‘கேப்டன் மில்லர்’ விமர்சனம்

தனுஷ், டாக்டர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன்,இளங்கோ குமரவேல், நிவேதிதா சதீஷ், அதிதி பாலன், வினோத் கிஷன், அப்துல் லீ, விஜி சந்திரசேகர், காளி வெங்கட்,போஸ் வெங்கட்,ஆண்டனி, ஐஸ்வர்யா ரகுபதி, அஸ்வின் குமார் மற்றும் பலர் நடித்த படம்.எழுதி இயக்கியுள்ளார் அருண் மாதேஸ்வரன்.

ஒளிப்பதிவு சித்தார்த்தா நுனி, இசை -ஜி.வி. பிரகாஷ், வசனம் மதன் கார்க்கி, படத்தொகுப்பு நாகூரான்,சண்டைப் பயிற்சி திலீப் சுப்பராயன்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு நம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சியால் அடிமைப்படுத்தி ஆண்டு வந்த வெள்ளையர்களுக்கு எதிராக திரண்டு எழுந்த, சாமானிய மக்களிடம் இருந்து தோன்றிய ஒரு வீரனின் கதை இது.

இந்தியாவில் உள்ள மக்களிடமிருந்து இந்தியர்களை அடிமைப்படுத்தும் ராணுவ பயிற்சிக்கு ஆள் எடுக்கிறார்கள் .அப்படித் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சுய அடையாளம் எதுவும் இருக்கக்கூடாது என்று அவர்களது பெயரையே மாற்றுகிறார்கள். அப்படி அனலீசன் என்கிற தனுஷை மில்லர் என்று மாற்றி ஒரு எந்திரம் போல் செயல்பட வைக்கிறார்கள்.அந்த மில்லர் வீரத்தில் உயர்ந்து கேப்டன் மில்லராக வரவேண்டும் என்று நினைக்கிறான். அந்த மில்லர் போன்ற ராணுவ சிப்பாய்களைக் கொண்டு நமது மக்களையே சுட்டுப் பொசுக்க வைக்கிறார்கள்.அப்படிச் சிப்பாய் ஆனவர்கள் குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகுகிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.அப்படித் தங்கள் இனத்தையே அழித்த குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியே வருவதற்காகப் போராடும் மில்லர் என்ற இந்திய வீரனின் மனப்போராட்டங்களும், செய்த பாவத்தைத் துடைக்க அவன் செய்யும் சாகசங்களும் தான் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் கதை.

முதலில் இப்படி ஒரு கேன்வாசைத் தேர்ந்தெடுத்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.அதில் நடித்ததற்காக தனுஷையும், வாய்ப்பு கொடுத்ததற்காக சத்யஜோதி ஃபிலிம்ஸ்  பட நிறுவனத்தையும் நிச்சயமாகப் பாராட்டலாம்.

படத்தில் ஏராளமான நடிகர்கள், ஏராளமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். ஒரு தனி மனித கதாநாயகனை உயர்த்திப் பிடிக்கும் படமாக கதையாக இல்லாமல் பலருக்கும் நடிப்பு வாய்ப்புக்கு இடம் அளிக்கும் வகையில் உருவான படத்தில் நடிக்கச் சம்மதித்ததற்கும் தனுஷைப் பாராட்டலாம்.

திரை மறைவு விடுதலை இயக்கம் நடத்தி வரும் கூட்டத்தில் தனுஷ் சேர்ந்த பிறகு அவர் செய்யும் சாகசங்கள் இயல்பாகவும் எதார்த்தமாகவும் நம்பும்படியாகவும் உள்ளன. வெள்ளைப்படையை எதிர்த்து அவர்கள் போரிடுவது அதில் காட்டும் மூர்க்கம் எப்படி அவர்களை வீழ்த்த முடிகிறது என்பதை அழகாகப் படத்தில் காட்டியுள்ளார்கள்.

படத்தில் ஒளிப்பதிவு, இசை, பின்புலக் காட்சிகளுக்கான இடங்கள் என அனைத்தும் நேர்த்தியாக உள்ளன.
தேசப்பற்று சார்ந்த செயற்கையான நீளமான வசனங்களாக இல்லாமல் மதன் கார்க்கியின் நறுசுறுக்கென கூர்மையான வசனங்களும் உண்டு .

ஏற்கெனவே ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை வழக்கமான ஆக்சன் படமாக உருவாக்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து மாறுபட்ட தரத்தில் வேறுபட்ட நிறத்தில் உருவாக்கியுள்ளார்.

மொத்தத்தில் கேப்டன் மில்லர் தேசபக்தி ,வீர உணர்ச்சி சார்ந்த கதையில் வந்துள்ள எதார்த்தமான ஆக்சன் படம்.கேப்டன் மில்லர் அனைவரையும் கவரும் ஒரு ஆக்சன் விருந்தாகும்.