‘கிடா ‘விமர்சனம்

இதுவரை சிறு முதலீட்டுப் படங்களிலிருந்து தான் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களும்,ரசனை வளர்க்கும் புதிய பார்வை கொண்ட படங்களும் தமிழ் ரசிகர்களுக்குப் பரிசாகக் கிடைத்துள்ளன.அந்த வரிசையில் வந்துள்ள படம் தான் ‘கிடா’

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைதன்யா தயாரிப்பில் உருவாகி உள்ள  இப்படத்தை அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கியுள்ளார்.

நடிப்புக் கலைஞர்களாக பூ ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் நடித்துள்ளனர்.

மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள் பூ ராமு, அவரது மனைவி மற்றும் பத்து வயதுள்ள பேரன் மாஸ்டர் தீபன்.

தென்னை ஓலையில் கீற்று பின்னி வாழ்க்கையை நகர்த்தும் ஜீவனம். தீபாவளி நெருங்குகிறது. தனது பேரன் சுமார் இரண்டாயிரம் ரூபாய் மதிக்கத்த உடை ஒன்றை கேட்க, அதை வாங்கித் தருவதாக வாக்கு கொடுத்து விடுகிறார் தாத்தா பூ ராமு.பணத்தட்டுப்பாடு ஏற்படவே தனது பேரன் ஆசையாக வளர்த்து வரும் கிடா ஒன்றை விற்க முடிவெடுக்கிறார் .அது சாமிக்கு வேண்டி விட்ட கிடா என்று கூறி எவரும் வாங்க மறுக்கின்றனர்.

இது ஒரு புறம் என்றால்,மற்றொருபுறம், கோழி ,ஆடு கறி வெட்டிக் கொடுக்கும் கூலி வேலை செய்து வருகிற காளி வெங்கட்டுக்கு திருமண வயதில் ஒரு மகன்.
பல காலம் அடிமை போல கூலிக்கு வேலை பார்த்த இடத்தில் காளி வெங்கட்டுக்குத் தகராறு ஏற்படுகிறது.அடிமைத்தனத்திலிருந்து மீண்டு
தீபாவளி தினத்தில் சுயமாக கறிக்கடைத் தொழிலைத் தொடங்க வேண்டும் என்று ஒரு வைராக்கியம்.

அதற்காக, கிடா தேடி அலைகிறார். பலரும், அவரை நம்பி கிடாவைக் கொடுக்க மறுக்கிறார்கள். கடைசியாக, பூராமுவின் கிடாவை வாங்குவதாகக் கூறிவிடுகிறார்.

இதனால், தீபாவளிக்கு தனது பேரனுக்கு துணி எடுத்துக் கொடுத்துவிடலாம் என்று பூ ராமு நம்பிக்கையோடு இருக்கிறார் தன்னைக் கேலி பேசிய ஊரார் முன்னால் தனது தொழிலைக் தொடங்கி விடலாம் என்றும் காளி வெங்கட்டும் நம்பிக்கையோடு உள்ளார்.இந்த இருதரப்பு நம்பிக்கைகளையும் பொய்யாக்கும் விதத்தில்
கிடா காணாமல் போய்விடுகிறது. யாரோ திருடர்கள் திருடிச் சென்று விடுகின்றனர்.இதனால் இருவருக்கும் அதிர்ச்சி.அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கிடா படத்தின் மீதிக் கதை.

எப்போதுமே தனது கதாபாத்திரத்தை உட் கிரகித்து வெளிப்படுத்தி நடிக்கும் பூராமு இந்தப் படத்திலும் அந்தப் பாத்திரமாகவே மாறி உள்ளார்.தனது பேரன் கேட்டதற்காக, அவனுக்கு உடை எடுத்துக் கொடுக்க அவர் படும் பாடுகளை நம் கண்முன்னே கொண்டு வந்து நம் கண்களில் ஈரம் கசிய வைக்கிறார்.பணம் கேட்டு இல்லை என்றதும், அவர் கொடுத்த 200 ரூபாயைப் பெற்றுக் கொள்ளாமல், கஷ்டம் கொடுத்திருந்தா மன்னிச்சிடுங்கன்னு சொல்லிட்டு போகிற இடத்தில் வறுமையில் செம்மை என்று வாழ்பவர் என்பதை உணர்த்துகிறார்.தீபாவளி தொடங்கி விட்டதே, தனது பேரனுக்கு உடை வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என்று மனமுடைந்து பரிதவித்து,தவிக்கும் காட்சியில் அப்படி ஒரு நடிப்பு.

பூ ராமுவின் மனைவியாக நடித்த பாண்டியம்மா நடிப்பையும் பாராட்டி ஆக வேண்டும்.நட்சத்திர நடிகைகளின் நடிப்புத் திறமையை அனாயாசமாக வெளிப்படுத்தி விடுகிறார்.
குறிப்பாகப் பேரனின் உடை வாங்க பணம் கிடைத்துவிட்ட பூரிப்பில் நடந்த நடையிலும், பேரனுக்காக வாங்கிய துணியை தொட்டுப் பார்க்கும் இடத்திலும் இயக்குநரின் முத்திரை மிளிர்கிறது.

படத்தில் தாத்தா ,பேரனின் பாசம் இயல்பாக வெளிப்பட்டுள்ளது.பேரனாக நடித்த மாஸ்டர் தீபன், அழகாக நடித்திருக்கிறான்.

குடிகாரனாகவும் கசாப்பு கடையில்  கறி வெட்டும்  வெள்ளைச்சாமியாகவும் வருகிறார் காளி வெங்கட்.ஒருபக்கம் பூராமு நடிப்பில் மதிப்பெண்களை அள்ள இன்னொரு பக்கம் அவருக்கு இணையாக நடிகர் காளி வெங்கட்டும் போட்டி போட்டு ஸ்கோர் செய்கிறார். அவர் புதுக் கடைக்கு வாடிக்கையாளர் பிடிக்கும் காட்சிகள் சிரிப்பு வெடிகள்.

பிற கதாபாத்திரங்களில் நடித்த, காளி வெங்கட்டின் மனைவி, மகன், மகனின் காதலி, டீக்கடைக்காரர், காளி வெங்கட்டின் நண்பர், என படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இரு வேறு மன உணர்வுகளின் போராட்டத்தை பேசும் கதைகளின் நடுவே  காதல் ஜோடிகளாக வரும் பாண்டி மற்றும் ஜோதி  இருவருமே கதைக்குத் தேவையானதைச் சிறப்பாகச் செய்திருக்கின்றனர்.

படத்தில் சிறுசிறு பாத்திரங்களில் வரும் மனிதர்களின் மொழியும் உடல் மொழியும் ஓரழகு.
அவர்கள் பேசும் வழக்காறுகளும் மண்ணின் மணம் வீசும் சொலவடைகளும் இன்னொரு பக்கம் ரசம் கூட்டுகின்றன.
கிராமங்களில் தென்படும் கருணையும் அன்பும் கசியும் பாத்திரங்களையும் ஆங்காங்கே தொட்டுக் காட்டியுள்ளார்.

தீசனின் இசை மனதுக்கு இதம். பின்னணி இசை கதையோடு நடை போடுகிறது.
ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவு இயல்பு. அவரது கேமரா மூலம் கதையின் பின் புலங்கள், கதை மாந்தர்கள் தொடங்கி ஆட்டின் கண் அசைவு வரை அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. காட்சிகள் பலவற்றையும் இயல்பு மாறாமல் செயற்கை பூச்சில்லாமல் எடுத்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ்.

வணிகப் படங்கள் பார்த்தவர்களுக்கு இதில் இடம்பெறும் காட்சிகள் வேகக் குறைவாகத் தோன்றலாம். ஆனாலும் உயிரோட்டம் குறையாமல் உள்ளன.

சினிமாத்தனத்திற்கு இடம் கொடுக்காமல் அழகான தொரு வாழ்வியலைக் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ரா வெங்கட். ஒரு துணிக்காகவா இவ்வளவு போராட்டம் என்று நினைப்பவர்களுக்கு ஆமாம் அந்த துணிக்காகத்தான் இத்தனைப் போராட்டமும் என்று மனதில் பதிய வைத்திருக்கிறார் இயக்குநர்.ஒரு சாண் வயிற்றிற்காகத் தானே உலகில் பலரும் பாடுபடுகிறார்கள்?

மக்களிடையே கொண்டாடப்படும் விழாக்கள் பண்டிகைகள் வறுமையில் உள்ளவர்களிடம் எந்த விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை இழை பிரித்து அழகாகக் கூறியுள்ளார் இயக்குநர்.

தமிழ்த் திரை உலகத்திற்கும் ரசிகர்களுக்கும் உணர்வுகளைப் பேசும் நல்லதொரு படைப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரா வெங்கட்.