‘அவதார் The Way of Water’ விமர்சனம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கும் போது மாடுபிடி வீரர்கள் எந்த காளை வந்தாலும் பாய்ந்து சென்று பிடிப்பார்கள்.ஆனால் காளைகளில் மிகவும் சூரனான சில காளைகள் வரும் .அப்போது வீரர்கள் அனைவரும் ஒதுங்கி , பதுங்கிப் பாய்ந்து ஓடிவிடுவார்கள்.வேண்டாம் வம்பு என்று ஓடி,தங்களைத் தற்காத்துக் கொள்வார்கள். அப்படித்தான் ‘ அவதார் ‘இரண்டாம் பாகம் படம் வருகிறது என்ற போது உலகம் முழுக்க பிராந்தியமொழிப் படங்கள் எல்லாம் வெளியிடாமல் பதுங்கிப் பின்வாங்கின.அவதாருடன் மோத வேண்டாம் என்று ஒதுங்கி நின்றன. அந்த அளவிற்கு எதிர்பார்ப்பு பெற்றுள்ள படம் தான் அவதார். முதல் பாகம் ஏற்படுத்தி இருந்த வியப்பும் எதிர்பார்ப்பும் இரண்டாம் பாகத்திற்கு கூடுதல் பலம்.

சரி இதன் கதை என்ன?

ஜேக் சல்லியின் குடும்பத்திற்கும், அவரைச் சார்ந்திருக்கும் பாண்டாரோ மக்களுக்கும் மீண்டும் சிக்கல்கள் எழத் தொடங்குகின்றன. அதிலிருந்து ஜேக் சல்லி எப்படித் தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றுகிறார் என்பதே அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தின் ஒருவரிக் கதை.
சொல்லும்போது இந்த ஒரு வரி சாதாரணமாகத் தோன்றலாம் ஆனால் ஹாலிவுட்டின் பிரம்மாண்டமும் தொழில்நுட்பங்களும் கிராபிக்ஸ் விளைவும் நம்மை வியப்பிலாழ்த்திப் பிரமிக்க வைக்கும்.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்னர், புதியதொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் சென்றவர் ஜேம்ஸ் கேமரூன். மனிதன் ஏலியன் மோதல் கான்செப்ட்டில் மனிதன் செய்யும் அதிகார அத்துமீறல்களைப் பட்டியலிட்டு, ஏலியன்களுக்கான தேவதூதனாக ஜேக் சல்லி எப்படி உருவானார் என்பதாக முதல் பாகம் விரியும்.

ஜேக் சல்லிக்கும், காலனல் மைல்ஸுக்குமான இறுதி யுத்தத்தில் நாம் எதிர்பார்க்கும் முடிவு கிடைத்துவிட வேறு வழியின்றி பாண்டாரோ உலகை விட்டு, மீண்டும் பூமி நோக்கி மனிதர்கள் வெளியேற முதல் பாகம் முடிவுறும். காடுகள், மலைகள் எனச் சுற்றித்திரியும் ஜேக் சல்லி காலப்போக்கில் குடும்பம் , மனைவி மக்கள் என்று செட்டிலாகிவிடுகிறார். ஆனாலும், மனிதர்களின் தொல்லை தொடர்கிறது. புதிது புதிதாக அணிகளை அனுப்பி இந்த பாண்டாரோ உலகத்தைக் கைப்பற்ற முயல்கிறார்கள். இது தொடர்ந்து நடைபெறுகிறது.

போதாக்குறைக்கு காலனல் மைல்ஸும் வேறொரு ரூபத்தில் மீண்டும் வந்துவிட, இனியும் காடுகளில் வாழ்ந்தால் தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது என்பதை அறிந்துகொள்கிறார் ஜேக். தன் ஒட்டுமொத்த குடும்பத்துடன் கடல் சார்ந்த Reef people வாழும் Metkayinaவுக்கு சென்று விடுகிறார். புது இடம், புது பிரச்சினைகள் , குடும்பத் தகராறுகள் என கலந்து இந்த இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன்.

படத்தின் காட்சி இன்பங்களைக் கடந்து சில கதாபாத்திரங்கள் மட்டுமே நம் மனதில் நிற்கின்றன. கிரேஸ் அகஸ்டினின் மகளாக வரும் கிரியும், ஸ்பைடர் கதாபாத்திரத்தில் வரும் ஜேக் சாம்பியனும்,லோக் கதாபாத்திரமும் மனதில் நிற்கிறார்கள். துணை கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்ட அளவுக்குக்கூட ஜேக் சல்லி, நெய்ட்ரியின் பாத்திரங்கள் அமைக்கப்படவில்லை.

இரு உலகங்களுக்கான சண்டை, பாண்டாரோ உலகில் மட்டுமே கிடைக்கும் அபூர்வ பொருள் என்பதையெல்லாம் விடுத்து இரு நபர்களின் ஈகோ யுத்தம் அளவுக்கு கதை ஒரு கட்டத்தில் மாறி விடுகிறது.

டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  அது என்ன கதாபாத்திரம் என இறுதியில் வரும் Cast order of apperarence பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

விழிகளை புரிய வைக்கும் பிரம்மாண்டம் இதுவரை காணாத அற்புதம்.அதில் எந்த சந்தேகமும் இல்லை.

முதல் பாகத்தில் காடுகளினூடே வித்தியாசமான செடிகள், மரங்கள், விலங்குகள் என நம்மை அதிசயிக்க வைத்த ஜேம்ஸ் கேமரூன், இதில் கடலுக்குள்ளே சென்று வித்தியாசமான நீர் விலங்குகளைக் கற்பனை செய்திருக்கிறார். 

பெரிய திரையில் அந்தக் காட்சிகளைப் பார்க்க அவ்வளவு பிரமிப்பாய் இருக்கிறது. WETA நிறுவனத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் படத்துக்கு அசுர பலம். 
ஹாலிவுட் படம் ரசிகர்களுக்கான மாபெரும் விருந்து இந்த அவதார் 2 என்று கூறலாம்.ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாலும் அனைத்தும் முறியடித்துக் கொண்டு அந்த பிரம்மாண்டமும் கடலடி உலகமும் நம்மை வியப்பின் விளிம்பில் நிற்க வைக்கும்.