’கூர்மன்’ விமர்சனம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பரவலாகி வரும் இந்த நாட்டில் அதற்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் முறையாகத் தண்டிக்கப்படவேண்டும் என்றும் கருத்து சொல்கிற படம்.

பல ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஒரு இடத்தில் இருக்கும் பழைய வீட்டில் முன்னாள் காவல்துறை அதிகாரியான நாயகன் ராஜாஜி வசிக்கிறார்.

அவருடன் வேலைக்காரர் பாலசரவணன், சுப்பு என்ற நாய் மற்றும் அவருடைய காதலியின் ஆத்மாவும் அந்த வீட்டில் இருக்கிறது. பிறர் நினைப்பதைக் கண்டுபிடிக்கும் சக்தி படைத்த ராஜாஜி, காவல்துறைக்குச் சவாலாக இருக்கும் பல வழக்குகளை தன் வீட்டில் இருந்தபடியே தீர்த்து வைக்கிறார். இதனால் அவரைக் காவல்துறை உயர் அதிகாரியான நரேன் மீண்டும் பணிக்கு அழைக்கிறார்.
ஆனால் அதை நிராகரிக்கிறார்.தன் வீட்டில் இருந்து எந்த சூழலிலும் வெளியேற மாட்டேன், என்று பிடிவாதம் பிடிக்கிறார் ராஜாஜி. ஒரு குற்றவாளியால் தன் வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் மீதிக்கதை.கிரைம் அமானுஷ்யம் இந்த கலந்து கட்டிய கதை.

நாயகனாக நடித்திருக்கும் ராஜாஜி அழுத்தமான கதாபாத்திரத்தில் அனாயாசமாக நடித்து கைதட்டல்களை அள்ளுகிறார்.நம்பிக்கை தரும் நடிப்பாற்றல் இவரிடம் உள்ளது.

ராஜாஜியின் உதவியாளராக பாலசரவணன் வருகிறார்.காதலியாக நடித்திருக்கும் ஜனனி ஐயர் அலட்டிக்கொள்ளாமல் பதிகிறார். காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் நரேன் சொல்லவே வேண்டாம் குணச்சித்திர வேடங்களில் தனக்கான இடத்தை பெற்றவர் இதிலும் அதை நிரூபித்துள்ளார்.இவர்கள் தவிர அனைத்து நடிகர்களும் தங்களது வேலையில்குறை வைக்கவில்லை.

சக்தி அரவிந்தின் ஒளிப்பதிவும், டோனி பிரிட்டோவின் இசையும் கதைக்கு ஏற்ப கைகோர்த்துப் பயணித்துள்ளன.

கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களின் அறிமுகம் மூலம் படத்தின் ஆரம்பத்திலேயே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குநர் பிரயன் பி.ஜார்ஜ், அடுத்தடுத்த காட்சிகள் மூலம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்து விடுகிறார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வேண்டும், என்று சொன்ன இந்த நல்ல நோக்கத்தைப் பாராட்டலாம்.
கதாநாயகனை உயர்த்திப் பிடித்திருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்துவிட்டது.
படைப்பாற்றல் உள்ள நல்ல இயக்குநர்களும் இப்படி பொருளாதார அழுத்தம் காரணமாக நல்ல கற்பனையை தனிமனிதன் சார்ந்த கதையாக மாற்றுவதால் படைப்பு முழுமை பெறாமல் போய்விடுகிறது.