‘கிக்’ விமர்சனம்

விளம்பரப் படங்கள் எடுக்கும் நிறுவனங்களின் தொழில் போட்டிகள், அரசியல்கள் பின்னணியில் உருவாகியுள்ள நகைச்சுவைக் கதை.சிரிக்க வைப்பது சீரியஸான விஷயம் . சிரிக்க வைப்பதற்குத்தான் நிறைய உழைக்க வேண்டும். இந்தப் படம் எப்படி இருக்கிறது பார்க்கலாம்.

மனோபாலா, தம்பி ராமையா இருவரும் விளம்பரப் படங்கள் எடுப்பவர்கள். ஒருவருக்கொருவர் போட்டியாக இருக்கிறார்கள்.

மனோபாலாவுக்காக நடிகை தான்யா ஹோப் (ஷிவானி) பணிபுரிகிறார். தம்பி ராமையாவுக்காக நடிகர் சந்தானம் (சந்தோஷ்) பணிபுரிகிறார்.

அடையும் வெற்றி தான் முக்கியம், செல்லும் வழி முக்கியமல்ல என்கிற கொள்கை உடைய சந்தானம் குறுக்கு வழிகளில் வெற்றி பெற்று விளம்பரப்பட உலகில் கொடி கட்டிப் பறக்கிறார்.

எதிர் கம்பெனியில் பணியாற்றும் தான்யா அறம் ,நீதி, நியாயம் என்கிற கொள்கை உடையவர். அதனால் அவரால் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை.
அப்படிப்பட்ட தான்யா ஹோப்பை கண்டதும் காதல் கொள்கிறார் சந்தானம். நிஜத்தில் சந்தோஷ் என்ற பெயரில் உள்ள சந்தானத்தை அவரது தில்லு முல்லுகளுக்காக ஆளைப் பார்க்காமலேயே வெறுக்கிறார் தான்யா.அவருக்கு எதிராக கவுன்சிலில் புகார் கொடுக்கிறார்.புகார்களிலிருந்து தனது தந்திரத்தால் தப்பிக்கிற சந்தானம்,தான்யாவிடம் வேறொரு பெயரில் பழகி, உண்மையாகக் காதலிக்கத் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் உண்மையைச் சொல்லிவிட நினைக்கிறார். ஆனால் அதற்குள்,தான்யா தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி மனம் உடைகிறார்.தொழில் போட்டி, அரசியல் இடையே இவர்களது காதல் என்ன ஆனது என்பதே மீதிக் கதை.இதற்கிடையில் கதை பாங்காக்கிற்குச் சென்று அங்கு பிளாக்பஸ்டர் என்ற ஒரு பாலியல் மாத்திரை கண்டுபிடிப்பு, ஃபார்முலா, விஞ்ஞானி ,ஆராய்ச்சி, பாங்காக் சண்டைக் கலைஞர்களுடன் சண்டை, ஊத்துக்குளி ருக்கு என்றெல்லாம் சுற்றி வருகிறது .

கன்னடத்தில் வெற்றிபெற்ற ஜூம் படத்தையே தமிழில் மறு உருவாக்கம் செய்துள்ளனர்.

‘நாயகன்’ சந்தானம் சந்தானம் அழகாகத் தோன்றுகிறார். வழக்கம்போல் டைமிங் காமெடி, அதே உடல் மொழி,கேலி கிண்டல் நக்கல் பேச்சு என்ன தனது பாணியில் நடித்துள்ளார்.பாடல் காட்சிகளில் ஆடிப் பாடி நடித்து, சண்டைக் காட்சிகளில் வீராவேசம் காட்டி குறை ஒன்றும் இல்லை தான். கண்ணியமான கொள்கை உடைய தான்யா ஹோப் பாத்திரம் பிறகு மந்தமாக மாறிவிடுகிறது.மிகவும் தெளிவானவர் போல் தோன்றும் அவரைச் சந்தானம் ஏமாற்றுவது நம்பும்படியாக இல்லை.

காமெடி பின்னணியை அடிப்படையாகக் கொண்ட படத்தில் தம்பி ராமையா, மனோபாலா, கோவை சரளா, மன்சூர் அலிகான்,ஒய் ஜி மகேந்திரன், பிரம்மானந்தம், செந்தில், வையாபுரி,மதன் பாப் ,முத்துக்காளை,ஷகிலா,சிசர் மனோகர், கூல் சுரேஷ் ,கிங்காங் என ஏராளமான சிரிப்பு நடிகர்கள்.ஆளாளுக்கு அலப்பறை செய்து அலுப்பூட்டுகிறார்கள்.
தம்பி ராமையா காமெடி என்ற பெயரில் மிகைநடிப்பையும் ம ஆபாச வசனங்களையும் அள்ளி வீசுகிறார்.எல்லாமே  ‘சாரி கொஞ்சம் ‘ ஓவர் ரகங்கள்.இப்படிப்பட்ட வசனங்களால் படத்திற்கு அசைவ வாசனை வந்து விடுகிறது. டீன் ஏஜ் வாலிபர்களை மட்டும் குறி வைத்து எடுத்துள்ளார்கள் அது மட்டும் ஒரு படம் வெற்றி பெறப் போதுமா?

எதற்கெடுத்தாலும் படம் எடுத்து ரிலீஸ் பதிவிடும் கோவை சரளா அடித்து ஆடி, சிரிக்க வைக்கிறார்.
சுற்றிலும் கோபியர் புடை சூழ கண்ணனாக வலம் வரும் செந்திலுக்கு சொல்லிக் கொள்ளும்படியான நடிப்பு வாய்ப்பு இல்லை ,என்றாலும் வெறுப்பு ஊட்டவில்லை புதிய தோற்றத்தில் மறுபிரவேசம். மனோ பாலா அவரது பாணியில் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். இருந்தாலும் அவரது இழப்பை உணர வைக்கிறார்.
கதை இஙகிருந்து பாங்க் காக் செல்கிறது அங்கு சென்றாலும் அதே பாணியிலான காட்சிகள் தான்.

பொய், புரட்டு, தில்லுமுல்லு போலி என படம் முழுவதும் வலம் வரும் சந்தானம் பாத்திரத்தை எப்படியோ சுவாரஸ்யப் படுத்தியிருக்கலாம். பெரிய கதாநாயகர்கள் நடித்துள்ள படத்திற்கு இணையான தரமான ஒளிப்பதிவை வழங்கியுள்ளார் சுதாகர் எஸ் ராஜ். இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யாவின் இசை படத்தின் பெரும் ஆறுதல்.பாடல்கள் கமர்சியலாக ஹிட் ரகங்கள்.பாடல் காட்சிகளைப் பெரிய கதாநாயகர்கள் நடிக்கும் அலங்காரத்தோடும், நவீன தொழில்நுட்ப நேர்த்தியோடு எடுத்துள்ளார்கள்.

“டிடி ரிட்டர்ன்ஸ் உடன் இந்தப் படத்தை ஒப்பிட வேண்டாம் , கிக் வேற மாதிரி இருக்கும், இதை சந்தானம் படம் என்று சொல்வதை விட இயக்குநர் பிரசாந்த்ராஜ் படம் என்றுதான் சொல்ல வேண்டும்” என சந்தானம் கூறி வந்ததன் பொருள் படத்தைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது.டிடி ரிட்டர்ன்ஸ் படம் மூலம் அண்மையில் நம்பிக்கையான வெற்றியைப் பெற்ற சந்தானத்தை நம்பிப் படத்துக்கு போனால் பெரிய ஏமாற்றம்.

படத்தின் நாயகன் சந்தானம் தான் என்றாலும் எல்லாக் காட்சிகளிலும் தானே வர வேண்டும் என்று நினைக்காமல்,ஏராளமான நகைச்சுவை நடிகர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களையும் அவரவர் பாணியில் நடிக்க விட்டுள்ள அந்தப் பெருந்தன்மையைப் பாராட்டலாம்.