‘பம்பர்’ விமர்சனம்

வேதா பிக்சர்ஸ் சார்பாக எஸ். தியாகராஜன் – டி. ஆனந்தஜோதி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எம். செல்வகுமார் இயக்கத்தில், வெற்றி, ஹரீஷ் பெராடி, ஷிவானி நாராயணன் நடித்துள்ளனர்.

இருள் சூழ்ந்த எதிர் மறை நிழல் படிந்த பாத்திரம் தான் கதாநாயகன்  வெற்றிக்கு.பணத்திற்காகத் திருட்டு, வழிப்பறி என, அனைத்து தவறான காரியங்களையும் துணிந்து செய்து வருகிறார்  .கூடவே நண்பர்கள் துணை இருக்கிறார்கள்.

இது பிடிக்காமல் வெற்றியின் முறைப்பெண் ஷிவானி நாராயணன் அவரிடம் அன்பு காட்ட மறுக்கிறார். தன் மகனை ஷிவானியால்தான் மாற்ற முடியும் என்று வெற்றியின் தாய் நம்புகிறார்.

இந்நிலையில், வெற்றிக்குக் காவல்துறையினர் மூலம் ஒரு கொலை செய்ய சொல்லி அழைப்பு வருகிறது. பணத்திற்காக வெற்றியும், அவனது நண்பர்களும் அதைச் செய்ய ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், பிரச்சினை திசை மாறி வேறு வழி செல்கிறது.வலுக்கட்டாயமாக சபரிமலைக்கு மாலைப் போடும் சூழல் வருகிறது. தங்களைக் காப்பாற்றி கொள்ள கேரளா செல்கிறார்கள் வெற்றி மற்றும் சகாக்கள். ஹரீஷ் பெரடியைச் சந்திக்க நேர்கிறது. அதன்பின், பம்பர் அடிக்க கதை வேறு கோணத்தில் நகர்கிறது.

புலிப்பாண்டி பாத்திரத்தில் நடித்துள்ள வெற்றியின் இயல்பான நடிப்பு படத்திற்குப் பலம்.அந்தப் பாத்திரத்தையே கண் முன் நிறுத்துகிறார்.
ஹரீஷ் பெராடியின் நடிப்பு அபாரம். இதுவரை வில்லனாகவே பார்த்து வந்த இவரை சாந்தமான கதாப்பாத்திரத்தில் பார்ப்பது புதிது. அனைவரது மனதையும் கவரும் நடிப்புக்கு நிச்சயம் பாராட்டு வழங்கலாம்.

வெற்றியின் தாயாக ஆதிராவின் நடிப்பும் கச்சிதம். . ஆனந்தி பாத்திரத்தில் நடித்துள்ள நாயகி ஷிவானியும் நடிப்பில் குறை வைக்கவில்லை.

காவல்துறை அதிகாரிகள் கவிதா பாரதி – அருவி மதன் நடிப்பு படத்திற்குக் கூடுதல் பலம். அருவி மதன் அறிமுக காட்சியே பிரமாதம்.

துப்பாக்கி பாண்டியன் வேடத்தில் வருகிற ஜி.பி.முத்து ,பழைய ஜோக் தங்கதுரை மற்றும்  நண்பர்கள் சார்ந்த
நகைச்சுவைக் காட்சிகள் சிரிப்பு மூட்டுகின்றன.

இசை கோவிந்த் வசந்தா ,பாடல்கள் அனைத்தும்கேட்கும் ரகம்.கிருஷ்ணாவின் பின்னணி இசை (மசாலா கஃபே) படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.

வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு பொருத்தம். குறிப்பாக தூத்துக்குடி , கேரளா பகுதிகளில் இவரது கேமரா அழகை அள்ளி வந்துள்ளது.

கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் அறிமுக இயக்குநர் என்றாலும் ஒரு வணிகப்படத்திற்கான நாடித்துடிப்பை அறிந்து செய்துள்ளார்.மதங்களைக் கடந்து மனித நேயம் பேசும் ‘பம்பர்’ திரைப்படம் வெகுசன ரசனை அடிப்படையிலும் ரசிகர்களைக் கவரும்.