‘சொப்பன சுந்தரி ‘விமர்சனம்!

தமிழ் திரை உலகில் கதாநாயகர்களைச் சுற்றி வரும் துணைக்கோள்கள் போல்தான் கதாநாயகிகள் பயன்படுத்தப்படுகின்றனர்.சிலரே கதை நாயகிகளாக இடம் பிடிக்கிறார்கள். புதிய தடம் பதிக்கிறார்கள்.அந்தச் சிலரது வரிசையில் உள்ளவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதனால் தான் அவருக்கு நல்ல கதையம்சம்முள்ள படங்களும் வித்தியாசமான முயற்சிகளும் வாய்ப்பாக வருகின்றன.

அப்படி பெண் மையக்கதாபாத்திரத்தில் உருவாகியிருக்கும் படம் தான் சொப்பன சுந்தரி.நகைச்சுவை நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது இப் படம்.S. G. சார்லஸ் இயக்கி உள்ளார்.

ஒரு பிரபல தங்க நகைக்கடை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ஷ்ட கூப்பன் ஒன்றை விநியோகிக்கிறது.குழுக்களில் அதிர்ஷ்டசாலிகள் பரிசு பெறுவார்கள்.இதன்படி அகல்யாவான ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பத்து லட்சம் மதிப்புள்ள கார் பரிசு விழுகிறது. குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால் வீட்டைப் பகைத்துக் கொண்டு திருமணம் செய்து கொண்டு போன அகல்யாவின் அண்ணன் கருணாவோ தான்தான் கடையில் நகை வாங்கியது தனக்கே பரிசுக்குரிய கார் வேண்டும் என்று உரிமை கொண்டாடுகிறார். நகையை அண்ணன் வாங்கவில்லை. வேறு யாரோ ஒருவருக்காக வாங்கித் தந்துள்ளார் என்பதை அகல்யா கண்டு பிடிக்கிறார்.

பிரச்சினை போலீஸ் ஸ்டேஷன் செல்கிறது. இருதரப்பும் தங்களால் ஆன முயற்சிகளைச் செய்கிறார்கள். இறுதியில் கார் யாருக்குப் போகிறது என்பதுதான் முடிவு .இதை நகைச்சுவை முலாம்பூசிக் கதையாகச் சொல்லியுள்ளார்கள்.

பரிசுப் பொருளும் அதற்குப் பின் உள்ள பின்னணிப் பிரச்சனைகளைப் பற்றிக் கூறியதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.
கலகலப்பான காட்சிகள் மூலம் படத்தின் முதல் பாதி வேகமாக நகர்கிறது. ஆனால் பின் பாதியில் பரபரப்பு குறைவாக உள்ளது. படத்தில் நிறைய தர்க்க மீறல்கள் இருந்தாலும்,அனைத்தும் நகைச்சுவையால் நிரப்பி ஈடு செய்து விடுகிறார்கள்.

பாலமுருகன் – விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவும் ரவிபாண்டியனின் கலை இயக்கமும் கதைக்கள சூழலை நன்றாக எடுத்துக் காட்டுகின்றன.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பிலும், கதாபாத்திரத்திலும் அவள் ஒரு தொடர்கதை சுஜாதாவை நினைவுப்படுத்துகிறார். விளிம்பு நிலை குடும்பத்தில் இருந்து ஒரு போராடும் பெண்ணை கண் முன் காட்டுகிறார். லக்ஷ்மி பிரியா வாய் பேச முடியாத பாத்திரத்தில் வந்து மனதில் பதிக்கிறார்.

கிங்ஸ்லி எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான காமெடி காட்சிகளில் வருகிறார். விரைவில் போர் அடித்து விடும் அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இன்ஸ்பெக்டராக வரும் சுனில்ரெட்டி ஒரு மோசமான போலீஸ் அதிகாரியாக நன்றாக நடித்துள்ளார். படத்தில் வரும் தீபா, கருணாகரன், மைம் கோபி ஆகியோரும் மனதில் பதிகிறார்கள்.

படத்தின் பெயர் ‘சொப்பன சுந்தரி’ கரகாட்டக்காரன் மூலம் நன்றாக புகழ்பெற்ற ஒன்றாகும். திரைக்கதையில் இன்னும் சில நகாசு வேலைகள் செய்திருந்தால் சுந்தரி மேலும் கவர்ந்திருப்பாள்.