‘திருவின் குரல்’ விமர்சனம்

குடும்பத்தைத் துன்புறுத்தும் வன்முறைக்காரர்களின் அநியாயத்துக்கு எதிரான மனசாட்சியின் குரலாக ஒலிப்பதே திருவின் குரல்.வாய் பேச முடியாத ஒரு குரலற்ற நாயகன் தன் அதிரடி செயல்கள் மூலம் வெளிப்படுத்தும் குரல் தான் இந்தப் படம்.ஹரீஷ் பிரபு இயக்கி உள்ளார்.

திரு என்கிற பெயர் கொண்ட அருள்நிதி வாய் பேச முடியாத ஒரு மாற்றுத்திறனாளி. தன் குடும்பம் உறவு என்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்.அப்பா ,பாட்டி, அக்கா, அக்கா மகள் , அத்தை, அத்தை மகள் என்று பாந்தமான குடும்பம்.அத்தை மகளையோ விரைவில் திருமணம் செய்து கொள்ளும் நிலையில் மகிழ்ச்சி மனநிலையில் இருக்கிறார்.
அந்த மகிழ்ச்சியான குடும்பத்தை ஒரு சம்பவம் பாதிக்கிறது. தந்தை பாரதிராஜா கட்டட வேலைகள் நடக்கும் இடத்தில் ஒரு விபத்தைச் சந்திக்கிறார். அதற்காக மருத்துவமனை செல்கிறார். அங்கே வேலை பார்க்கும் வார்டு பாய், லிப்ட் மேன், மார்ச்சுவரி ஊழியர், செக்யூரிட்டி என நாசக்கார கும்பல் நால்வரும் கூட்டணி சேர்ந்து சில திரை மறைகளை செய்கிறார்கள்.அதில் கொலை கொள்ளை வழிப்பறி போன்றவை அடக்கம். அவர்களுக்கும் அருள்நிதிக்கும் மோதல் வருகிறது. அந்த நால்வர் அருள் நிதியைப் பழிக்கு பழிவாங்கத் துடிக்கிறார்கள் அதை அருள்நிதி எப்படி எதிர் கொள்கிறார் என்பது தான் படத்தின் கதை.

முதலில் செவித்திறன் பாதிப்படைந்த வாய் பேச முடியாத அந்த கதாபாத்திரத்தை வளரும் இந்த நிலையிலேயே ஏற்றுக் கொண்ட அருள்நிதியின் துணிச்சலை பாராட்டலாம் அந்த சவாலை அவர் சந்தித்து எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.வாய்மொழி இல்லாத நேரங்களில் உடல் மொழியால் நன்றாக வெளிப்படுத்தி நம் மேல் பதற்றத்தைக் கடத்துகிறார்.
அவரது அதிரடி ஆக்சன் எல்லாம் முந்தைய படங்களின் சாயல்களில் தான் உள்ளது என்றாலும் அதை மறந்து ரசிக்கிறோம். சென்டிமென்ட் எமோஷன் என பல ஏரியாக்களிலும் அவர் சபாஷ் பெறுகிறார். குடும்பத்தை நேசிக்கும் ஒரு தந்தையாக பாரதிராஜா பாசத்தைக் காட்டும்போதும் மருத்துவமனை வலியால் துடிக்கும் போதும் ஒரு தேர்ந்த நடிகராக நம் மனதில் குடியேறுகிறார் .பாரதிராஜாவின் அம்மாவாக வரும் அந்த பெண்மணியும் தனது யதார்த்த நடிப்பால் நம் கண்களை ஈரமாக்குகிறார்.கதாநாயகி ஆத்மிகா சம்பிரதாயமான பாத்திரம் சுமந்து கதை விறுவிறுப்பில் விலகிக் கொள்கிறார்.
வில்லன்களாக வரும் அஷ்ரப், ஜீவா, மகேந்திரன், ஹரீஷ் என நால்வருமே தோற்றத்திலும் வெளிப்படுத்தும் நடிப்பு நி நேர்த்தி.அவர்களை தேர்வு செய்தது இயக்குநரின் திறமை.
குறிப்பாக கோரை தலை முடியுடன் வில்லனாக வரும் அஷ்ரப்பின் குரல், செயல்கள் எல்லாமே பார்ப்பவர்களைப் பீதியூட்டுகின்றன.

மருத்துவமனை பகுதியில் நடக்கும் சண்டைக் காட்சிகள் மழையில் நடக்கும் சண்டை காட்சிகள் ,சோளக்காடு சண்டைக்காட்சி போன்றவற்றில் தத்ரூபமாக சண்டைக்கலைஞர்கள் நடித்துள்ளனர்.ஸ்டண்ட் இயக்குநருக்கு சபாஷ்.

கதை செல்லும் பாதையில் மிக தேர்ந்த ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சின்டோ பொடுதாஸ் (பெயரே வேடிக்கையாக உள்ளது ).
கதையின் பெரும்பகுதி அரசு மருத்துவமனையில் நடந்தாலும் சற்றும் போரடிக்காமல் சிறு தொய்வு கூட ஏற்படாமல் சரியாகப் படத்தொகுப்பு செய்துள்ளார்எடிட்டர் கணேஷ் சிவா.

படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை பதற்ற மனநிலைக்கு கொண்டு வருவதால் சின்ன சின்ன அசைவுகள் கூட நம்மை பதற்றப்படுத்துகின்றன.அதற்கேற்ற பின்னணி இசை கொடுத்து சாம் சி எஸ் தன் இருப்பை உணர்த்துகிறார். ஆனால் அவரது பாடல்களை ஈர்க்கவில்லை.

சாதாரண மருத்துவமனை ஊழியர்கள் இவ்வளவு சட்ட விரோத செயல்களை செய்வது எப்படி என்கிற கேள்வியை மறந்து நாம் படத்தை ரசிக்கும் அளவிற்கு படத்தில் இடைவெளி இல்லாத விறுவிறுப்பை ஏற்றியுள்ளார் இயக்குநர் . தர்க்க மீறல்களை மறந்து நம் கவனம் சிதறாதபடி விறுவிறு வேகத்தில் இயக்கியுள்ள இயக்குனர் ஹரிஷ் பிரபுவின் அந்தத் திறமைக்குப் பாராட்டுக்கள்.