சென்னைவாசிகளே தயாராகுங்கள் : முதல் ‘தமிழ் ஐடல்’ ஆட்கள் தேர்வு ஆகஸ்ட் 23-ல் தொடங்குகிறது !

முதல் சீசன் ‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக விக்கல்ஸ் விக்ரம் மற்றும் பூஜா வெங்கட் இணைந்துள்ளனர். தமிழகத்தின் அடுத்த இசை நட்சத்திரத்தைத் தேடும் பிரம்மாண்டப் பயணம் சென்னையில் தொடங்குகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திறமையான பாடகர்களை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் ‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சியின் முதல் நேரடி ஆடிஷன் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தப் போட்டியின் முதல் சீசனின் தொகுப்பாளர்களாக விக்கல்ஸ் விக்ரம் மற்றும் பூஜா வெங்கட் இணைந்துள்ளனர்.

Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து தமிழ் ரசிகர்களுக்காக வழங்கும் ‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சிக்கு சூப்பர் ஜட்ஜாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தலைமை வகிக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள தனித்துவமான குரல்களையும் இசைத் திறமைகளையும் கண்டறிந்து, அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

சென்னையில் நடைபெறும் முதல் கட்ட ஆடிஷன் மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா Annexure வளாகத்தில் நடைபெறுகிறது. 14 முதல் 30 வயது வரையிலான ஆர்வமுள்ள பாடகர்கள் இந்த ஆடிஷனில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தலாம்.

தொகுப்பாளர்களான விக்கல்ஸ் விக்ரம் மற்றும் பூஜா வெங்கட், போட்டியாளர்களை நேரில் சந்தித்து, அவர்களின் கதைகளைக் கேட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ள ஆடிஷன் பயணத்தில் அவர்களுடன் இணைந்து பயணிக்க உள்ளனர்.

இதுகுறித்து விக்கல்ஸ் விக்ரம் கூறுகையில்,

“தமிழகம் அசாத்தியமான இசைத் திறமைகளைக் கொண்ட மண். அந்தத் திறமைகளுக்கு வாய்ப்பு அளித்து, அவர்களின் குரலை உலகம் கேட்கச் செய்யும் ஒரு மேடையின் அங்கமாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. ‘தமிழ் ஐடல்’ என்பது சிறந்த பாடகர்களைத் தேடும் நிகழ்ச்சி மட்டுமல்ல; தமிழகத்தின் பல்வேறு இசைத் திறமைகளை ஒன்றிணைத்து, வளர்ந்து வரும் கலைஞர்களை இன்னும் பெரிய கனவுகளை நோக்கிச் செல்ல வைக்கும் மேடை. ஏ.ஆர். ரஹ்மான் சார் தலைமையில் இந்தப் பயணம் நடைபெறுவது நிகழ்ச்சியின் வாய்ப்பையும் எதிர்பார்ப்பையும் மேலும் உயர்த்துகிறது. போட்டியாளர்களை சந்தித்து, அவர்களின் கதைகளைக் கேட்டு, அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் முதல் அடியை நேரில் காண ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

பூஜா வெங்கட் கூறுகையில்..,,
“ஒருவரின் குரலை முதல் முறையாகக் கேட்டு, அதில் இருக்கும் தனித்துவத்தை கண்டறிவது மிகவும் சிறப்பான அனுபவம். இசை, உணர்வு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களின் கதைகளை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சியாக ‘தமிழ் ஐடல்’ உருவாகியுள்ளது. இதன் தொகுப்பாளராக இருப்பது எனக்கு பெருமை. ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது குரலை நம்பிக்கையுடனும் தயக்கமின்றியும் வெளிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஒரு வசதியான, ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்த உற்சாகமான அத்தியாயம் சென்னையில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 23-ம் தேதி ஆடிஷன் அரங்கிற்குள் நுழையவிருக்கும் திறமைகளை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

சென்னையில் தொடங்கும் இந்த ஆடிஷன் பயணம், தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களுக்குச் செல்ல உள்ளது. ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயத்தையும் கவரக்கூடிய அந்த தனித்துவமான குரலைத் தேடும் பயணம் இதன் மூலம் தொடங்குகிறது.

மேடை தயாராகிவிட்டது, தமிழ்நாட்டின் அடுத்த சிறந்த பாடகரைத் தேடும் Tamil Idol நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

பிரபலமான Indian Idol நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல பாடகர் கார்த்திக், பாடகர் பென்னி தயாள், நடிகையும் பாடகியுமான Andrea Jeremiah ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மூவரும் தங்களது இசை அனுபவத்தின் மூலம் புதிய பாடகர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு வழிகாட்ட இருக்கின்றனர்..

கார்த்திக்  கூறுகையில்,
“தமிழ்நாட்டில் பல திறமையான பாடகர்கள் இருக்கின்றனர். Tamil Idol மூலம் இதுவரை வெளிவராத பல சிறந்த குரல்களை கண்டுபிடிக்க முடியும் என்று நம்புகின்றேன். புதிய பாடகர்களின் திறமையை கண்டறிந்து அவர்களுக்கு உதவுவதில் நான் மிகவும் ஆவலாக இருக்கின்றேன். A.R. ரஹ்மான் சார் தலைமையில் இந்தப் பயணத்தில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.”

பென்னி தயாள்  கூறுகையில்

“நான் ஏற்கனவே பலமுறை Hindi Idol நிகழ்ச்சியில் பணியாற்றியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிய திறமைகளைப் பார்க்கும்போது ஆச்சரியம் கொடுக்கும். இப்போது தமிழ்நாட்டின் பாடகர்களைத் தேடும் Tamil Idol நிகழ்ச்சியில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நான் சென்னையில் படித்திருக்கிறேன் பல ஆண்டுகள் இங்கே வாழ்ந்திருக்கிறேன். அதனால் இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் சிறப்பாக இருக்கின்றது. அடுத்த தலைமுறை பாடகர்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.”

ஆண்ட்ரியா கூறுகையில்,

“தமிழர்களின் வாழ்க்கையில் இசை எப்போதும் முக்கியமான இடத்தைப் பெற்று இருக்கின்றது…தமிழ்நாடு முழுவதும் பல திறமையான பாடகர்கள் இருக்கிறார்கள்.அவர்களை சந்தித்து அவர்களின் கதைகளையும் திறமைகளையும் அறிந்துகொள்வதில் நான் மிகவும் ஆர்வமாக இருக்கின்றேன். புதிய குரல்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.”

ஏ .ஆர். ரஹ்மான் தலைமையில் Tamil Idol நிகழ்ச்சியின் முதல் ஆடிஷன் ஆகஸ்ட் 23 அன்று சென்னையில் நடைபெறுகிறது.

14 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் ஆடிஷனில் கலந்து கொள்ளலாம்.