தருண்விஜய் ராமரைத் தென்னாட்டுக்குக் கூட்டி வரவில்லை; திருவள்ளுவரைத்தான் வடநாட்டுக்கு அழைத்துச் செல்கிறார் : வைரமுத்து

jan16கவிஞர் வைரமுத்துவை நிறுவனர் தலைவராகக் கொண்ட வெற்றித்தமிழர் பேரவை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துத் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடியது.

அப்போது கவிஞர் வைரமுத்து பேசியதாவது:

திருவள்ளுவர் தமிழினத்தின் பெருமை; அவரை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் தமிழர்கள் தங்கள் உயரத்தை உயர்த்திக் கொள்கிறார்கள். ஒவ்வோர் இனத்திற்கும் நில அடையாளம் மொழி அடையாளம் கலை அடையாளம் கலாசார அடையாளம் உண்டு. தமிழ் இனத்தின் அறிவு அடையாளமாய்க் கருதப்படவேண்டியவர் திருவள்ளுவர். திருவள்ளுவரை நாம் மறந்துவிடவும் கூடாது; இழந்து விடவும் கூடாது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தையே இழந்தாலும் இழப்போம்.ஷேக்ஸ்பியரை இழக்க மாட்டோம் என்ற புகழ்பெற்ற பிரிட்டிஷ் வாசகம் உண்டு.ஷேக்ஸ்பியர் 1564இல் பிறந்தவர் என்று கருதப்படுகிறவர். ஆனால் ஷேக்ஸ்பியர் பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே உலக மானுடத்தைச் சிந்தித்த ஞானப்பேராசான் திருவள்ளுவர். அவரைக் கொண்டாடுவதன் மூலம் நாம் நம் உலக முகவரியை எழுதிக் கொள்கிறோம்.

திருக்குறளுக்கு இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றுத்தர தருண்விஜய் எம்.பி போராடி வருகிறார். அவர் தாம் சார்ந்திருக்கும் கட்சியை வளர்ப்பதற்குத்தான் திருவள்ளுவரைக் கையில் எடுத்திருக்கிறார் என்று சில அறிவாளிகள் கூடக் கருதுகிறார்கள். ஜி.யு.போப்-கால்டுவெல்-வீரமாமுனிவர் போன்ற கிறித்தவ அறிஞர்கள் தமிழ்ப் பணி ஆற்றியபோது அவர்கள் மதத்தை வளர்க்கத்தான் தமிழைக் கையிலெடுக்கிறார்கள் என்று யாரும் பழி சொல்லவில்லை. தருண்விஜய் ராமரைத் தென்னாட்டுக்குக் கூட்டி வரவில்லை; திருவள்ளுவரைத்தான் வடநாட்டுக்கு அழைத்துச் செல்லுகிறார். ஒருவேளை அரசியலுக்குத்தான் திருவள்ளுவர் பயன்படுத்தப்படுகிறார் என்பதில் கொஞ்சம் உண்மை இருக்குமானால் தமிழ்நாட்டில் எந்த அரசியலும் திருவள்ளுவரை முன்னிறுத்தித்தான் நடக்கமுடியும் என்பது மெய்யாகிறது. அதுவே திருவள்ளுவருக்குக் கிடைத்த பெருவெற்றிதானே.

தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்படுவதைத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதிக்கக்கூடாது. ஜல்லிக்கட்டு என்பது பிற்கால வார்த்தை. ஏறுதழுவுதல் என்பதே மூலத்தமிழ்ச்சொல். ஏறுதழுவுதல் என்பது எப்படி வன்முறையாகும்? இதுவரைக்கும் ஏறுதழுவுதல் விளையாட்டில் மனிதர்கள்தான் காயப்பட்டிருக்கிறார்களே தவிர மாடுகள் காயப்படவில்லை. மிருகவதைத் தடைச்சட்டம் அதற்கு எப்படிப் பொருந்தும்? ஏறு தழுவாத ஒரு இளைஞனை நான் தழுவமாட்டேன் என்றுதான் கலித்தொகையில் ஒரு தமிழச்சி பாடுகிறாள். எனவே தழுவுதல் என்பது வன்முறையற்றது என்றுதான் தமிழர்களால் கருதப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் ஏறுதழுவும் போட்டிக்கு நேர்ந்திருக்கும் தடைகளை உடைக்க வேண்டும் என்று வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

விழாவில் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திருவாசகம், வெற்றித்தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் மரபின் மைந்தன் முத்தையா, சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார், இயக்குநர் சீனுராமசாமி, மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து, சிற்பி தட்சிணாமூர்த்தி, பாலம் இருளப்பன், உரத்தசிந்தனை உதயம் ராம், மற்றும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டனர்.