நடிகர் ஜீவா, கேப்டன் ஜீவாஆனார்!

Jeeva-Chennai-Rhinos-CCL-2-Photoஎட்டு அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை தொடங்கி பிப்ரவரி 1-ந்தேதி வரை நடக்கிறது. சென்னை அணிக்கு நடிகர் ஜீவா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் 5-வது ‘செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்(சி.சி.எல்.) போட்டி  இது.

மும்பை, ஐதராபாத், பெங்களூரு, ஆமதாபாத், கொச்சி, ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கர்நாடக புல்டோசர், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், மும்பை ஹீரோஸ், பெங்கால் டைகர்ஸ், வீர் மராட்டி, போஜ்புரி தபாங்ஸ் ஆகிய 8 நட்சத்திர அணிகள் பங்கேற்கின்றன.

சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் கேரளா அணியை வரும் 11-ந்தேதி ஜதராபாத்தில் எதிர்கொள்கிறது. அதைத்தொடர்ந்து பெங்களூரில் 18-ந்தேதி வீர் மராட்டி அணியுடனும், ஆமாதாபாத்தில் 25-ந்தேதி மும்பை அணியுடனும் சென்னை அணி மோதுகிறது.

Jeeva at CCL 3 Chennai Rhinos Vs Bengal Tigers Match Photosசென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து நடிகர் விஷால் சமீபத்தில் விலகியதையடுத்து, நடிகர் ஜீவா புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை அணியின் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட நடிகர் ஜீவா  நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

”நடிகர் விஷால் தற்போது படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருப்பதால் அவரால் சென்னை அணி கேப்டன் பதவியை தொடர முடியவில்லை. ஆனால் போட்டியில் விஷால் பங்கேற்பார். சென்னை அணிக்கு துணை கேப்டனாக நடிகர் விஷ்ணு விஷால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடிகர்கள் ஆர்யா, பரத், விக்ராந்த், ஷாம், சாந்தனு, பிருத்வி, பாலாஜி, சோனு, போஸ் வெங்கட், ரமணா, உதய் உள்ளிட்டோர் சென்னை அணிக்காக விளையாட உள்ளனர். அனுமதி கிடைக்காத காரணத்தால் சென்னையில் போட்டி இல்லை என்பது வருத்தம் தான்.

எனினும் நம்பிக்கையுடன் விளையாடி சி.சி.எல். சாம்பியன்ஸ் பட்டத்தை பெற முயற்சிப்போம். தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். படத்தில் நடிப்பதை விட தற்போது கூடுதல்  பதற்றம் உள்ளது.”

இவ்வாறு நடிகர் ஜீவா கூறினார்.

பேட்டியின்போது சென்னை ரைனோஸ் அணி உரிமையாளர் கங்கா பிரசாத் மற்றும் அணி வீரர்கள் உடனிருந்தனர். சென்னை ரைனோஸ் அணி 2011, 2012-ம் ஆண்டுகளில் சி.சி.எல். சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.