‘வீரன் ‘விமர்சனம்

தரமான கவனிக்கத்தக்க படங்களை எடுத்து பெயர் பெற்ற திரைப்பட நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ். இந்நிறுவனம் தயாரித்துள்ளது என்கிற போதே வீரன் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடிவிட்டது.

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் வழங்கும் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்து ‘வீரன்’ படம் உருவாகி உள்ளது.

சூப்பர் ஹீரோக்கள் நாயகனாக வந்த ஹாலிவுட் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
அவென்ஜர்ஸ், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்றவை அவ்வகையில் புகழ்பெற்றவை.

நம்மாலும் அப்படி ஒரு முயற்சி செய்ய முடியும் என்று முயன்றிருக்கிறார்கள் வீரன் படக்குழுவினர் . ஹாலிவுட்டில் அவர்களால் இமயமலை முடியும் என்றால் நம்மால் ஒரு பரங்கிமலை முடியும் என்று நம்பி இறங்கியுள்ளார்கள்.

சூப்பர் ஹீரோ கதைகளைப் பொறுத்த வரை அவை குழந்தைகளிடம் அதிக அளவு போய்ச் சேர்ந்தவை .அப்படி குழந்தைகளுக்கும் பிடிக்க வேண்டும் என்றுதான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.பலரும் தொடத் தயங்கும் முயற்சி என்பதால்
இதுவே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

படத்தை இயக்கும் இயக்குநர் ‘மரகத நாணயம்’ போன்ற நகைச்சுவை முலாம் பூசிய கலகலப்பான வெற்றிப் படத்தைக் கொடுத்த ஏ.ஆர்.கே. சரவணன்.அவர் இந்தக் கதைக்களத்தை எப்படி கையாண்டு இருப்பார்?இளவட்டங்களிடம் பிரபலமாக உள்ள ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோவாக எப்படி இருப்பார்? இப்படி வணிக எதிர்பார்ப்புகள் பல உண்டு இப்படத்திற்கு.

வீரன் படத்தின் கதை என்ன?

படத்தின் கதாநாயகன் குமரன் வீரனூரில் வாழ்ந்து வருகிறான்.
தனது சிறு வயதில் மின்னல் தாக்குதலுக்கு ஆளானவன்,சுய நினைவை இழக்கிறான். தனது அக்கா மூலம் சிங்கப்பூர் சென்று மருத்துவ சிகிச்சைக்குப் பின் சில நாட்கள் கழித்து சுயநினைவு வருகிறது. பிறகு வீரனுக்கு,ஒரு ஆச்சரியமான சக்தி தனக்கு இருப்பது தெரிய வருகிறது.அதன்படி அடுத்தவரின் மூளையைக் கட்டுப்படுத்தி இயக்க முடியும்.ராமரின் வனவாசம் போல் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊர் செல்கிறான்.நண்பர்களுடன் ஜாலியாக இருக்கிறான்.

இந்நிலையில் அங்கே வரும் கார்ப்பரேட் வில்லன் பல கோடி ரூபாயிலான ஒரு திட்டத்தினை அந்த ஊரில் செயல்படுத்த முயல்கிறான்.அவனை அப்படியே விட்டால் பெரும் ஆபத்தாகி ஏராளமான உயிர்ப்பலிகள் நேரும் என்பதை உணர்ந்து, தனது சக்தியால் வீரன் அதைத் தடுத்து நிறுத்தி ஊரைக் காப்பாற்றுவது எப்படி என்பதுதான் கதை.

ஹிப் ஹாப் ஆதி, குமரனாக வரும் போதும் சரி, வீரனாக வரும் போதும் சரி தோற்றத்திலும் நடிப்பிலும் அனைவரையும் கவர முயல்கிறார்.ஆடை வடிவமைப்பு ஆதியின் வீரன் லுக்கை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
குறிப்பாகச் சண்டை காட்சிகளில் கைத்தட்டல் வாங்குகிறார்.
அந்த அளவுக்கு இப்படத்தில் ஸ்கோர் செய்துள்ளார். இப்படத்தின் மூலம் தன் மீதுள்ள எதிர்பார்ப்புக்குத் தீனி போட்டுள்ளார்.

கதாநாயகியா வரும் ஆதிரா மற்றும் ஆதியின் நண்பனாக வரும் சசி இருவரின் நடிப்பும் படத்திற்குப் பலம். முனீஸ்காந்த் – காளி வெங்கட் கூட்டணி அடுத்த பலம்.இவர்கள் தோன்றியதுமே திரையரங்கில் சிரிப்பு மத்தாப்புகள் பற்றிக் கொள்ளும்.வில்லனாக வரும் வினய்யை மேலும் காட்சிகள் கொடுத்து பயன்படுத்தி இருக்கலாம். அடுத்த வில்லனாக வரும் நடிகர் பத்ரி கலக்கி விட்டார். நடிகர் செல்லா, போஸ் வெங்கட், சின்னி ஜெயந்த் ஆகியோரின் நடிப்பு தேவைக்கேற்ற அளவில் இருந்தது. மற்றவர்கள் நம்பாதபோது வீரனை மட்டும் நம்பும் அந்த முதியவரின் நடிப்பு பிரமாதம்.

நம்பிக்கைக்கும், மூடநம்பிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார் இயக்குநர்.

தீபக் டி. மேனனின் ஒளிப்பதிவு சிறப்பு.பாடல்களை விட பின்னணி இசையில் பின்னியுள்ளார் ஆதி.சூப்பர் பவர் பற்றி இவ்வளவு நீளமாக விளக்கத் தேவையில்லை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்.
வீரன் குடும்பத்தினருடன் காணும் படியான பொழுதுபோக்குப் படமாக வந்துள்ளது.

குறைகளைப் புறந்தள்ளி ,விலகி நின்று யோசித்து அதைச் செயல்படுத்தியுள்ள முயற்சியைப் பாராட்டலாம். தமிழில் ஒரு வித்தியாசமான முயற்சி வீரன், அதில் இயக்குநர் வெற்றி பெற்று விட்டார் என்றே கூற வேண்டும்.