‘பூசாண்டி வரான்’ விமர்சனம்

வெள்ளித் திரை டாக்கீஸ் சார்பில் முஜிப் மற்றும் ட்ரையம் ஸ்டுடியோ ஆண்டி தயாரித்துள்ள பூச்சாண்டி என்ற தமிழ்ப் படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி “பூசாண்டி வரான்” என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெளியாகிறது.

மிர்ச்சி ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன் , ஹம்சினி பெருமாள் , வினோத் மோகன சுந்தரம், தினேசினி நடிப்பில்
ஜே.கே.விக்கி எழுதி இயக்கியுள்ள படமிது. வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சில உண்மைச் சம்பவங்கள் பின்னணியோடு உருவாக்கப்படுள்ள இப்படத்திற்கு டஸ்டின் இசை அமைக்க, அசலிஷம் பின் முகமது அலி ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்கத்துடன் எடிட்டிங் பணியை இயக்குநர் ஜே.கே.விக்கியே செய்துள்ளார்.

படத்தின் கதை என்ன? மிகவும் பழமை மிக்க தொன்மையான பொருட்களை வாங்கி விற்கிறார் ஒருவர்.அவருக்கு உதவியாக உடன் இருக்கிறார்கள் இருவர். ஒரு பெரிய பங்களாவில் தங்கி இருக்கிறார்கள். இவர்களிடம் ஒரு பழங்கால நாணயம் வந்து சேர்கிறது. ஆவிகளுடன் பேசும் விபரீத செயலில் இறங்கியதால் சில விரும்பத்தகாத அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கின்றன. அதன் தொடர்ச்சியாக அவர்களில் ஒருவர் இறக்கிறார். எஞ்சியிருக்கும் அவர்கள் கிளம்புகிறார்கள் .அவர்களுடன் பேய்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒருவர் வந்து சேர்கிறார். அவர் நாணயத்தின் பின்னணியில் உள்ள ரகசியங்களை ஆராயத் தொடங்குகிறார். அது ஒரு தொடர் பயணமாக மாறி ரகசியம் தேடி புறப்படுகிறார்கள் .அதற்குப் பிறகு பரபரப்பான சம்பவங்கள் நடக்கின்றன. அவர்கள் தேடலுக்கு விடை கிடைத்ததா? திகில் சம்பவங்களுக்கு முடிவு என்ன? என்பதைச் சொல்லும் கதை தான் பூ சாண்டி வரான் படம்.

எத்தனையோ திகில் படங்கள் வந்துள்ளன. நடப்புக் காலச்சூழலில் இந்த மர்மமான கருத்தை வைத்து நம்ப முடியாததை அச்சமூட்டும் வகையில் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜே.கே.ஜக்கி.

இப்படம் தொன்மமும் தற்காலமும் கலந்து உருவாகி உள்ளது.சில நிமிடங்களுக்கு ஒருமுறை திகிலூட்டும் காட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இதில் பெரும்பாலும் மலேசிய கலைஞர்கள் பங்கெடுத்துள்ளார்கள்.பங்கேற்றுள்ள நடிப்புக் கலைஞர்கள் அனைவரும் மிகை நடிப்பின்றி இயல்பாகத் தங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

படத்தில் மலேசியாவுக்கும் தமிழகத்துக்குமான தொடர்பும் சொல்லப்படுகிறது.பழந்தமிழர் பெருமை பேசப்படுவது சிலிர்ப்பூட்டும் ரகம்.காட்சிகளை விட பின்னணிகள் பல காட்சிகளில் பேசுகின்றன. மிகையின்றி நிறங்களைப் பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

பெரும்பாலும் வெளிநாட்டில் தயாராகும் தமிழ்ப் படங்கள் நம்பிக்கையூட்டுவது இல்லை. இக்கருத்தைப் பொய்ப்பிக்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு மிதமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாகவும் கதை சொல்லும் முறையிலும் விறுவிறுப்புடன் சொல்லப்பட்டு வணிகரீதியில் வெற்றிகரமான வகையில் உருவாகி இருக்கிறது. இதை உருவாக்கிய மலேசியப் படக்குழுவினரைப் பாராட்டலாம்.