணாக மும்முரமாக ஈடுபடும் போது அவர் வேறு மாதிரியாக வெளிப்படுகிறார். அதே நேரம் ஒரு கிராமத்திலிருந்து
ஆங்கிலம் தெரியாத மாணவியாக அந்த பெரிய அறிவியல் குழுவில் இணையும் போது நேரும் நிராகரிப்புகளையும் புறக்கணிப்புகளையும் கடந்து போய் முன்னேறும் அந்த பாத்திரத்தில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டுள்ளார். அமெரிக்காவில் படித்தவராக இருந்தாலும் அந்தப் பாத்திரமாகவே மாறி அனுபவம் மிக்க நடிகையைப் போல் அவர் மாறி வெளிப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் படத்தின் முழு எடையையும் தன் தோளில் சுமந்து கொண்டு பறக்கிறார்.
துல்கரின் அக்காவாக வரும் ஸ்வாசிகா எதிர் மறையிலிருந்து நேர்நிலைக்கு மாறும் பாத்திரத்தில் வந்து ஈர்க்கிறார். கல்பனாவுக்கு உதவும் இன்னொரு விண்வெளி சார்ந்த பணிகளில் ஈடுபடும் ரோகிணி கரியப்பா பாத்திரத்தில் சுருதிஹாசன் அனாயாசமாக மேல் தட்டு உணர்வுகளைக் காட்டி வெளிப்பட்டுள்ளார். குஜராத்தில் துல்கர் சந்திக்கும் ஒரு பெண்ணாக பிஜிலி பாத்திரத்தில் ருஹானி சர்மா இயல்பாக வெளிப்பட்டுள்ளார்.
கல்பனாவை ஆரம்பத்தில் ஊக்கமூட்டும் ஓர் ஆசிரியராக வந்த நாசர் பாத்திரத்தை கிளைமாக்ஸ் காட்சியில் தோன்ற வைத்து அந்தப் பாத்திரத்தை அர்த்த பூர்வமாக மாற்றி இருக்கிறார் இயக்குநர் ..
கௌதம் வாசுதேவன், முரளி சர்மா , சின்னி ஜெயந்த் போன்ற பலரும் அந்தந்த பாத்திரத்தில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளார்கள்.
படமே பெரிய கனவு நனவாவது பற்றிய கதையாக இருப்பதால் அதன் வீச்சை வெளிப்படுத்தும் வகையில் சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.அவரது கேமரா அந்தப் பாதையில் பயணப்பட்டுள்ளது. அதேபோல் கிராபிக்ஸ் காட்சிகளையும் விண்வெளி ஆய்வு மையக் காட்சிகளையும் நிஜக்காட்சிகளாக மாற்றி தொழில்நுட்ப நேர்த்தி காட்டி உள்ளார்கள்.
ஜி வி பிரகாஷ் குமார் பின்னணி இசை படத்தை மேலும் மெருகூட்டித் தூக்கி நிறுத்துகிறது.ஒரு துளிக் கூட தொய்வில்லாமல் பிரவின் கே.எஸ். படத்தொகுப்பு செய்துள்ளார்.
இப்படிப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் ஒரு நல்ல படத்திற்கான ஒத்துழைப்பு கொடுத்து தங்களால் முடிந்த அளவிற்குப் படத்தை உயர்த்திப்பிடித்து உள்ளார்கள். மொத்தத்தில் இந்தப் படம் பெண் கல்வியை வலியுறுத்துவது மட்டுமல்லாமல் பெண்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் படமாகவும் இருக்கிறது.
தமிழ் சினிமாவில் வெட்டு குத்து ரத்தம் போதை மருந்து கடத்தல் என்று பயணப்பட்டு அலுப்பூட்டும் கதைகளாக வந்து கொண்டிருக்கும் சூழலில் தெலுங்கு தமிழில் இந்தப் படம் உருவாகி இருப்பது பெரும் ஆறுதலாகவும் இருக்கிறது.சினிமா மீது மதிப்பையும் கூட்டுகிறது. அந்த வகையில் இயக்குநரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
மொத்ததில் இந்த ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ திரைப்படங்களில் ஒரு தாரகை அதாவது நட்சத்திரம்தான்.
குடும்பத்தோடு மட்டுமல்லாமல் குறிப்பாக பெண் பிள்ளைகளைத் திரையரங்குகளுக்கு அழைத்துச் சென்று பார்க்க வைக்கும் படமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது.


