சல்லிக்கட்டு பற்றி உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விக்கு பாடலின் மூலம் பதில் சொல்லும் இயக்குநர் அமீர்..!

DCIM (66) தமிழகமே சல்லிக்கட்டு தடை விஷயத்தில் பதற்றமாக இருக்கும் இன்றைய சூழலில் அதே சல்லிக்கட்டை மையமாக வைத்து புதிய திரைப்படத்தைத் தொடங்கியுள்ளார் பிரபல இயக்குநரான அமீர்.

தனது சொந்த நிறுவனமான அமீர் பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளார் இயக்குநர் அமீர். படத்தின் பெயர் ‘சந்தனத்தேவன்’.

இந்தப் படத்தில் ஆர்யா, அவருடைய சகோதரர் சத்யா மற்றும் இயக்குநர் அமீர் மூவரும் முன்னணி  கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில் உருவாகியிருக்கும் இந்த ‘சந்தனத்தேவன்’ படத்தின் பாடல்களுக்கு  இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
DCIM (30)‘சந்தனத்தேவன்’  படத்தின் அறிமுக விழா இன்று காலை சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் இயக்குநர் அமீர். ஆர்யா, சத்யா, வைரமுத்து, யுவன் ஷங்கர் ராஜா, கதாநாயகி அதிதி, ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன், கலை இயக்குநர் ரெம்போன் பால்ராஜ் மற்றும் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

DCIM (51)விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, “சல்லிக்கட்டு’ என்பதோ, ‘மாடு பிடித்தல்’ என்பதோ சரியான தமிழ் சொற்கள்  கிடையாது. ‘ஏறு தழுவுதல்’ என்பதே சரியான தமிழ் சொல். அந்த ‘ஏறு தழுவதலை’யும், நம் தமிழ் மண்ணின் கலாச்சார பெருமையையும் எடுத்து கூறும் இந்த ‘சந்தனத்தேவன்’ படத்தில் நான் பணியாற்றி இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

நெஞ்சில் அறைந்த சம்பவங்களைக் கொண்டு ஒரு கதையை உருவாக்கினால்தான் அது ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதியும். அப்படி ஒரு படைப்புதான் இந்த ‘சந்தனத்தேவன்’.

இசைஞானி இளையராஜாவின் மகன். நான் தூக்கி வளர்த்த பிள்ளை யுவன்ஷங்கர் ராஜா.. இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இசைஞானி இளையராஜாவின் விரல்கள் ஆர்மோனிய பெட்டியில் பட்டதுமே, குறிப்பிட்ட பாடலுக்கான ஏற்ற இசை பிறந்துவிடும். அதே ஞானத்தையும், திறமையையும் அவருடைய மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் பெற்றிருக்கிறார். இந்த ‘சந்தனத்தேவன்’ நிச்சயம் ஒரு வெற்றி களஞ்சியமாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை…” என்றார் நம்பிக்கையுடன்.

DCIM (50)இயக்குநர் அமீர் பேசும்போது, “தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் மண்ணுக்கும் உரிய திரைப்படங்களை மட்டுமே எடுக்க வேண்டும் என்ற என்னுடைய எண்ணம் சில காரணங்களால் வழி மாறிப் போனது.

சில காலம் வர்த்தக உலகத்தின் மீது என் கவனம் சிதறியிருந்தது. ஆனால் இனி நான் எடுக்கும் படங்கள் அனைத்துமே எம் தமிழ் மண்ணைச் சார்ந்துதான் இருக்கும். அதனை இந்த ‘சந்தனத்தேவன்’ உறுதிப்படுத்தும்.

பொதுவாக பெரும்பாலான திரைப்பட விழாக்களில்   நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோரை பற்றித்தான் பேசுவார்கள். ஆனால் இந்த ‘சந்தனத்தேவன்’ படத்தின் அறிமுக விழாவில் நம் தாய் மண்ணின் பெருமையைப் பற்றி பேசுவதில், நான் பெருமிதம் கொள்கிறேன்.

அன்றைய காலத்தில் தமிழனுக்கு இரண்டு சொத்துக்கள் மட்டும்தான் இருந்தது. ஒன்று அசையும் சொத்தான மாடு.. மற்றொன்று அசையா சொத்தான மண். தொன்று தொட்ட காலம் முதல்  கால்நடைகளை தம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக கருதுபவர்கள் தமிழர்கள். அவர்களின் உணர்வுகளை உச்சநீதிமன்றம் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் ‘மாட்டிற்கு பதிலாக சிங்கத்துடனும், புலியுடனும் மல்லுக்கட்ட தயாரா..?’ என்று அவர்கள் கேட்டது வருத்தமளிக்கிறது.

நம் மண்ணின் பெருமையை கூறும்விதத்தில் ‘சந்தனத்தேவன்’  படத்தின் ஒரு பாடலை பதிவு செய்து, அதனை நாளை மாலையே வெளியிட முடிவு செய்திருக்கிறோம். உச்சநீதிமன்றம் கேட்ட அந்தக் கேள்விக்கு, இந்தப் பாடல் பதிலளிக்கும்…” என்றார் உறுதியான குரலில்..!