குடிமகான் எனக்கான வாய்ப்புகளை பெற்றுத்தரும் ; நடிகர் விஜய் சிவன் நம்பிக்கை!

தமிழ் சினிமாவில் வாரந்தோறும் குறைந்தது மூன்றில் இருந்து ஐந்து படங்களாவது வெளியாகின்றன.

இவற்றில் நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய படங்களுடன் சிறிய படங்கள் போட்டியிட்டு தங்களது தனித்தன்மையை நிரூபிப்பது சவாலான விஷயமாகவே இருக்கிறது. எப்போதோ ஒரு பரியேறும் பெருமாள், லவ் டுடே, டாடா போன்ற படங்கள் தங்களை நிரூபித்தாலும் அவற்றின் பின்புலத்தில் உள்ள ஏதோ ஒரு பிரபலம் காரணமாக ரசிகர்களின் பார்வைக்கு மிகப்பெரிய அளவில் கொண்டு செல்லப்பட்டதால் தான் அவற்றின் தனித்தன்மையும் ரசிகர்களிடம் சென்றடைந்தது.

அதேசமயம் புதிய படைப்பாளிகளின் தயாரிப்பில், இயக்கத்தில் உருவாகி நல்ல கதையம்சத்துடன் வெளியானாலும் தங்களது படைப்பின் மகத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு முன்னரே வாய்ப்புகள் பறிக்கப்படுவது என்பது ரொம்பவே வேதனையான விஷயம்.

அப்படி கடந்த மாதம் அறிமுக நடிகர், அறிமுக இயக்குநர் என குடும்பப்பாங்கான ஒரு படமாகத்தான் ‘குடிமகான்’ திரைப்படம் வெளியானது.

ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களிடம் ஏகோபித்த பாராட்டை பெற்றாலும் இந்த பாராட்டுக்கள் பொதுமக்களை சென்றடைவதற்குள், குறைவாக ஒதுக்கப்பட்டிருந்த காட்சிகள், அடுத்தடுத்த படங்களின் அணிவகுப்புகள் ஆகியவை இந்த படத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய வெற்றியை தங்களையே அறியாமல் பறித்துக்கொண்டன என்பதுதான் நிஜம்.

அப்படி ஒரு நல்ல பொழுதுபோக்கான, நகைச்சுவை அம்சம் நிறைந்த, குடும்பப்பாங்கான, தரமான படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாகவும் நடித்திருந்தவர் விஜய் சிவன்.

நாளைய இயக்குநர் சீசன் 6ல் சிறந்த குறும்படத்திற்கான இயக்குநர் (ரன்னர்) விருது பெற்ற என்.பிரகாஷ் என்பவர் தான் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

படம் உருவான விதம் குறித்தும் வெளியானபோது கிடைத்த பாராட்டுக்கள் மற்றும் அனுபவம் குறித்தும், தனது அடுத்த கட்ட திரைப்பயணம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் தயாரிப்பாளரும் படத்தின் ஹீரோவுமான விஜய் சிவன்.

“சினிமா மீது, குறிப்பாக நடிப்பின் மீது இருந்த தீராத ஆசையில்தான் சினிமாவுக்குள் அடி எடுத்து வைத்தேன். சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பது அவ்வளவு சுலபம் அல்ல என்கிற நிலையில் தான், குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு, பின்னர் நாளைய இயக்குநர் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. அந்த சமயத்தில் பிரகாஷுடன் நட்பு ஏற்பட்டு , அதன்பின் எங்களது பங்களிப்பில் வெளியான குட்டி தாதா திரைப்படத்திற்கு கிடைத்த விருது எல்லாமே அடுத்ததாக சினிமாவை நோக்கி எங்களை நகர்த்தின.

பொதுவாக குறும்படங்களில் வெற்றி பெற்றவர்கள் சினிமாவில் நுழையும்போது அந்த குறும்படத்தையே தங்களது முதல் படைப்பாக வெளிக்கொண்டு வர முயற்சிப்பார்கள். ஆனால் எங்களது குட்டி தாதா படத்திற்கு பட்ஜெட் ரீதியாக நிறைய தேவைப்பட்டதால், அதற்கு முன்னதாக வேறு ஒரு கதையை படமாக்க நானும் இயக்குநர் பிரகாஷும் தீர்மானித்தோம்.

அது கொரோனா அலை பரவ ஆரம்பித்திருந்த நேரம்.. அந்த சமயத்தில் உருவாக்கியது தான் இந்த குடிமகான் படத்தின் கதை. பின்னர் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே இந்த படத்தை கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி நகர்த்தி ஒரு முழுப்படமாக கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியிட்டோம்.

குடும்பத்துடன் இந்த படத்தை பார்த்த பலரும் நீண்ட நாளைக்கு பிறகு படம் முழுவதும் பல காட்சிகளில் மனம் விட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார்கள் என பத்திரிகையாளர்களும் திரையிட்ட திரையரங்கினரும் கூட ஆச்சரியத்துடன் கூறினார்கள். கேட்கும்போதே சந்தோசமாக இருந்தது என்றாலும் இந்த படத்தை வெகுஜன மக்களிடம் கொண்டு செல்வதற்கான கால அவகாசம் எங்களுக்கு திரையரங்குகள் மூலமாக கிடைக்காமல் போனது உண்மையிலேயே வருத்தம் தான். தற்போது இந்த படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம்.

நான் ஒரு நடிகனாக திரையுலகில் பயணிக்க வேண்டும், அதற்கான என்னுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமான ஒரு விசிட்டிங் கார்டாகத்தான் இந்த படத்தை தயாரித்தேன்.

அதனால் தான் முதல் படம் என்றாலும் எங்கேயும் ஹீரோயிஷம் தலை தூக்காமல் ஒரு நல்ல கதை, அதில் ஒரு நல்ல கதாபாத்திரம் மூலமாக ரசிகர்களிடம் சென்றடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. அதில் நான் உறுதியாக இருந்தேன்.

அதனாலேயே இயக்குநர் பிரகாஷிடம் கதையையும் மற்ற கதாபாத்திரங்களுக்கு தேவையான இடத்தையும் கொடுக்கும் முழு சுதந்திரத்தையும் ஒப்படைத்து விட்டேன். பொதுவாகவே எனக்கு மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவது பிடிக்காது. அதனால் என்னுடைய கதாபாத்திரத்தில் மட்டும் நான் கவனம் செலுத்தினேன்.

இந்த படத்தில் எனக்கு உறுதுணையாக நின்று சக கதாபாத்திரங்களில் நடித்த சாந்தினி தமிழரசன், நமோ நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட அனைவருமே நான் ஒரு புதுமுகம் என்கிற எண்ணம் சிறிதும் இல்லாமல் எந்த ஈகோவும் இல்லாமல் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். என்னிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதற்காக அவர்கள் என்னை உற்சாகப்படுத்தி தங்களது ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

மற்றபடி ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் ஒரு நல்ல படமாக கொண்டு வருவதற்கான அனைத்து செலவுகளையும் செய்தேன். இந்த படத்திற்கு கிடைத்த பாராட்டுக்கள் மூலமாக பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரின் கவனத்திற்கு இது செல்லும் என ஒரு எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. திரையரங்கில் வெளியான சமயத்தில் அதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்ததால் ஓடிடி மூலமாக இந்த படம் வெளியாகும்போது நிச்சயமாக பலரது கவனத்தை ஈர்க்கும்.. எனது நடிப்பிற்கான அங்கீகாரமும் அதற்கு அடுத்து திரையுலகில் நான் தொடர்ந்து ஒரு நடிகனாக பயணிப்பதற்காக வாய்ப்புகளும் நிச்சயமாக கிடைக்கும் என நம்புகிறேன்” என்கிறார் விஜய் சிவன் நம்பிக்கையுடன்.