‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் ‘ விமர்சனம்

கிராமத்துப் பின்னணியில் முறுக்காகத் திரியும் முரட்டுக்காளை வாலிபர்கள், காதல், அடிதடி,வீரம், கோபம், வன்மம், வீராப்பு, கொஞ்சம் கலாச்சாரம், சென்டிமென்ட் என்று விறுவிறுப்பான திரைக்கதை மசாலாவில் படங்கள் எடுப்பவர் முத்தையா.

இந்த வரிசையில் வந்துள்ள படம் தான் இது.கூடுதலாக ராமநாதபுரத்து இந்து – இஸ்லாமிய கலாச்சாரம் சார்ந்த விஷயங்களையும் கலந்துள்ளார்.
இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு வேட்டி கட்டி அடிக்க விட்டுள்ளார்.இப்படம் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வெடிக்காரன் பட்டி எஸ்.சக்திவேலின் ட்ரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ளது.

ஒரு பெண்ணுக்காக மோதிக் கொள்ளும் கதை தான் இது.
வேறு எதுவும் யோசிக்க வேண்டாம் நிற்க, என்று அதை ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள்

கதாநாயகி தமிழ்ச்செல்வியை அவரது இரண்டு முறைமாமன்களும் சொத்துக்காகத் திருமணம் செய்ய நினைக்கிறார்கள்.அவள் மறுக்கிறாள். அதனால் அவளை ஊரை விட்டுத் தள்ளி வைக்கிறார்கள் .ஊருக்கு வெளியே தனது அண்ணன் மகள்களுடன் வாழ்ந்து வருகிறாள். இந்நிலையில் சிறையில் இருக்கும் காதர் பாட்ஷாவைச் சந்திக்கச்செல்கிறார். முடியவில்லை. பிறகு இதனை அறிந்த காதர் பாட்சா தன்னைத் தேடி வந்த அந்தப் பெண்ணைத் தேடி அந்த ஊருக்கே செல்கிறார்.அங்கே காதருக்கும் கதாநாயகன் மாமன்களுக்கும் மோதல் வருகிறது.
செல்வி காதரைத் தேடிச் சென்றது ஏன் ?அவர்களுக்குள் என்ன சம்பந்தம்? பெற்ற தாயார் இருக்கும்போது அண்ணங்களின் மகள்கள் ஏன் செல்வியிடம் வளர வேண்டும்?

காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் யார்?அவருக்கு அந்த பெயர் எப்படி வந்தது?போன்ற பல கேள்விகளை நம்மிடம் எழுப்ப விட்டு ஆங்காங்கே கிளைக் கதைகளை படர விட்டு கதை சொல்கிறார் முத்தையா.

காதர்பாட்ஷாவாக நடித்துள்ள ஆர்யா, நடித்துள்ளதை விட எதிரிகளை அடித்துள்ளது தான் அதிகம்.ஆமாம் அந்த அளவிற்கு சண்டைக்காட்சிகளில் சரவெடி வெடித்துள்ளார்.வேட்டியை மடிச்சு கட்டி விசிறி அடிக்கிறார்.சண்டைக் காட்சிகளில் அசத்திய அளவுக்கு மற்ற காட்சிகளில் சோபிக்கவில்லை.குறிப்பாக வசன உச்சரிப்பில் கவனம் தேவை.

துணிச்சல் மிக்க ஒரு பெண்ணாக எதிரிகளை எதிர்கொள்கிற நாயகி சித்தி இத்னாதி,அண்ணன் மகள்களுக்காக உருகி பாசக் காட்சிகளில் கவர்கிறார்.தன் பாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.

மதுசூதன ராவ், ஆடுகளம் நரேன், தமிழ், அவினாஷ், ஆர்.கே விஜயமுருகன் என எதிர்மறைப் பாத்திரங்களில் வரிசை கட்டி வருகிறவர்கள் ஆர்யாவுடன் மோதி அடிபட்டுப் போகிறார்கள். மோதல் பழிவாங்கும் காட்சிகளில்
சிகரெட்டில் வெடிகுண்டு வெடிக்கும் விபரீத கற்பனை பயமுறுத்தல் எல்லாம் உள்ளது.

இஸ்லாமியப் பின்னணியில் நடித்துள்ள பிரபு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தும் காட்சிகளில் தான் யார் என்று காட்டிவிடுகிறார்.
பிரபுவின் மகளாக வரும் சின்னத்திரை நடிகை ஹேமா தயாள் இனம் கண்டு கொள்ளும் வகையில் நடித்து கவனம் பெறுகிறார்.முத்தையா கூட்டணியில் எதிர்பாராத வரவாக வரும் பாக்யராஜ் சிறப்புத் தோற்றத்தில் சில காட்சிகளில் வருகிறார்:

நகைச்சுவைக் காட்சிகளில் விக்னேஷ் காந்தும் சிங்கம் புலியும் சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.

முத்தையா படங்களில் சண்டைக் காட்சிகளோடு உணர்ச்சிமிக்க செண்டிமெண்ட் காட்சிகளும் இருக்கும்.அந்த சமநிலை மாறி இதில் சண்டைக் காட்சிகள் மேலோங்கி உள்ளன.கதாநாயகியிடமிருந்து கதை நழுவி, கதாநாயகன் பக்கம் போய் சேருகிறது.
இரண்டாம் பாதியில் கதைக்குள் கதை என விரிகிறது. இதற்கான காட்சி அமைப்பில் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை, ஆக்சன் காட்சிகள் அளவிற்கு பாடல் காட்சிகள் இல்லாதது ஏமாற்றம்.

பற்றி எரியும் வெக்கையைத் தனது கேமராவுக்குள் சிறைப்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.

‘ஸ்டண்ட் மாஸ்ட்டர்’ அனல் அரசு தன்னால் முடிந்தவரை ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் மாறுபாடு காட்ட முயன்றிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் கவனம் பெற்றாலும் நீள சண்டைக் காட்சிகளுக்கு கத்திரி போட்டு இருக்கலாம்.

பெண் சிசுக்கொலை, மத நல்லிணக்கம், பெண் கல்வி போன்றவற்றைப் பற்றிப் படம் பேசுகிறது. இந்து-இஸ்லாமிய ஒற்றுமையை பேசும் வசனங்கள் பாராட்டக்குரியது.

தனது உருவகத்தில் வைத்துள்ள டெம்ப்ளேட் கிராமமாக
ஊர் சபை கூடும் பழைய கிராமத்தையே முத்தையா காட்டியிருந்தாலும் பட உருவாக்கத்தில் சற்று மேம்பட்டு இருக்கிறார்.படத்திற்காக அவரதுகடுமையான உழைப்பு தெரிகிறது.காதர் பாட்சாவின் பாத்திரத்தை ஆழப்படுத்தி மாற்றி இருந்தால் இந்த படம் சில படிகள் உயர்ந்திருக்கும்.