நடிகர் சங்கத்தில் அரசியல் நுழையக் கூடாது : விஷால்

Vishal24விஷால் நடித்த ‘பாயும்புலி’ தயாராக உள்ளது. நடிகர் சங்கத் தேர்தல் வேலைகள், அடுத்தடுத்த படங்கள் திட்டங்கள் என்று பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார் விஷால்.

பலவற்றைப் பற்றியும் அவரிடம் கலந்துரையாடியதிலிருந்து !

‘பாயும்புலி’ எப்படி வந்திருக்கிறது?

நன்றாகவே வந்திருக்கிறது திருப்தியாகஇருக்கிறது மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லாமும் நன்றாக அமைந்து இருக்கிறது.

‘பாண்டியநாடு’ ,”பாயும்புலி ‘ இரண்டும் ஒரே இயக்குநர்’ ஒரே மதுரைப் பின்னணி என்ன வேறுபாடு?

சுசீந்திரன் எப்போதும் உயிரோட்டமாக கதை பண்ணுகிறவர் ஒரே பின்னணி ஊர் என்பதைத் தவிர மற்றவை எல்லாமே வேறு  வேறுதான் .இது ஒரு போலீஸ்கதை. அதை சுசீ சொல்லியிருக்கும் விதமே வேறு. அவர் எப்போதும் நடுத்தர வர்க்கத்தைப் பிரதிபலிப்பவர்.  சாமானிய மக்களுக்காக சிந்திப்பவர். நிச்சயம் ‘பாயும்புலி’ ‘அனைவரையும் கவரும்.

நடிகர் சங்கத் தேர்தல் வேலைகள் எப்படி உள்ளன?

மும்முரமாகப் போய்க் கொண்டு இருக்கிறது. சினிமா நடிகர்களிடம்  மட்டுமல்ல நாடக நடிகர்களிடமும் ஓர் எழுச்சி தெரிகிறது. மாற்றம் வேண்டும் என்கிற உணர்வு புரிகிறது.

நாடக நடிகர்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைக்கிறார்களா?

அவர்கள் இதுநாள்வரை எதுவுமே புரியாத நிலையில் இருந்துள்ளனர். இத்தனைக் காலம் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறோம் வஞ்சிக்கப்ட்டு வந்திருக்கிறோம் என்கிற அவர்களின் மனக்குமுறல்களை புரிந்து கொண்டோம்..

நேரில்பார்த்துப் பேசிய போது குமுறித் தீர்த்தார்கள். அவர்களை இத்தனைநாள் அடிமைகள் போல நடத்தி வந்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது.

நட்சத்திர நடிகர்களிடம் ஆதரவு எப்படி உள்ளது.?

பல நட்சத்திர நடிகர்களின் ஆதரவு நன்றாகவே உள்ளது. அது தேர்தலில் எதிரொலிக்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல் பிரச்சினையில் நீங்கள் முன்னெடுக்க ஏதாவது காரணம் இருந்ததா?

நடிகர் சங்கத் கட்டடம் பிரச்சினைதான் முன்னெடுக்க  காரணம். அது தொடர்பாக அவர்கள் காட்டிய அலட்சியமும் பொறுப்பில்லாத போக்கும் எங்களை குமுற வைத்தது. இதில் தனிப்பட்ட முறையில் எனக்கு எதுவுமில்லை. என்தரப்பில் நியாயமும் நேர்மையும் இருந்தததால் எல்லாரும் ஆதரிக்கிறார்கள். நடிகர்களில் பல கட்சியினர் இருக்கிறார்கள். இதில் அரசியலை நுழைக்க படதபாடு பட்டார்கள். நடிகர்கள் என்பவர்கள்  கலைஞர்கள் என்கிற ஒரே உணர்வுள்ளவர்கள். இதில் அரசியல் நுழையக் கூடாது என்று தெளிவாக இருக்கிறோம்.

நாடக நடிகர்களை மிரட்டுகிறீர்களாமே?

இது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக் .யார் மிரட்டுவது என்பது உலகத்துக்கே தெரியும்.

தேர்தலை முன்னிட்டுதான் உதவிகள் செய்கிறீர்களா?

நான் அவ்வப்போது என்னாலான உதவிகள் செய்து வந்திருக்கிறேன். ரசிகர் மன்றங்களை நற்பணிமன்றங்களாக்கி இப்போது பணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

பரவை முனியம்மாவுக்கு உதவி செய்திருக்கிறீர்களே?

அவர் சிரமப்படுகிறார் என்று அறிந்து செய்த சிறு உதவிதான் அது .  மனிதாபிமான ஒரு சிறு உதவி அதற்கும் சங்கத்துக்கும் முடிச்சு போட்டு விட வேண்டாம். ஏனென்றால் பரவை முனியம்மா நடிகர் சங்க உறுப்பினரும் இல்லை.அவருக்கு ஒட்டும் இல்லை

விலங்கு வதையைத் தடுக்க குரல் கொடுக்கிறீர்களே?

மனிதர்கள் போல விலங்குகளுக்கும் உரிமை உள்ளது. வாயில்லாத ஜீவன்களுக்கும் வாழும் உரிமை உள்ளது. தெருநாய்களை கொல்வது பற்றிய கேரளாவின் முடிவை எதிர்த்தேன். விமர்சனம் வந்தது. ஓரிடத்திலுள்ள நாய்களைக் கொன்று விட்டால் வேறு இடத்திலிருந்து அங்கு நாய்கள் வந்து விடும். இதுதான் இயற்கை.  நாய்களைக் கொல்வதைத் தவிர வேறு எவ்வளவோ வழிகள் உள்ளன.

இதே போல்தான் மாடுகள் விஷயமும் மாடுகளைக் கொல்வதே தவறுதான் பாவம்தான். கொல்வதைக்கூட கௌரவமாகக் கொல்லுங்கள் சித்திரவதை வேண்டாம். சட்டப்படி. செய்யுங்கள் என்கிறோம்.
இது எந்த இனம் மதம் அரசியல் சார்ந்தவிஷயமுமல்ல.யாகுக்கும் எதிரானதுமல்ல.
அடிமாடுகளாக ஏற்றிச் செல்லப்படும் மாடுகள் படும் சித்திரவதைகள், கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இதைத்தடுக்க மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். ஒரு லாரியில் 6 மாடுகள்தான் ஏற்றிச் செல்லவேண்டும். இந்தச் சட்டத்தை மீறி 40 மாடுகள் 50 மாடுகள் என்று ஏராளமாக ஏற்றிச் செல்லப் படுகின்றன.  இப்படிக் கொண்டு போகும்போது அவை பாதியிலேயே இறந்து விடுகின்றன.கொல்வதைக்கூட கௌரவமாகக் கொல்லுங்கள் சித்திரவதை செய்யாதீர்கள் என்கிறோம்.இதைத்தான் சட்டமும் சொல்கிறது. இதுபற்றி 15 ஆயிரம் பேர் கொண்ட கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வுக்காக பேசினேன் இதைச் சொல்ல நடிகர் விஷால் தேவையில்லை சாதாரண தனிமனிதன் விஷாலே போதுமே.

அடுத்த படங்கள்?

அடுத்தடுத்த  படங்கள் என்று  பாண்டிராஜ் இயக்கும் படம் ,’கொம்பன்’ முத்தையா இயக்கும் படம்,சண்டக்கோழி 2ம் பாகம் என  3 படங்கள் இருக்கின்றன.