‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ விமர்சனம்

ஆள் கடத்தல் கதைகளைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போன நமக்கு ஒரு சிறு மாற்றம்.நாய் கடத்தல் செய்யும் சேகர் என்கிற நகைச்சுவைப் பாத்திரத்தின் கதைதான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம்.

பணக்காரர்களின் நாய்களைக் கடத்திப்  பணம் பறிக்கிறார் வடிவேலு. அப்படி, தன் அல்லக்கைகள் அடங்கிய குழுவினருடன் ஒரு நாயைக் கடத்திக் கொண்டு அதன் உரிமையாளரிடம் பெரிய தொகை பேரம் பேசுகிறார். ஆனால்,  கடத்தப்பட்ட நாய் வேறு ஒருவருடையது. தன் நாய் ஏஞ்சலினாவை கடத்தியதாக தாஸ் என்கிற தாதா ஆனந்தராஜ் வடிவேலுவைத் துரத்துகிறார்.

இப்படிச் சிக்கலில் மாட்டிக் கொள்கிற வடிவேலு தான் சிறு வயதில் வளர்த்து வந்த ராசியான அதிர்ஷ்டசாலியான ஒரு நாயைத் தேடிக் கிளம்புகிறார்.அந்த நாயைத் தேடி அலையும் பயணமும் வில்லனின் துரத்தலும் முடிவும் தான் கதை.
இதை நகைச்சுவையோடு தமிழ் சினிமாவின் அனைத்து கரம் மசாலாவையும் தூவிப் படமாக எடுத்துள்ளார்கள்.

நாய் சேகர் ஆக வடிவேலு நடித்துள்ளார்.அவருக்கு இருக்கும் பசிக்கு இது சாதாரணமான தீனி. வடிவேலுக்கு மேலும் தீனி கொடுத்திருக்கலாம்.பல இடங்களில மிகச் சாதாரணமான முகபாவனைகளையே காட்டி உள்ளார்.

வடிவேலுவின் குழுவினராக நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி, யூடியூபர் பிரஷாந்த் வரும் காட்சிகள் ரசிகர்களை கிச்சு கிச்சு மூட்டுகின்றன.

குறிப்பாக, இருவரும் மற்றொரு ரவுடியான ஆனந்தராஜிடம் அடி வாங்கும் காட்சிகள் சரவெடி சிரிப்பு.

காலமாற்றத்தில் வில்லன்கள் எல்லாம் காமெடி செய்கிறார்கள். முன்னாள் வில்லன் ஆனந்தராஜ் இதிலும் வில்லத்தனம் என்று நினைத்துக் கொண்டு காமெடி செய்கிறார். அவர் குழுவில் வரும் லொல்லு சபா சேஷூ, ’என்னம்மா’ ராமர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிரிக்க வைக்கிறார்கள்:

ராவ் ரமேஷ், முனிஷ்காந்த், மனோபாலா, வெங்கல் ராவ் உள்ளிட்டோர் தங்களுக்குக் கொடுத்த கதாபாத்திரத்தில் முடிந்ததைச் செய்துள்ளனர்.

ஆள்களைக் கடத்தியே பழக்கப்பட்டது தமிழ் சினிமா. இதில் முதல்முறையாக நாய்களை கடத்தினால் எப்படி இருக்கும் ,என்று ரூம் போட்டு யோசித்துக் கதை செய்துள்ளார்கள்.வளமான நகைச்சுவைக்கு இடம் உள்ள கதையில் அதை சரியாகச் சொல்லாமல் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர் சுராஜ்.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, பாடல்கள் கவனத்தைச் சிதற விடாமல் பார்த்துக்கொள்கிறது.

வடிவேலுவுக்கு வெற்றி கொடுக்கும்  முயற்சியில் இயக்குநர் ஓரளவு வென்றிருக்கிறார்.
நகைச்சுவை ராட்சசன் ஆன வடிவேலுக்கு அவரது யானைப் பசிக்கு கிடைத்த சோளப்பொரிதான் இந்தக் கதை.

லாஜிக் எல்லாம் வேண்டாம் சிரித்தால் மட்டும் போதும் என்று செல்பவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.சிரித்து விட்டு வரலாம்.