ஊடகங்களுக்குத் தங்கர் பச்சான் நன்றி!

‘கருமேகங்கள் கலைகின்றன’  படத்திற்கு ஊடகங்கள் விமர்சன ரீதியாக அளித்துள்ள மாபெரும் ஆதரவு குறித்து மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து இயக்குநர் தங்கர்பச்சான் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

’அன்பின் வணக்கம்

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய “கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன” எனும் சிறுகதை, “கருமேகங்கள் கலைகின்றன” எனப் பெயர் மாற்றம் பெற்று திரைப்படமாக உருவாகி இன்று உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

வெறும் தாளில் இருந்த இந்த கதை 138 நிமிடங்கள் ஓடும் திரைப்படமாக உருவாகக் காரணமாக இருந்த இப்படத்தின் தயாரிப்பாளருக்கும் என்னுடன் துணை நின்று மக்களின் உள்ளங்களைக் கட்டிப்போடும் திரைப்படைப்பாக உருவாகக் காரணமாக இருந்த நடிப்புக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

யாருக்காக இப்படம் படைக்கப்பட்டதோ அவர்களிடமே இதைச் சேர்த்துக் கொண்டிருக்கும் ஊடக மற்றும் சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். எனது படைப்புகளையும் எனது நோக்கத்தையும் உணர்ந்து என்றும் துணை நிற்கும் உங்கள் அனைவருக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

படைப்பை படைப்பது மட்டுமே எனது பணி. இதனை ஏற்றுக் கொண்டாடி என்னை இடைவெளியின்றி மீண்டும் இயங்க வைப்பது உங்கள் கையில்!

அனைவருக்கும் நன்றிகள்! ‘

இவ்வாறு த ங்கர் பச்சான் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.