அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ!

அர்கா மீடியாஒர்க்ஸ் ) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்ட  – பிரசாத் தேவினேனி ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஜான் டோ – John Doe’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மதுமிதா மற்றும் கதாசிரியர் நிக்கோலஸ் செவாலியர் ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை எழுதி இருக்கும் ‘ஜான் டோ- John Doe’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்திருக்கிறார். கூடுதல் இசையை ஆர்டிஸ்ட் 404  எனும் இசைக்குழு அமைத்திருக்கிறது. படத்தொகுப்பு பணிகளை விஜய் வெங்கடரமணன் மேற்கொள்ள தயாரிப்பு வடிவமைப்பாளராக அஷ்வினி காலே பணியாற்றுகிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் குறிப்பிடுகையில், ” ஜான் டோ என்பவர் யார்? பாதிக்கப்பட்டவரா? கொலைகாரனா? காணாமல் போன குழந்தையா? அல்லது இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒருவரா..? என்பதை பற்றிய சுவாரசியமான கதையாக உருவாகி இருக்கிறது. இதில் தெரிந்ததற்கும்… நம்பப்படுவதற்கும்… இடையிலான எல்லைக்கோடு மறையத் தொடங்குகிறது. கதையின் நாயகனான சந்துரு தனக்குள் எழும் கேள்விகளுக்கான பதில்களை தேடி பயணிக்கும் போது… கடைசி கேள்வியை விட, அவருக்குள் எழும் மற்றொரு ஒரு கேள்வி மிகுந்த கவலையை தருகிறது. அது என்ன வெனில்… ஜான் டோவை பற்றிய உண்மையை யாரும் எதிர்கொள்ள தயாராக இல்லை என்றால் என்ன செய்வது? இந்த கேள்விக்கான பதிலை பார்வையாளர்கள் எளிதில் யூகிக்காத வகையில் இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.‌

‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படைப்பை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அர்கா மீடியாஒர்க்ஸ்- அர்ஜுன் தாஸ்- இயக்குநர் மதுமிதா – என திறமைசாலிகளின் கூட்டணியில் உருவாகும் ‘ஜான் டோ- John Doe’ படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு மேலும் உத்வேகம் அளிக்கும் வகையில் படக்குழு வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்று, அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இதில் கதையின் நாயகனான சந்துரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ்- காவலர் சீருடையில் தோன்றுவதும்… டைட்டில் லுக்கில் அவரது கையில் பொம்மை ஒன்று இருப்பதும்.. பார்வையாளர்களிடத்தில் படத்தை பற்றிய தாக்கத்தையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கியுள்ளது.‌

இதனிடையே நடிகர் அர்ஜுன் தாஸ் முதல் முதலாக ‘ஜான் டோ’ திரைப்படத்தில் போலீஸ் சீருடை அணிந்து நடித்திருப்பது அவரது ரசிகர்களிடத்திலும், பார்வையாளர்களிடத்திலும் பேரார்வத்தை தூண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.