‘சண்டிவீரன்’ விமர்சனம்

chandi-veeran_1குளத்து தண்ணீரை குடிநீருக்குப் பயன்படுத்துவதில் இரு ஊருக்குப் பகை.ஒரு ஊரில் நல்ல தண்ணீர் குளம் இருக்கிறது பக்கத்து ஊரில் உப்பு தண்ணீர்தான் இருக்கிறது. குடிநீருக்கு பக்கத்து ஊரை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. நல்ல தண்ணீர் கொடுக்க மறுக்கிறார்கள். இதனால் ஊர்ப்பகை வருகிறது. நாயகன் அதர்வாவின் அப்பா போஸ் வெங்கட் இந்தக் கொடுமையைத் தடுக்க நினைக்கிறார் இரு ஊர்  கலவரத்தில் அவர் கொல்லப் படுகிறார். சிறுவனாக இருந்த போது இதை நேரில் பார்த்தவர்  அதர்வா.அவர்  வாலிபனானதும் தடுக்க முயல்கிறார். இடையில் சிங்கப்பூர் சென்று அனுமதியின்றி தங்கி தண்டிக்கப்பட்டு திரும்பி வருகிறார். ஊர் அப்படியே இருக்கிறது. ஊரில் மில்காரர் லாலின் மகன் ஆனந்தியை அதர்வா காதலிக்கிறார் .இது தெரிந்து  லால் சீறுகிறார் .மீண்டும் ஊர்ப்பகை முற்றி கலவரம் வெடிக்கிறது. அந்தக் கலவரத்தில் லால் அதர்வாவை கொல்லத் திட்டமிடுகிறார்.

கலவரம் நடந்ததா? அதர்வா கொல்லப்பட்டாரா? திருமணம் நடந்ததா என்பதே ‘சண்டிவீரன்’ படத்தின் முடிவு.

அதர்வா அச்சு அசலாக தஞ்சை மண்ணின் மைந்தனாக மாறியுள்ளார் உடல்மொழி, வாய்மொழி எல்லாவற்றிலும் மிளிர்கிறார். தோற்றத்திலும் ஆனந்தி அழகு . காதல் சோகம் கிண்டல் என நடிப்பிலும் எல்லாமும் அழகுதான். அதர்வாவை ரோத்தா வாங்கியதாக ஓட்டுவதும் அவர் மிரள்வதும் சிரிப்பலைகள் வரவழைப்பவை.

கிராமங்களில் ஊருக்கு ஊர் பெரிய மனிதர் என்கிற பெயரில் செருக்கும், பணத்திமிரும், அதிகார போதையும் கொண்ட ஆட்கள் இருப்பார்கள். அவர்களின் மொத்த உருவம்தான் லால். கச்சிதமான பாத்திரப் பொருத்தம்.

படத்தில் காமெடியன் இல்லை என்கிற குறையை அதர்வா, ஆனந்தி, நண்பர்கள் காட்சிகளில் போக்கியுள்ளார் இயக்குநர்.படத்தில் வருகிற ஊரக முகங்கள் படத்துக்கு யதார்த்த உணர்வுக்கு புது வண்ணம் பூசுகின்றன தஞ்சை பகுதிக்கே உரித்தான இயற்கை அழகான நெல் வயல், சோளக் கொல்லை போன்ற காட்சிகளின் அழகும் ரசிக்க வைப்பவை.பேச்சு மொழியும் இயல்பு.

தண்ணீர் பிரச்சினை என்கிற சமூகபிரச்சினையைக் கையில் எடுத்துள்ள போது சண்டிவீரன் என்கிற கமர்ஷியல் தலைப்பை வைத்தது ஏனோ?எல்லாம்  கமர்ஷியல் படுத்தும் பாடோ?

பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன ‘அலுங்குற குலுங்குற’ ஈச்சம்பழச்சிவப்பே’ பாடல்கள்  மட்டுமல்ல கருத்தைச் சொல்லும் ‘தாய்ப்பாலும் தண்ணீரும் ஒண்ணாத்தான் இருந்திச்சு’  பாடலும் இனிமை.

கமர்ஷியலான படமா கருத்துச் சொல்லும் படமா என்கிற கயிற்றில்  பயணம் செய்துள்ளார் இயக்குநர்.,விழுந்து விடாமல் நடந்துள்ளார். இயல்பும், தரமும் கலந்து ஒரு படமாகக்  கொடுத்துள்ள இயக்குநர் சற்குணத்துக்கு சபாஷ்.