‘கொன்றால் பாவம்’ விமர்சனம்

பேராசையும் பணத்தாசையும் எந்த அளவுக்கு மனித மனத்தைச்

சீரழிக்குமென்பதை சொல்ல வந்திருக்கும் படம் கொன்றால் பாவம்.

வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சார்லி, ஈஸ்வரி ராவ், இயக்குநர் சுப்ரமணிய சிவா நடித்துள்ளனர்.

1981 -ல் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் கதை நடப்பதாகப் படம் தொடங்குகிறது.சுற்றுப்புறங்கள் வீடு இல்லாத ஒரு தனிமையான பகுதியில் சார்லி ஈஸ்வரி ராவ் தம்பதிகள் மற்றும் அவர்களது மகள் வரலட்சுமி சரத்குமார் இருக்கிறார்கள். ஏழை விவசாயக் குடும்பம் குடிகார சாரலியால் சொந்த நிலத்தை அடமானம் வைத்து மிகவும் வறிய நிலையில் இருக்கிறார்கள்.

திருமண வயது கடந்து திருமணத்துக்கு ஏங்கும் நிலையில் வரலட்சுமி. இந்தக் குடும்பத்தில் திடீரென ஒரு விருந்தாளி போல் சந்தோஷ் பிரதாப்
டிப்டாப் நாகரீக உடை அணிந்து வருகிறார்.
ஒரு நாள் மட்டும் அங்கு தங்கி விட்டுச் செல்ல அனுமதி கேட்கிறார். சற்றுத் தயக்கத்தோடு அனுமதிக்கிறார்கள்.

தன்னிடம் பணமும் நகையும் இருப்பதைக் காட்டி,அவர்கள் தரித்திரத்தைத் துடைப்பதற்கு அவர் உதவுவதாகக் கூறுகிறார் .ஆனால் அவர்கள் மறுக்கிறார்கள். கோழிக்கறி சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறார். அப்போது அதற்கான ஏற்பாடுகள் செய்கிறார்கள் .அதே நேரத்தில் அவரது பணத்தையும் நகையையும் அவரை கொன்றுவிட்டு அபகரித்துக்கொள்ளலாம் என்று வரலட்சுமி தாயும் திட்டமிடுகிறார்கள். இதற்கு சார்லியும் உடன்படுகிறார்.
கோழிக்குழம்புடன் விஷத்தை கலந்து சந்தோஷை கொல்ல வேண்டும் என்பது திட்டம். அது சில சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறிப் போகிறது .அதனால் உறங்கிக் கொண்டிருக்கும் சந்தோஷின் கழுத்து அறுத்து கொலை செய்ய முடிவு எடுக்கிறார் வரலட்சுமி.முடிவு என்ன என்பதுதான் கதை.

80 காலகட்டத்தில் கதை நடப்பதால் சமகால எந்த அறிவியல் வளர்ச்சிகளும் தொழில் நுட்ப விளைவுகளும் இல்லாத ஒரு சூழலை இயல்பாகக் காட்டுகிறார்கள். அதிக பாத்திரங்கள் இல்லாமலே இந்தப் படத்தை ஒரு கைவிரல் அளவிலான எண்ணிக்கையிலான பாத்திரங்களைக் கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர்.அந்தக் குறை தெரியாதபடி கதையின் விறுவிறுப்பால் படம் நகர்கிறது.

விருந்தாளி போல் வந்த ஒருவனைக்கொன்று அவன் பணத்தை நகையை அபகரிப்பது என்ற ஒரு வரிக்கதை தான்.

இதில் நம்பிக்கைக் துரோகம் தான் மூல நாடி .தமிழ் பண்பாட்டில் இதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும் எங்காவது நம்பிக்கை துரோகங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி துரோகம் செய்யும் மன அசைவுகளை மனசாட்சிக்கு எதிராகச் செயல்படும் போதும் நமது மனம் எப்படிசெயல்படுகிறது என்பதை இயக்குநர் கதாபாத்திரங்களின் மூலம் அவர்கள் உணர்ச்சிகள் மூலம் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்தப் படத்தில் ஒரு குடிகார குடும்பத் தலைவராக வந்து சார்லி நடிப்பில் மிக அழுத்தமாக முத்திரை பதிக்கிறார். அவரது மனைவியாக ஈஸ்வரி ராவ். அவரும் சோடை போகவில்லை. எல்லாவற்றையும் தாண்டி திருமண வயது கடந்த ஒரு விரக்தி மனநிலை கொண்ட பெண்ணாக வரலட்சுமி பேசும் பேச்சுகளும் நடை உடை பாவனைகளும் சிறப்பு. சந்தோஷ் பிரதாப்பும் இயல்பாக நடித்துள்ளார்.சாராயக்கடை நடத்தும் சுப்பிரமணிய சிவாவும் எந்தக் குறையும் இல்லாமல் நடித்துள்ளார்.

இப்படி வெகு சிறப்பாக பாத்திரங்களைக் கொண்டு மனதை பரபரப்பு பதற்றம் கொண்ட ஒரு கதை கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர்.செழியனின் கேமரா ஒரு சினிமா பார்க்கும் அனுபவத்தை மாற்றி நேரடி அனுபவமாக நிகழ்த்திக் காட்டுகிறது. சாம் சி எஸ்ஸின் இசையும் எண்பது காலகட்டத்து உணர்வுகளைநம் செவிகளுக்குள் நிறைக்கிறது.மொத்தத்தில் கொன்றால் பாவம் படம் துரோகத்தின் அசல் பதிவு.