‘FIR’ விமர்சனம்

நடிகர் விஷ்ணு விஷால் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டும் நடிப்பவர் .பட எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படாதவர். தரமான படங்கள் வெளிவர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் சொந்தமாக திரைப்பட நிறுவனம் ஆரம்பித்து படத்தைக் தயாரிக்கிறார். அதில் ஒரு தர முத்திரை இருக்கும்.
அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘எஃப்.ஐ.ஆர்’.

‘எஃப்.ஐ.ஆர்’ என்றால் போலீஸின் முதல் தகவல் அறிக்கை என்றுதான் கேள்விப்பட்டிருப்போம், இதில்
‘ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்’ என்று பொருள் என்று கூறப்படுகிறது. படத்தைக் கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மனு ஆனந்த் என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

நீண்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள எப்ஐஆர் படம் எப்படி?
இதன் கதை என்ன?

ஐஐடியில் படித்து முடித்து கோல்டு மெடல் வாங்கிய வேலையில்லா இளைஞன் விஷ்ணு விஷால். அபூபக்கர் அப்துல்லா என்ற பயங்கரவாதி இலங்கை கொழும்புவில் பல இடங்களில் குண்டு வைக்கிறான். இதனால் மிகப்பெரிய அழிவு ஏற்படுகிறது. உளவுத்துறை குற்றவாளியைத் தேடி வருகிறது,தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு துரதிர்ஷ்ட விதமாக அவர்களிடம் விஷ்ணு விஷால் சிக்கிக் கொள்கிறார்.அதற்குப் பிறகு விஷ்ணு விஷால் அவர்களிடமிருந்து எப்படித் தப்பிக்கிறார்? இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்கிறார்? தீவிரவாதி பிடிபட்டானா? என்பதே படத்தின் மீதி கதை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷ்ணு விஷால் திரைப் பயணத்தில் முக்கிய படமாக எஃப்.ஐ.ஆர் அமைந்திருக்கிறது. அந்த அளவிற்குப் படத்தில் விஷ்ணு விஷால் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆக்ஷன், காதல், தோல்வி, பாசம் என பலவகை உணர்ச்சிகளை காட்ட கூடிய வாய்ப்பு.அதை சரியாக பயன்படுத்தி விஷ்ணு விஷால் மிளிர்கிறார். இவருக்குப் பிறகு படத்தில் ரைசா வில்லன் நடிப்பு மனதில் பதிகிறது.
மேலும், மஞ்சுமா, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் தங்களுடைய அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்குப் பலம் சேர்த்துள்ளனர்.

படத்தின் அஸ்வந்தின் இசையைப் போலவே அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவும் படத்திற்குப் பலம்.

ஓர் அறிமுக இயக்குநரின் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு மனு ஆனந்த் இதில் தன்னை நிரூபித்துள்ளார்.

படத்தில் தீவிரவாதம் பற்றி மட்டுமல்ல அப்பாவி இஸ்லாமியர்கள் மீது தீவிரவாத சாயம் பூசுவது பற்றியும் பேசப்படுகிறது.

படத்தின் கதைக் களமும், கொண்டு சென்ற விதமும் கதையை அழகான திரைக்கதை அமைத்து கையாண்ட விதம் பாராட்டுக்குரியது.

இந்த படம் ஆக்ஷன், த்ரில்லர் படங்களை விரும்புவோருக்கு மட்டுமில்லாமல் அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது.

விஷ்ணு விஷால் தனது நடிப்பில் பல படிகள் மேலேறிச் சென்று இருக்கிறார்.
அவரது திரைப்பயணத்தில் இந்த படம் ஓர் அழுத்தமான அடையாளமாக அமைந்து இருக்கிறது.மொத்தத்தில் இந்தப் படம் ரசிகர்களைக் கவரும் .