‘டங்கி’ விமர்சனம்

ஷாருக்கான், டாப்சி பண்ணு, விக்கி கெளஷல், பொம்மன் இரானி மற்றும் பலர் நடித்துள்ள படம்.ராஜ்குமார் ஹிரானி இயக்கியதுடன் படத்தொகுப்பையும் செய்துள்ளார்.

ஒளிப்பதிவு- சி.கே. முரளீதரன், மனுஷ் நந்தன், அமித்ராய், குமார் பங்கஜ். பாடல்கள் ப்ரீத்தம், பின்னணி இசை அமன் பந்த்,தயாரிப்பாளர்கள் கௌரி கான் ,ராஜ்குமார் ஹிரானி, ஜோதி தேஷ் பாண்டே. தயாரிப்பு ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ்.

வெளியீடு ஸ்ரீ கோகுலம் மூவிஸ் மற்றும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி .

ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ‘ஜவான்’ பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதில் ஆக்சன் ரசிகர்களுக்கு அதிரடி விருந்தளித்து நடித்திருப்பார். ஆனால் உணர்வு ரீதியான உடனடி மாற்றமாக நடித்துள்ள படம் தான் இந்த ‘டங்கி’.

இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வளர்ந்த நாடுகளுக்குச் செல்லும் கனவு வறுமையில் உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு இருக்கும். அது அங்கே போய் சுற்றுலா இடங்களை சுற்றிவிட்டு வருவதற்காக அல்ல. வெளிநாடு சென்று ஏதாவது ஒரு வேலை பார்த்து உழைத்து தனது குடும்பத்தின் வறுமையைத் தீர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த வெளிநாட்டு கனவு இருக்கும். அப்படி ஷாருக்கான் மற்றும் நண்பர்கள்  லண்டன் செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு அவர்களின் வறுமையும் படிப்பறிவின்மையும் அறியாமையும் பெரிய தடையாக உள்ளது .

வெளிநாட்டு கனவுடன் இருக்கும் ஷாருக்கானின் நண்பர்களில்  ஒருவர் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்கிறார். அதற்குப் பிறகு எப்படியாவது வெளிநாடு லண்டன் சென்றே தீர்வது,அது நேர்வழியோ குறுக்கு வழியோ என்று ஷாருக்கான் முடிவெடுக்கிறார்.
அதற்கான வழிகளில் இறங்குகிறார்கள். அப்படி அவர்கள் செல்வதுதான் டங்கி, அதாவது சட்ட விரோதமாக, கள்ளத்தனமாக எல்லை கடந்து செல்வது.
இப்படிப் போராடிப் பார்த்து தோல்வடைந்த பின் சட்டத்திற்கு புறமான வழியில் வெளிநாடு செல்கிறார்கள். அங்கு அவர்கள் சந்திக்கும் வாழ்க்கை, மீண்டும் தாய் நாட்டுக்கு திரும்புவதுதான் கதை.

ஆண்டுதோறும் இப்படி ஒரு நாட்டின் எல்லையைச் சட்ட விரோதமாகக் கடப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேர் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இதன் அடிப்படையில் அந்த ஓர் இழையை எடுத்துக்கொண்டு அதன்பின் பல உணர்ச்சிகரமான சம்பவங்களையும் , குடும்பச் சூழல் பின்னணியையும் வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் ராஜ்குமார் ஹிரானி.

140 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தின் முதல் பாதி மிகவும் கலகலப்பாகவும் ஜாலியாகவும் அதே சமயத்தில் ஒவ்வொருவரது குடும்பச் சூழலை வெளிப்படுத்தும் படியும் காட்சிகள் உருவாக்கியுள்ளார். குறிப்பாக அவர்கள் லண்டன் செல்வதற்கு ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் காட்சிகள் மொழி தெரியாதவர்களுக்கும் சிரிப்பை வரவழைக்கும்.வெளிநாடு செல்வதற்கான நேர்காணல் காட்சிகளும் கலகல சிரிப்பு அனுபவங்கள்.இந்த எல்லை தாண்டி நாடுவிட்டு நாடு செல்லும் பயணத்தின் கதையில் ஒரு அழகான காதல் கதையும் உள்ளது. அது ஷாரூக் -டாப்சி சம்பந்தப்பட்ட கதை. 25 ஆண்டுகளுக்குப் பின் காதலர்கள் சந்திக்கும் தருணங்கள் நெகிழ்ச்சிகரமானவை.

நடிப்பை எடுத்துக் கொண்டால் தோற்றத்திலும் சரி நடிப்பிலும் சரி ஷாருக்கான், டாப்சி முதலிடத்தில் வருகிறார்கள்.அடுத்து சுகி பாத்திரத்தில் வரும் விக்கி கெளஷல், கீது குலாட்டியாக வரும் பொம்மன் இரானி ஆகியோரைக் கூறலாம். இருந்தாலும் படத்தில் வரும் சின்ன சின்ன பாத்திரங்கள் வரை மனதில் பதிகிறார்கள்.இந்தியா, பஞ்சாப், துபாய்,ஆப்கானிஸ்தான், துருக்கி , லண்டன் என்ற பயணிக்கும் கதை,காட்சிகளின் வழியே சமவெளிகள், மலைகள், ஆறுகள், பாலைவனங்கள் என்று கடந்து செல்கிறது.அந்த வேறுபட்ட புவியியல் தோற்றங்கள் படத்திற்கு புது நிறமூட்டி கண்களுக்குக் காட்சி விருந்தாகவும் உள்ளன.

வெளிநாடு செல்பவர்கள் எல்லாம் ஜாலியாக இருக்கிறார்கள், பணம் ஏராளமாகச் சம்பாதிக்கிறார்கள் என்று நினைப்பவர்களுக்கு அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள்?அவர்களின் பாடுகள் எப்படிப்பட்டவை என்பதை வெளிப்படுத்தும் காட்சிகள் கண் கலங்க வைப்பவை.’செத்தாலும் சொந்த ஊர்ல சாகவேண்டும் ‘என்று கிராமத்தில் சொல்லும் வார்த்தைகளுக்கு இந்தப் படம்  விளக்கம் கூறுகிறது.சொந்த தாயைப் போல சொந்த வீட்டைப் போல சொந்த நாட்டு உணர்வு எப்படிப்பட்டது என்பதை நம்மை உணர வைக்கிறார்கள்.

மொத்தத்தில் அலங்கார  சண்டைக் காட்சிகள் சினிமாத் தனமான காட்சிகள் இல்லாமல் உணர்ச்சிகரமான காட்சிகளைக் கொண்டு இந்தப் படம் மொழி தெரியாதவர்களும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மொத்தத்தில் டங்கி உணர்வுகளின் ஊர்வலம்.எந்த நாட்டுக்காரர்களும் தங்களைத் தொடர்பு படுத்தி ரசிக்கவும் நெகிழவும் வைக்கும் படியான படம் எனலாம்.