‘ஓ2: விமர்சனம்

வணிக ரீதியிலான பெரிய வெற்றிப் படங்களில் நடித்து விட்டபின்னர் சம்பந்தப்பட்ட கதாநாயகனோ நாயகியோ பிறகு தரமான கிளாஸிக் படங்களுக்கு தம்மை ஒப்புக்கொடுக்கச் சம்மதிக்க வேண்டும். அப்பொழுது தரமான, காலத்தை வெல்லும் திரைப்படங்கள் உருவாகும்.இந்த ஆரோக்கிய மாற்றம் நயன்தாராவிடம் நிகழ்ந்து வருகிறது.அதற்கு முந்தைய உதாரணம் ‘அறம்’ ‘ இப்போது ‘ஓ2’.

ஓ2 என்பது ஆக்சிஜனைக் குறிக்கும். தன் மகனின் உயிரைக் காப்பாற்றத் தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைச் சந்திக்கும் ஒரு தாயின் போராட்டம் சார்ந்த கதை இது.
இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

நயன்தாராவின் மகனுக்கு நுரையீரல் பாதிப்பு .ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படும் ஒரு அபாய நிலை.அந்தத் தாய் நயன்தாரா மேல் சிகிச்சைக்காகத் தன் மகனை அழைத்துக் கொண்டு கொச்சி செல்கிறார்.அவருடன் வேறு சில மனிதர்களும் அந்த ஆம்னி பஸ்ஸில் பயணம் செய்கிறார்கள். அவர்கள் பல்வேறு விதமான குணச்சித்திரங்கள்.வழியில் விபத்து ,நிலச்சரிவு எனப் பல அபாயங்களைச் சந்திக்கிறது அந்த பஸ். உள்ளே
ஆக்ஸிஜனுக்காகப் போராடும் அவர்களின் நிலை என்னவானது? என்பதுதான் ‘ஓ2’ படத்தின் திரைக்கதை.

படத்தின் மையக் கதாபாத்திரம் ஏற்றுள்ள நயன்தாரா திரையை மட்டுமல்ல ரசிகர்களின் மனதையும் ஆக்கிரமிக்கிறார்.
மகனுக்காக எந்த உச்ச எல்லைக்கும் செல்லும் ஒரு தாயின் துணிவை வெளிப்படுத்தும் நடிப்பு அபாரம்.அதுமட்டுமல்ல
சமயோசித குணம், குற்ற உணர்ச்சி, பாசம்,பயம், பதற்றம் என அத்தனை உணர்ச்சிகளையும் தன் கதாபாத்திரத்தின் வழியாக வெளிப்படுத்தி மிகை நடிப்பு தவிர்த்து, இயல்பான நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.

‘யூடியூப்’ புகழ் ரித்விக்கிற்கு இது முதல் படம். வீரா பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அக்கதாபாத்திரம் கேட்கும் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் பரத் நீலகண்டன் வில்லனாக பயமுறுத்தியிருக்கிறார். ‘ஆடுகளம்’ முருகதாஸ், ஆர்என்ஆர் மனோகர், ஷாரா, ஜாஃபர் இடுக்கி உள்ளிட்டோரின் நடிப்பும் படத்துக்குப் பலம் சேர்க்கிறது.

அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.

படம் தொடங்கியதும் எந்தவித வணிக சமரசங்களுக்கும் இடமளிக்காமல், நேரடியாக கதைக்குள் சென்றுவிடுகிறது.அதுவே இயக்குநரின் துணிச்சலாகப் பாராட்டு பெறும்.

அடுத்தடுத்த காட்சிகளுக்கான பதற்றம், விறுவிறுப்பு நம்மை தொற்றிக்கொண்டு நகர்வது படத்திற்குக் கூடுதல் பலம்.

கதாபாத்திரங்களின் வாழ்வியல் அனுபவங்களைக் காட்டுவதோடு இயற்கை பற்றிய இன்றைய கால அவல நிலையையும் காட்டி இயற்கையின் சீற்றம் பற்றிய எச்சரிக்கையையும் படம் உணர வைக்கிறது.மரத்தைக் காப்பாற்றினால் மரம் உன்னைக் காப்பாற்றும். இயற்கையைக் காப்பாற்றினால் அது உன்னைக் காப்பாற்றும். இயற்கையை அழித்தால் அது உன்னை அழித்து விடும் என்று ஆணித்தரமாகச் செய்தி சொல்கிறது.

பஸ்ஸில் ஆக்ஸிஜனுக்காகப் போராடும் காட்சிகள் எதிர்காலத்தில் இப்பூமி எதிர் கொள்ள போகும் நம் அபாயங்களைப் பற்றிய எச்சரிக்கைக் குறியீடாக தோன்றச் செய்துள்ளார் இயக்குநர்.
ஆக்சிஜன் இன்றி அவர்கள் தவிக்கும் தவிப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது .நாமும் மூச்சை இழுத்து விடுகிறோம். அந்த அளவுக்கு உணர்வுகளைக் கடத்தியுள்ளார் இயக்குநர்.நேர்மையான ஒரு கதையை எடுத்துக் கொண்டு சொல்ல முயன்ற இயக்குநர் கதாபாத்திரங்களின் தோற்றத்திலும் இந்த நேர்மையைப் பராமரித்து இருக்கலாம் சில ஒப்பனை விஷயங்கள் உறுத்துகின்றன.நயன்தாராவின் கலையாத ஒப்பனை நெருடுகிறது.கிராஃபிக்ஸ் காட்சிகள் காட்டிக் கொடுக்கின்றன.

படத்திற்கு தமிழ் அழகனின் ஒளிப்பதிவு கூடுதல் பலம் சேர்க்கிறது.ஒரே பஸ்ஸில் நடக்கும் காட்சிகளை வித வித கோணங்களில் அவர் சுவாரஸ்யப் படுத்தியுள்ளார்.விஷால் சந்திர சேகரின் பின்னணி இசை இதம். செல்வாவின் படத்தொகுப்பு கச்சிதம். கலை இயக்குநர் சதீஷ்குமாரின் உழைப்பு பாராட்டத்தக்கது.

‘அறம்’ படம் போன்ற உணர்வை கொடுக்கிறது இப்படம். சமகால ஆடல் பாடல் வண்ணமயமான காட்சிகள் என்ற வணிக ஓசை ஆக்கிரமிக்கும் சூழலில் மத்தியில் ஒரு நல்ல கதையையும் சூழல் சார்ந்த சிந்தனையையும் வெளிப்படுத்தும் இந்தப் படம் நிச்சயம் பாராட்டுக்குரியது தான்..

மொத்ததில் விறுவிறுப்பான திரைக்கதையில் அழுத்தமான செய்தியை அழகாகக் கூறியிருக்கும் படம் தான் ‘ஓ2’.