‘ஆயிரம் பொற்காசுகள்’ விமர்சனம்

விதார்த், சரவணன், அருந்ததி நாயர், ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், வெற்றிவேல் ராஜா, பவன்ராஜ், ஜிந்தா , ஜிந்தா கோபி , செம்மலர் அன்னம், ரிந்து ரவி, தமிழ்ச்செல்வி மற்றும் பலர் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு பானு முருகன், இசை ஜோகன் சிவனேஷ்..ரவி முருகயா இயக்கியிருக்கிறார்.ராமலிங்கம் தயாரித்துள்ள இப் படத்தை கே ஆர் இன்போடெயின்மெண்ட் உலகெங்கும் வெளியிடுகிறது.

கதை தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில் நடக்கிறது. அங்கே சரவணன் இருக்கிறார் திருமணம் செய்து கொள்ளவில்லை அவரது தங்கை மகன் விதார்த் அங்கே வருகிறார். மாமனுடன் தங்குகிறார். குடி கும்மாளம் ஜாலி என மாமனையே மிஞ்சுகிறார்.

அரசு மானியம் கிடைக்குமே என கழிவறை கட்ட குழி தோண்டுகிறார் சரவணன். குழி தோண்ட உதவி செய்கிறார் சுடுகாட்டில் வேலை செய்யும் ஜார்ஜ்.

குழி தோண்டும்போது ஒரு பானை கிடைக்கிறது. அதில் ஆயிரம் பொற்காசுகள் இருக்கிறது. அதில் பங்கு கேட்கிறார் ஜார்ஜ். காசுகள் தொடர்பாக ஜார்ஜ், சரவணன் இடையே அடிதடி நடக்கிறது. இதில் காயம் அடைந்த ஜார்ஜ் நினைவு இழந்துவிடுகிறார்.முன்னுக்குப்பின் முரணாக உளறுகிறார்.

இதையடுத்து ஆயிரம் பொற்காசுகளும் தமக்கு மட்டுமே என சரவணன் மற்றும் விதார்த் நினைக்கிறார்கள் .சூழலோ வேறு மாதிரியாக மாறுகிறது. புதையல் ரகசியம் யாருக்கும் தெரியாது என்று நினைத்தால் தெரிந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து பங்கு கேட்கிறார்கள்.புதையல் செய்தி தொல்லியல் துறைக்கும் தெரிந்துவிடுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கும் படம் தான் ஆயிரம் பொற்காசுகள்.இயக்கியிருப்பவர் ரவி முருகயா.

இந்த பொற்காசுகள் சண்டைக்கு இடையே விதார்த்துக்கும், அருந்ததி நாயருக்கும் இடையே காதல் வேறு வருகிறது.

விதார்த்-அருந்ததி இடையே காதல் ஏற்படும் காட்சிகள் ஒட்டவே இல்லை, ஆனால் இப்படிப்பட்ட குறைகளைத் தாண்டி ரசிக்கும்படியாக இருக்கிறது படம். ஆயிரம் கவலைகளை மறந்து படம் பார்க்கத் தியேட்டருக்குச் சென்றால் பொன்னகை கிடைக்கிறதோ இல்லை உங்கள் முகத்தில் புன்னகை கிடைக்கும்.உங்களின் கவலையை மறக்கடிக்கும்.

படத்தில் வரும் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிறு கதாபாத்திரங்கள் கூட மனதில் நிற்கிறார்கள்.கதாநாயகன் கதாநாயகியை விட துணை கதாபாத்திரங்கள் அதிகம் ஸ்கோர் செய்கிறார்கள்.ஹலோ கந்தசாமி ,ஜார்ஜ் மரியான் இருவரும் இயல்பான நடிப்பால்  தனி முத்திரை பதிக்கின்றனர். படத்திற்குப் பெரிய பலமாக அமைந்துள்ளார் சரவணன்.

ஆயிரம் பொற்காசுகள் கிடைத்ததும் படத்தின் வேகம் அதிகரிக்கிறது. புதையலை பங்கு போடப் பலர் அடித்துக் கொள்வதை காமெடி கலந்து காட்டியிருக்கிறார்கள்.தவறு செய்பவர்களின் மனதில் ஏற்படும் பதற்றத்தை வைத்து அவர்களின் நடவடிக்கை பேச்சு நடை பாவனை எல்லாவற்றையும் ஒவ்வொரு அசைவாகக் காட்டி நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்கள். அந்தக் காட்சிகள் இயல்பு மாறாமல் வந்துள்ளன.பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படத்தில் கூட இப்படிப்பட்ட எதார்த்தமான தொடர்ச்சியான நகைச்சுவைக் காட்சிகள் அமைவதில்லை.படத்தின் காட்சிகள் பெரும்பாலும் வெளிப்புறப் பகுதியிலேயே நடக்கின்றன. எனவேபடத்திற்காகப் பெரிதாக செலவு செய்யவில்லை என்கிற குறை தெரியவில்லை.

ஆயிரம் பொற்காசுகள் அல்டிமேட் காமெடி. பார்த்து ரசிக்கலாம்.