‘சைத்ரா’ விமர்சனம்

பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் ‘சைத்ரா’  படத்தின் டைட்டில் ரோல் ஏற்றுள்ளார். அவிதேஜ் கதிராகவும் சக்தி மகேந்திரா திவ்யாவாகவும், பூஜா மதுமிதாவாகவும் கண்ணன் போலீஸ்இன்ஸ்பெக்டராகவும் முக்கியமான பாத்திரங்களில் வருகிறார்கள். இவர்களுடன் ரமணன், லூயிஸ், மொசக்குட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தை ஜெனித்குமார் இயக்கியிருக்கிறார்.இப்படத்திற்கு ஒளிப்பதிவு – சதீஷ் குமார், இசை – பிரபாகரன் மெய்யப்பன்,பாடல்கள் – மணிகண்டன் விஜய லட்சுமி,எடிட்டிங் – எலிஷா என, தொழில்நுட்பக் கலைஞர்கள் பணி புரிந்துள்ளனர். இப்படத்தை மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் கே. மனோகரன் தயாரித்துள்ளார்.

நாயகி யாஷிகா ஆனந்த் விபத்திலிருந்து தன் தோழியும் அவரது கணவரும் மரணித்ததை நேரில் பார்க்கிறார்.அது முதல் மனம் பிறழ்ந்தவராக இருக்கிறார்.
இறந்தவர்கள் தன்னைக் கொல்ல வருவதாக அஞ்சுகிறார் .தனது மனைவியின் மனப் பாதிப்பு கண்டு கவலைப்பட்ட கணவர் அவிதேஜ் மனைவிக்கு மனநிலை சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.ஒருமுறை வீட்டுக்கு வெளியே சென்று வந்த அவிதேஜ் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்த போது பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. அதன் விளைவு என்ன என்பதுதான் சைத்ரா படத்தின் கதை.

பிக் பாஸ் புகழ் யாஷிகாவை மட்டும் நம்பி இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள். ஒரு கதாபாத்திரமாக கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். அவரிடம் மேலும் வேலை வாங்கி இருக்கலாம்.அது படத்திற்குப் பெரிய பலமாக அமைந்திருக்கும்.அவரது கணவராக நடித்திருக்கும் அவிதேஜ், அவிதேஜின் நண்பரின் காதலியாக நடித்திருக்கும் திவ்யா, இறந்துபோன தோழியாக நடித்திருக்கும் பூஜா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கண்ணன், ரமணன், லூயிஸ், மொசக்குட்டி என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் இயக்குநர் கூறியபடி தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

பேய் இருக்கா ?இல்லையா? என்கிற கேள்வியுடன் படம் தொடங்குகிறது. வாழும் மனிதர்கள் பேயைச் சந்திப்பதும் பேய் மனிதர்களைச் சந்திப்பதும் பேயே பேயைச் சந்திப்பதும் என்று கலந்து கட்டி திரைக்கதை செய்துள்ளார்கள்.ஆனால் அதை உரிய முறைப்படி சொல்லாமல் குழப்பி இருக்கிறார்கள். எந்தக் காட்சியில் பேய் வருகிறது எந்தக் காட்சியில் மனிதர்கள் வருகிறார்கள் என்று நமக்கே குழப்பம் நேரிடுகிறது.கதை கூறும் முறையில் புதிய முயற்சியை விரும்பி இருக்கிறார் .ஆனால் அது சரியாக விளைவைத் தராத உணர்வைத் தருகிறது.

ஒரு பெரிய வீட்டுக்குள்ளேயே கதை  சுற்றி வருகிறது.ஒரு பெரிய வீடு இன்னொரு வீடு ஒரு சாதாரண சாலை இவ்வளவுதான் கதை பயணிக்கும் லொகேஷன்கள்.குறைந்த அளவிலான கதை நிகழ்விடங்களைக் காட்டி சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு முழுப் படத்தையும் எடுத்துள்ள இயக்குநர் ஜெனித்குமாரின் சிக்கனம் சாமர்த்தியம்  பாராட்டப்பட வேண்டியதுதான்.

சதீஷ் குமாரின் ஒளிப்பதிவும், பிரபாகரன் மெய்யப்பனின் இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கின்றன.

பேய் யாரைக் கொல்லும் என்பதற்கு இவர்கள் தரும் லாஜிக் அநியாயமானது. காரணமும் நியாயமும் இல்லாதது.

பேய் மிரட்டலில் இருந்து பாதுகாக்கச் செல்லும் போலீஸ் செய்யும் காமெடி சரியான இழுவை.பேய் விரட்டும் சாமியார் அவரது சீடன் என்று எல்லாவற்றிலும் பட்ஜெட் தெரிகிறது, சிக்கனம் தெரிகிறது.

படம் எடுத்தவர் திருநெல்வேலி காரர் போலும். அனைவரும் அந்த மண்ணின் வாசம் வீசும் வசனம் பேசுகிறார்கள்.

சிறிய படக்குழுவினரின் முயற்சி இது.படத்தில் ஒளிப்பதிவும் இசையும் சற்றே ஆறுதல். சினிமா என்பது ஏதாவது காட்சிகள் வைத்து விட்டு திரையை நிரப்பும் கலை அல்ல. திரைக்கதை நுட்பமும் காட்சிகளின் அழுத்தமும் தேவை என்பதை இந்தப் படக் குழுவினர் புரிந்து கொள்ள வேண்டும் .அடுத்த படத்திலாவது அதை செய்யட்டும் வாழ்த்துக்கள்.