அப்பாதான் என் கதாநாயகன்: மனம் திறக்கிறார் விஜய் மில்டன்

vmiltn6ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த  விஜய் மில்டன் ,தமிழ்ச் சினிமாவில் தனக்கான நாற்காலியைத்  தயாரித்துக் கொண்டு நம்பிக்கை இயக்குநராக இப்போது அமர்ந்து இருக்கிறார்.அவர் இயக்கிய ‘கோலி சோடா’  படம் வணிக ரீதியிலான வெற்றியாலும் விமர்சகர்களின் வரவேற்பாலும் பேசப்பட்டது.  ‘கோலி சோடா’ படம் எளியவர்கள் வலிமையுள்ளவர்களாக மாறமுடியும் என்கிற நம்பிக்கையையும்  விதைத்தது.

இனி விஜய் மில்டனுடன்  பேசுவோம்.

கொஞ்சம் உங்கள் முன்கதை பேசலாமா..இயக்குநராக எது அல்லது யார் தூண்டுதல்?

இயக்குநர் ஆவது என்பதே எனது விருப்பம்.காரணம் என் அப்பாவே ஒரு இயக்குநர்தான். என் அப்பா பெயர் விஜயராஜ். அவர் இரண்டு படங்கள் இயக்கினார். இரண்டும் வெளியாக வில்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே படப்பிடிப்புக்குப் போவேன். அப் போதெல்லாம்   இப்போதுள்ளது போல  நாகரா வசதி கிடையாது. விடுமுறைநாட்களில் எல்லாம் கையில் டேப் ரெக்கார்டரை எடுத்துக் கொண்டு செல்வேன்.படப்பிடிப்பில் வசனங்களைப் பதிவு செய்வேன்.பாட்டு வரும்போது பதிவு செய்வேன்.

அப்பா அந்த அளவுக்கு  உங்களைப் ஊக்குவித்தாரா?

அது எனக்குள் ஒரு கனவு விதைக்கப்பட்ட காலம்.அப்பா என்னை எப்போதும் ஊக்கப் படுத்திக் கொண்டே இருப்பார்.படிக்கத்தூண்டுவார். நூலகத்தில் உறுப்பினராக்கினார். புத்தகங்கள் எடுத்து படிக்க வைப்பார்.அது மாதிரி பருவத்தில் எல்லாரும் கவிதை போல எழுதுவார்கள். நானும் அப்படி கிறுக்குவேன். அது கவிதை போல இல்லா விட்டாலும் அவர் அப்படிப் பாராட்டுவார். ஊக்கப் படுத்துவார். அப்படியே எனக்கு ஆர்வம் வந்துவிட்டது. எல்லாருக்கும் அப்பாதானே முதல் இன்ஸ்பிரேஷன்? அப்பாதானே  முதல் தூண்டுதல்?அப்பாதானே  முதல் கதாநாயகன்?.  எனக்கும் அப்படித்தான்.

ப்ளஸ்டூ முடித்தேன்.பிலிம் இன்ஸ்டிடியூட்டில் இயக்குநர் படிப்புக்கு சேர ஆசைப்பட்டேன். ஆனால் திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் படிப்பு சேரவேண்டும் என்றால் பட்டப் படிப்பு  தேவை.ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.அப்போதைய என் சூழலில்  மேலும் 3 ஆண்டுகளை வீணாக்க விரும்பவில்லை. படித்த ப்ளஸ்டூவுடன் கிடைக்கிற ஒளிப்பதிவாளர் பிரிவில் சேர்ந்தேன். மானசீகமாக இயக்குநருக்கான தேடலுடன்தான் படித்தேன். 1991ல் முடித்தேன். அப்போது சக்தி சரவணன், வின்சென்ட் செல்வா போல 9 பேர் என் வகுப்புத் தோழர்கள்.

சரி…அப்பா பெரிதாக வெற்றி பெறவில்லையே என்கிற  வருத்தம் உண்டா?

அவருக்கு அது அமையவில்லை  சூழல் என்றுதான் சொல்வேன். வேறு என்ன சொல்வது?

அப்படிப்பட்ட சூழலில் சிரமங்களை சந்தித்தாரா?

சிரமங்கள்தான். ஒரு சமயம் அப்பா வாங்கிய கடன் தவணை கட்டமுடியாமல் போனது. அப்போது கடன் கொடுத்தவர்கள் போலீசுடன் வந்து வீட்டிலுள்ள டிவியை தூக்கிக் கொண்டு போனது. எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.

ஒரு குடும்பத் தலைவன் தன் பிள்ளைகள் முன் வீடு புகுந்து ஒருவன் பொருட்களைத் தூக்கிக் கொண்டு போகும் போது அவர் முகத்தில் தெரிந்த அவமானம் கண்களில் தெரிந்த தோல்வியும் இயலாமையும் இன்றும் என் கண்முன் தெரிகிறது. அவ்வளவு சிரமத்திற்கிடையில்தான் தன் பிள்ளைகளை வளர்த்தார்.

அந்த வலி உங்களைப் பாதித்ததா?

எப்போதோ நடந்த அந்த சம்பவம் இன்னும் என் மனதில் நின்று எரிகிறது.அது யாருக்கும் வரக்கூடாது. எனக்கு 2 தம்பிகள்.அப்பா பட்ட சிரமங்கள் குடும்பம் பட்ட கஷ்டங்கள் எங்களை மிகவும் பொறுப்புள்ள பிள்ளைகளாக்கியது. நாங்களும் அப்படித்தான் வளர்ந்தோம்.

ஒளிப்பதிவாளராக..?

இதுவரை 25 படங்கள் பணியாற்றியிருப்பேன். எல்லாப் படங்களிலும் இயக்குநருக்கான என் தேடல்  இருந்து கொண்டேதான் இருந்தது. பெரும்பாலும் என் நண்பர்களே இயக்கியதால் மரியாதையுடன்தான் நடத்தினார்கள்.  

இப்படி நான் பணியாற்றிய ‘காதல்’ ,’தீபாவளி’, ‘தயா’, ‘போஸ்’ ,’வனயுத்தம்’ ‘ஹலோ’, ‘சாக்லெட்’ ,’வழக்கு எண் 18/9′ போன்றவை மறக்க முடியாத  பட அனுபவங்கள்.

ஆக உங்களை ஒளிப்பதிவு வேலை செய்த இயக்குநர் என்று கூறலாமா?

சினிமா மீது ஆர்வம் வந்த போதே எனக்கு இயக்குநர் கனவுதானே இருந்தது? எனவே ஒளிப்பதிவில் இறங்கினாலும் எனக்குள் ஒரு இயக்குநர் இருந்தே கொண்டே இருந்தான். ஒளிப்பதிவாளர் ஆனதில் எனக்கு வருத்தமில்லை. அதன் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.

இப்போது விக்ரமை வைத்து இயக்கும் போது கூட அவர் சொல்கிறார் ‘நீ கேமராமேனல்ல பொய் சொல்றே நீ டைரக்டர்தானே.. ‘  என்று கேட்டார். அப்பாவின் இயக்குநர் கனவு இப்படி ஆனது முதல் என் இயக்குநர் கனவை எரியும் தீயாக நெஞ்சுக்குள் அணையாமல் வைத்திருந்தேன். நாம் சாதிக்க வேண்டும் என்று என்று வெறி எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.

முதல் படத்தின் இயக்குநர் ஆனது எப்படி?

முன்பே சொன்னமாதிரி இயக்குநர் ஆவது என் விருப்பம். ஒளிப்பதிவாளர் ஆனது வேலை என்று ஆனது. ஒளிப்பதிவு செய்த போதே திரைக்கதைகள் எழுத ஆரம்பித்தேன்.எனக்குள் அது ஒரு பக்கம் நடக்கும். ஒளிப்பதிவு வேலை ஒரு பக்கம் நடக்கும்  அப்படி உருவான ஒரு கதைதான் ‘கோலிசோடா’. அக்கதை மூலம் நம் விருப்பப்படி நட்சத்திரங்கள் யாரையும் சாராது அதை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை வந்தது.

‘கோலிசோடா’ அனுபவம் எப்படி?

தயாரித்ததை கணக்கிட்டால் 14 மடங்கு லாபம் தந்த படம். சுமார் 140 திரையரங்குகளில் வெளியாகி கூடுதலாக 60 திரையரங்குகளிலும் வெளியானது. அந்த அளவுக்கு வரவேற்பு பெற்ற ஒரு படம் அது . அதில் எந்த நட்சத்திரமும் இல்லை. வெறும் 5டி கேமராவுடன் 10 பேருடன் கோயம்பேடு மார்க்கெட்டில் எடுத்தபடம். என் படக்குழு மொத்தமே 20 பேர்தான் இருப்போம். எளிமையானவர்கள் வலிமையான வர்களாக மாறுவதும், தனக்கான அடையாளம் தேடும் கருத்தும் எல்லாரையும் கவர்ந்தது. 

மறக்க முடியாத  பாராட்டு..?


ரஜினிசார் போன் செய்தது மறக்க முடியாதது விக்ரம், விஜய் போன்ற பலரும் பாராட்டினார்கள் .அவை மறக்க முடியாதவை.பல திரைப்பட விழாக்களிலும் பாராட்டப்பட்டது;பரிசு பெற்றது. ஆனால் எங்கள் அப்பா பாராட்டியது. தேசியவிருதுக்குச் சமமான சந்தோஷம்.

தேசியவிருதுக் குழுவினர் பாராட்டிய படம். ஆனால் மைனர் பசங்க வன்முறை என்கிற விஷயத்தால் விருது கிடைக்க வில்லை என்று கேள்விப் பட்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. உதவி இயக்குநர்களிடமிருந்து பாராட்டி1500 மேசேஜ்கள் வந்ததும்  மறக்க முடியாதது

v-miltnஇயக்கும் அடுத்த படம் பற்றி..?


நான் இப்போது இயக்கும் படம் ’10 எண்றதுக்குள்ள ‘ .விக்ரம்தான் நாயகன். சமந்தா, ஷாக்கி ஷெராப், அபிமன்யு சிங், ‘முண்டாசுப்பட்டி’ முனிஷ் நடிக்கிறார்கள்.

90 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. 2 பாடல்கள், க்ளைமாக்ஸ் மட்டும் பாக்கியுள்ளது.

விக்ரம் ஒப்பந்தமான பின்னணி?


‘கோலிசோடா’ தேடிக் கொடுத்த வாய்ப்புதான் இந்தப்படம். வேறு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால் கோலி சோடாவின் சம்பளம்தான் இந்தப்படம்.

அப்படி யென்றால்  ‘கோலிசோடா’வில் பெரிய பண ஆதாயம் வர வில்லையா?


அப்படிச் சொல்ல வில்லை. கோலிசோடா மூலம் அடைந்த  பெரியஆதாயங்களில் இது ஒன்று. பெரியலாபம் இது என்ற அர்த்தத்தில் சொன்னேன்.

சரி விக்ரமை இயக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?


முதலில் அவர் ஒப்பந்தமானதே சுவாரஸ்யமானது. ‘கோலிசோடா’ படத்தை சத்யம் திரையரங்கில் பார்த்து விட்டு போன் செய்து பாராட்டினார். எனக்கு ஏதாவது கதை இருக்கிறதா என்றார்.ஒன் லைன் சொன்னேன். உடனே கூப்பிட்டார். அப்போது இரவு 10 மணி. வரச்சொன்னார். போய்ச கதை சொன்னேன். உடனே ஓகே செய்தார். அந்தப்படம்தான் ’10 எண்றதுக்குள்ள’ .கதை சொல்லி ’10 எண்றதுக்குள்ள’ படத்தைவிக்ரம் முடிவு செய்தார்.அவர் எவ்வளவு பெரிய நடிகர்.ஆனால் எல்லாவற்றையும் மறந்து தன்னை ஒப்படைப்பவர். அவ்வளவு ஊக்கம், அர்ப்பணிப்பு உள்ளவர். முதல்படம் மாதிரி நினைத்து நடிப்பவர். 15 வயது பையன் போல இயங்குபவர். முருகதாஸ் சாரின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது.

அது என்ன தலைப்பு ’10 எண்றதுக்குள்ள’?


வண்டி வாகனங்களில் போவோருக்குத்தான் ஒவ்வொரு வினாடியும் முக்கியம் என்பது தெரியும். 600மைல் வேகத்தில் செல்லும் விமானிக்கு சில வினாடிகள்கூட  முக்கியம்தான்.. தொலைவில் குறுக்கே ஏதாவது வரும் போது அந்த வினாடியில் அவர்கள் சிந்தனை,செயல்படும் வேகம் முக்கியம். லாரியில் காரில் 140கி.மீ வேகத்தில்   போகும் போது சில வினாடிகள் கூட  முக்கியம்தான். ’10 எண்றதுக்குள்ள’ என்கிற இந்த வார்த்தை பல இடங்களில், பல சூழல்களில் பிரபலம். எனவே  வேகம் நேரம் இவற்றைக்  குறிக்கும் வகையில்அதை தலைப்பாக வைத்தேன்

-நமது நிருபர்