‘பாயும் ஒளி நீ எனக்கு’ விமர்சனம்

விக்ரம் பிரபு ,வாணி போஜன், தனஞ்ஜயா, ஆனந்த், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு ஸ்ரீதர், இசை சாகர், எடிட்டிங் பிரேம்குமார்,கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் தயாரித்து இயக்கி உள்ளவர் கார்த்திக் அத்வைத்.வெளியீடு எஸ்பி சினிமாஸ்.

அரவிந்த் கதாபாத்திரம் ஏற்றுள்ள கதாநாயகன் விக்ரம்பிரபுக்கு சிறுவயதில் ஏற்பட்ட ஒரு விபத்தால் கண்ணில் ஒரு பிரச்சினை அதனால் குறைந்த ஒளியில் அவரால் பார்க்க முடியாது.இது ஒன்று மட்டும் போதாதா ? சினிமாவில் திருப்பங்களுக்கும் முடிச்சுகளுக்கும் பரபரப்புக்கும் ஏற்ற திரைக்கதை எழுதி ‘பாயும் ஒளி நீ எனக்கு’  என ஒரு திரில்லர் படமாக மாற்றி உள்ளார் இயக்குநர் கார்த்திக்.

பார்வை பிரச்சினை உள்ள விக்ரம் பிரபு ,அது பற்றிய தாழ்வுணர்ச்சி கொள்ளாமல் சாதாரணமாக இருக்கிறார். சாப்ட்வேர் பிசினஸ் செய்கிறார். நல்ல குடும்பம், காதலி, நண்பர்கள் என்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் பாலியல் சித்திரவதைக்கு ஆளான ஒரு பெண்ணைக் கொடியோர்களிடமிருந்து காப்பாற்றுகிறார் .அதனால் அவரை அந்தக் கூட்டம் பழிவாங்கத்துடிக்கிறது.
இன்னொரு புறம் அவரது சித்தப்பாவும்  கொலை செய்யப்படுகிறார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பித் தவிக்கும் விக்ரம் பிரபு ஒரு நிலைக்கு மேல் சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்தையே தாக்குவது போல் குற்ற வாளிகளை நெருங்குகிறார். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு அவர் எப்படிப் பழி வாங்குகிறார் என்பதுதான் திரைக்கதை சொல்லும் பாதை.

அண்மைக் காலத்தில் வெளியான ’டானாக்காரன்’ படத்தில் நடிப்பில் தனது அழுத்தமான முத்திரையைப் பதித்து நடிகர் திலகத்தின் குடும்ப வாரிசு என்பதை நிரூபித்த விக்ரம் பிரபு, மேலும் தனது நேர்த்தியான நடிப்பால் மொத்த படத்தையும் ஒரே ஆளாகத் தனது தோளில் சுமக்கிறார்.பாயும் ஒளி கிடைக்க வேண்டும் கதாநாயகன் எடுக்கும் முயற்சிகள் கவனிக்க வைக்கும் காட்சிகள்.பாயும் புலியாக மாறி அவர் சண்டையிடும் காட்சிகள் பரபர ரகம்.

கதாநாயகி வாணி போஜன் அவ்வப்போது வந்து, தான் படத்தின் கதாநாயகி என்று தோன்றி மறைகிறார்.விக்ரம் பிரபுவை வளர்க்கும் பாச அப்பாவாக அதாவது சித்தப்பாவாக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆனந்த் நடித்துள்ளார் .ஆமாம் ’திருடா திருடா’ படத்தில் வந்த அதே ஆனந்த்தான்.

இன்னொரு புறம் விரியும் அதிகாரப்போட்டிக்கான கதையில் வேலராமமூர்த்தி மிடுக்கான இளமைத் தோற்றத்தில் வருகிறார். எதிரிகளைப் பந்தாடும் காட்சிகளில் யாருக்கும் அடங்காத கோவில் காளையாகத் தெரிகிறார். வில்லனாக நடித்திருக்கும் தனஞ்செயா குறைவில்லாத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். எல்லா படத்திலும் இப்போது தென்படும் விவேக் பிரசன்னா இதிலும் நாயகனின் நண்பனாக வருகிறார். தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.படத்தில் இடம் பெற்றுள்ள காதல் காட்சிகள் கதைக்கு ப் பலம்  சேர்க்கவில்லை. வில்லன் கதாபாத்திரத்தை மேலும் வலுவுள்ளதாக மாற்றியிருக்கலாம்.

பார்வைக் குறைபாடு பிரச்சினை என்பதை வைத்து ,கதையில் பரபரப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் சில காட்சிகள் வேண்டும் என்றே திணிக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றன. குறிப்பாகப் பகலை இரவாகக் காட்டும் காட்சிகள் அப்படித்தான் நினைக்க வைக்கின்றன. இதனால் கதையில் நம்பகத்தன்மை குறைய ஆரம்பித்து விடுகிறது.

இருளுக்கும் ஒளிக்கும் இடையே நடக்கும் முரண்பாடுகளைப் பற்றிய படம் என்பதால் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் எது இருள் எது ஒளி என்பதைத் தனித்துக் காட்டும் இடங்களில் ஒளிப்பதிவில் தனது திறமையைக் காட்டியுள்ளார்.

இசையமைப்பாளர் மணிசர்மாவின் மகனான சாகர் , தனது பின்னணி இசையால் காட்சிகளின் வேகத்தைக் கூட்டி உள்ளார்.

புதுமையான ‘ஒரு வரி’யை எடுத்துக் கொண்டுள்ளது ஓகே. அதை வைத்து யதார்த்த நோக்கில் அதன் போக்கில் இயல்பாகத் திரைக்கதை அமைத்து இருக்கலாம்.அந்த வழியில் யோசிக்கத் தவறிய இயக்குநர்,வணிக நோக்கில் சென்றுவிட்டார்.இயல்பு கெடாமல் திரைக்கதை அமைத்துக் கொண்டு சென்றிருந்தால் இந்தப் படத்தின் ஒளி கூடியிருக்கும்.இந்த விஷயத்தில் இயக்குநர் தடம் மாறி விட்டார்.

விக்ரம் பிரபு நடிப்பில் இன்னொரு பரிமாணமாக அவருக்குச் சான்று கூறுகிறது இந்தப் படம். அலட்டல் இல்லாமல் நடித்துள்ள அவருக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.