தனுஷ், மம்முட்டி ,சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ், நஸ்ருதீன் ஷா ,கலைராணி மற்றும் பலர் நடித்துள்ளனர். ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார்.எழிலரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார்.வொண்டர் பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு செம்மரக் கடத்தல்காரர்கள் என்று ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் கதையை மையமாக வைத்து இந்தத் திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆந்திர எல்லை நடக்கும் செம்மர கடத்தலைத் தடுத்து நிறுத்தவும் அதற்குக் காரணமானவர்களைக் கூண்டோடு பிடித்துக் கைது செய்யவும் எனக் காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரி சாய் பல்லவி தலைமையில் ஒரு சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படுகிறது.அதன் தலைமைப் பொறுப்பை நித்யா ரெட்டி அதாவது சாய் பல்லவி ஏற்றுள்ளார்.அவர் இந்தக் கடத்தல் கும்பல்களால் அவரது தந்தையையும் கணவரையும் இழந்தவர்.எனவே அவர்களைப் பிடிப்பதில் மூர்க்கமாக உள்ளார்.
இந்தக் கடத்தல் வலைப் பின்னலில் துபாயில் இருக்கும் நஸ்ருதீன் ஷா முதல் உள்ளூர் அரசியல்வாதி செங்குன்றம் பகுதியில் இருக்கும் மம்முட்டி வரை தொடர்பு இருப்பது தெரிகிறது..டன் கணக்கில் மரக்கட்டைகளைக் கடத்துவது அவர்களது திட்டமாக இருக்கிறது .இவர்களைப் பிடிப்பதற்கு சாய் பல்லவி குழுவில் இருக்கும் போலீஸ்காரரான தனுஷ் ,போட்டோகிராபர் திருக்குமரன் என்கிற பெயரில் மம்முட்டி ஆட்களோடு நுழைந்து கலக்கிறார். நாளடைவில் மம்முட்டியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக மாறுகிறார். மம்முட்டியும் தனுசை அன்பாக வைத்துக் கொண்டிருக்கிறார்.சமயம் வரும்போது தனுஷின் மூலம் மம்முட்டியை மட்டுமல்ல நாடு கடந்து துபாயில் உள்ள நஸ்ருதீன் ஷா வரை அந்த வலைப் பின்னலையே வளைப்பது தான் சாய் பல்லவியின் திட்டமாக இருக்கிறது .அப்படி ஒரு சமயம் வருகிறது. தனுஷின் உதவியோடு ஆரம்பத்தில் 300 ப டன் கட்டைகளைக் கடத்தியவர் மீதமுள்ள 700 டன் செம்மரக்கட்டைகளைக் கடத்திவிட்டு தொழிலை விட்டு விலக நினைக்கிறார் மம்முட்டி. இத்திட்டத்தை நிறைவேற்றவும் தொடங்குகிறார்கள்.ஆனால் ஆந்திரப் போலீஸ் பிடித்து விடுகிறது.இந்த விஷயம் தெரியாமல் டிரைவராக இருக்கும் தனுஷின் அப்பாவும் அந்த செம்மரக் கடத்தல் வாகன ஒட்டியாகச் சென்று மாட்டிக் கொள்கிறார். அத்துடன் துப்பாக்கிச் சூட்டிலும் இறந்து விடுகிறார். அப்போது தனுஷ் மம்முட்டியை காப்பாற்றினாரா காட்டிக் கொடுத்தாரா? தந்தை இறந்தது தனுஷ்க்குத் தெரியுமா? தனுஷ் போலீஸ்காரர் என்று மம்முட்டிக்குத் தெரிந்ததா? தெரிந்த போது அவர் உணர்வு எப்படி இருந்தது ? போன்றவற்றிற்கு பதிலாகச் செல்வதை’ஓம்’ ( O.M: Operation Mole) படத்தின் மீதிக்கதை.
சாதாரண உள்ளூர் போட்டோகிராபர், திருவண்ணாமலைவாசியாக மனைவிக்குப் பயந்த குடும்பஸ்தன், ரகசிய போலீஸ் நடவடிக்கைகளில் இருக்கும் போலீஸ்காரர்,தந்தையைப் பறிகொடுத்துப்பாதிக்கப்பட்ட மகன் என்று வெவ்வேறு முகங்கள் காட்டுவதற்கு தனுஷுக்கு நல்ல வாய்ப்பு. அதை அவரும் சரியாகப் பயன்படுத்தி வெளிப்பட்டு உள்ளார்.மனைவிக்கு பயந்தவராகவும் மகனிடம் பாசம் காட்டுபவராகவும் மம்முட்டியிடம் அன்பு காட்டுபவராகவும் ஆக்சன் காட்சிகளில் வெளுத்து வாங்குபவராகவும் தனுஷின் ராஜ்யத்தில் கொடி பறக்கிறது.மனைவி ஸ்ரீலீலாவுக்கும் தனுஷுக்குமான நெருக்கத்தை விட மம்முட்டிக்கும் தனுஷுக்குமான நெருக்கம் பாசம் மனதைத் தொடுகிறது.
ஸ்ரீலீலா பாந்தமான மனைவியாக வருகிறார். கணவர் உடன் இல்லையே என்று தவிக்கிற ஒரு நடுத்தர வர்க்க மனைவியாக வருகிறார். அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.நித்யா ரெட்டி பாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக வரும் சாய்பல்லவி ஆரம்பக் காட்சி முதல் குற்றவாளிகளை விசாரிக்கும் காட்சி என்று விரிந்து அவரது இறுதிக்காட்சிகள் வரை அவர் தனித்து நின்று ஆடி உள்ளார். காக்கி உடைக்குள் கம்பீரம் காட்டி கடைசிக் காட்சிகளில் கண்ணீரையும் வர வைத்து விடுகிறார்.
பல இடங்களில் தனுசைத் தாண்டி மம்முட்டி முகபாவனைகளில் நேர்த்தி காட்டிருக்கிறார் அலட்டிக் கொள்ளாமலேயே அமைதியான வசனங்கள் இயல்பான உடல் மொழி என்று அவர் அனுபவம் மிக்க நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
துபாயில் உள்ள தாத்தாவாக வருகிற நஸ்ருதீன்ஷா சில காட்சிகளில் மட்டும் தோன்றுகிறார் .அவரை மேலும் பயன்படுத்தி இருக்கலாம்.
மலைவாழ் மக்கள் தங்கள் அறியாமையாலும் வறுமையாலும் செம்மரம் வெட்டுவதில் ஈடுபடுவதைக் காட்டி அவர்களது கண்ணீர் வாழ்க்கையும் காட்டப்படுகிறது.அவர்களுக்கு நேரும் கொடுமைகள் கலங்க வைக்கின்றன.
தனுஷின் தந்தையாக வரும் இந்திரன்ஸ் தோற்றத்திலும் நடிப்பிலும் கலங்க வைக்கிறார்.அவருக்கும் செம்மரத் தொழிலாளர்களுக்கும் நேரும் கொடுமைகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன.
படத்தின் மூன்று முக்கிய புள்ளிகளாக தனுஷ் – சாய் பல்லவி – மம்முட்டி ஆகியோரை இணைத்து வைத்து விறுவிறுப்பான திரைக்கதை வடிவமைத்த விதம் சிறப்பு.
அசுரன் தனுஷ் என்று டைட்டில் கார்டில் போடப்படும் தனுஷ் இதில், தான் நடிப்பில் அசுரன் என்று நிரூபிக்க முயன்று இருக்கிறார்.அதேபோல இன்னொரு தூணாக சாய் பல்லவி இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.
தனுஷ் – மம்முட்டி இருவரையும் மீறி அவர் பளிச்சிடுகிறார்.ஒரு கடத்தல்காரர் போல் வந்தாலும் மம்முட்டி தனது அன்பையும் பாசத்தையும் காட்டி பார்ப்போர் மனதில் ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகிறார்.
படத்ததின் பெரும் பகுதிக்கதை வெளிப்புறங்களில் நடப்பதால் தனது ஒளிப்பதிவுக் குழுவுடன் ஓடி ஓடி ஒளிப் பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் எழிலரசு.
சாய் அபியங்கரின் இசையில் பாடல்கள் இனிமையைத் தாண்டி மாஸ் காட்டுகின்றன. பின்னணி இசையிலும் காட்சிகளை உயர்த்திப் பிடித்துள்ளார்.
மொத்தத்தில் இந்த ’ஓம்’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் முழு நீள வணிகத்தன்மையில் எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு வணிக அம்சங்கள் இயல்பாகக் கலந்து உருவாகி இருப்பதால் திரையரங்கு செல்வோருக்கு நிறைவு தரும் அனுபவமாக இது இருக்கும்.


