‘பிரேக்ஃபாஸ்ட்’ (BreakFast) திரைப்பட விமர்சனம்

ராணவ் ,ரோஸ்மின், சம்பத்ராஜ், கஸ்தூரி, அர்ச்சனா, கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத், சி. ரங்கநாதன் நடித்துள்ளனர். ஏ ஆர் காந்தி கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் .எம் வி பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.கிரிஜா வரதராஜ் தயாரித்துள்ளார். சங்ககாலம், ஆண்டாள் காலம், எண்பதுகளின் காலம், இன்றைய காலம் என்று காலம் தோறும் காதல் எப்படிப் பார்க்கப்பட்டது என்கிற முன்னுரையோடு படம் தொடங்குகிறது .இந்த அவசர கால யுகத்தில் எவ்வளவு விரைவில் காதலிக்கத் தொடங்குகிறார்களோ அவ்வளவு விரைவாக பிரிவதற்குக் காரணம் தேடுகிறார்கள் .இதன் பின்னணியில் உள்ள உளவியல் சிக்கல் என்ன ?என்பதைப் பற்றிப் பேசும் படம் தான் ‘பிரேக்ஃபாஸ்ட்’.

ஜான்வி பிஸ்கட் நிறுவன அதிபரின் மகள் ரோஸ்மின்.அழகான படித்த சுய சிந்தனை உள்ள பெண்.ஏழ்மை குடும்பத்தில் பிறந்து திறமைசாலியான நாயகன் ராணவுக்கு தனது நிறுவனத்தில் வேலை போட்டுக் கொடுக்கிறார்.
இவர்களது நட்பு காதலாக மாறுகிறது.கௌரவம் குறுக்கே நிற்க தந்தை சம்பத்ராஜ் இதை எதிர்க்கிறார். நாயகனை இழிவுபடுத்திப் பேசுகிறார்.தந்தையை மீறி நாயகனைத் திருமணம் செய்து கொண்டு நிறுவனத்தின் உயர் பதவியில் அமர்த்துகிறார் ரோஸ்மின்.எந்த அளவிற்கு விரைவாக முடிவெடுத்து காதலில் வெற்றி பெற்றார்களோ அந்த அளவிற்கு அவர்கள் திருமணத்திற்குப் பிறகு இருவரிடையே அந்த இறுக்கமும் நெருக்கவும் குறைந்து உறவில் பிளவு ஏற்படுகிறது.ஒருவரை ஒருவரது ஆதிக்கம் செலுத்த ஆணவம் மிஞ்சி தலைக்கு ஏறுகிறது. பெரிய காரணங்கள் இல்லாமலே பிரிய நேரிடுகிறது.அதன் பின்னணி என்ன? விளைவு என்ன? என்பதைப் பற்றிப் பேசும் 141. 51 நிமிடங்கள் கொண்ட படம் தான் பிரேக் ஃபாஸ்ட்.

நாயகனாக நடித்திருக்கும் பிக் பாஸ் புகழ் ராணவ், அறிமுகப்படம் போல் தெரியாமல் அனுபவசாலி போல் நடித்துள்ளார்.குடும்பத்திற்காக உழைப்பதிலாகட்டும் பெற்றோர் மீது பாசம் காட்டுவதாகட்டும் காதலியின் பணத்திமிர் பார்த்து திணறுவதாகட்டும் ஒரு கட்டத்தில் மீறி பொங்குவதாகட்டும் அதை சமாளிப்பது ஆகட்டும் பல்வேறு நடிப்புத் தருணங்களைப் பயன்படுத்திக் கொண்டு வெளிப்பட்டுள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ரோஸ்மின், முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் வந்து கவனத்தைக் கவர்கிறார்.பணக்கார மேட்டிமைக் குணத்தை வெளிப்படுத்தி தந்தையை மீறி சுதந்திரமாக ஆவேசமாகப் பொங்குவதிலும் அவர் தனது பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார்.ஆதிக்க சுபாவம் கொண்ட பெண்ணாக மிரட்டி உள்ளார்.

மற்றொரு நாயகன், நாயகியாக நடித்திருக்கும் கிரித்திக் மோகன் – அமிதா ரங்கநாத் ஜோடி, வயதுக்கு ஏற்ப இளமை துள்ளல் மற்றும் மோதல் நடிப்பை வெளிப்படுத்திப் படத்தின் கதையின் திசை திருப்பத்திற்கு உதவி இருக்கிறார்கள்.

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சம்பத் ராஜ்,சாதாரண வில்லன் போல வராமல் ஒரு செருக்குள்ள தந்தையின் குணச்சித்திரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மனநல மருத்துவராக நடித்திருக்கும் கஸ்தூரி, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் அர்ச்சனா ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு எடை கூட்ட உதவி இருக்கிறது

எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு முதிர்ச்சியான கோணங்களில் காட்சிகளை அழகாகக் காட்டியுள்ளது

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை அதிரடி காட்டவில்லை என்றாலும் இதமாக ஒலிக்கிறது.புரியும் வரிகள் பெரும் ஆறுதல்.
வைரமுத்து எழுதிய
தீப்பிடிக்கும் தென்றல் ஒன்று, இதயம் துடிக்கிறது பாடல்கள் வரிகளால் வசீகரிக்கின்றன.எஸ்.பாஸ்கர் மற்றும் சுஜித் ஆகியோரது படத்தொகுப்பு,இயக்குநரின் பாதையில் பயணம் செய்துள்ளது.

சரளமான திரைக்கதையும் இயல்பான வசனங்களும் முதிர்ச்சியான காட்சிகளும் ஒரு கட்டத்தில் யாரும் எதிர்பாராத திருப்பமும் என்று இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்கு mர் காந்தி கிருஷ்ணா.

கண்டதும் காதல் வருவது போல் எளிதில் பிரிவும் வரும் சாத்தியங்களைக்கொண்ட இந்தக் காலத்து அபாயங்களைக் கூறி எச்சரித்துள்ளார் இயக்குநர்.அந்த முரண்பாடுகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும் மனநல மருத்துவரின் பாத்திரத்தைக் கொண்டு தீர்வு கூறியிருக்கிறார்.

இந்தக் காலத்து இளைஞர்களைப் புரிந்து கொள்ளும் வகையில் சில காட்சிகளை வைத்து பெற்றோரையும் யோசிக்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் பிரேக் ஃபாஸ்ட் சிற்றுண்டி அல்ல அடர்த்தியான கதையுள்ள ஃபுல் மீல்ஸ் அனுபவம்.