‘பைக்கர்’ திரைப்பட விமர்சனம்

ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர் ,மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி, துளசி, பிரம்மாஜி, தயானந்த ரெட்டி, நிரூப்,
மாஸ்டர் சௌர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.அபிலாஷ் ரெட்டி இயக்கி உள்ளார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான்இசை அமைத்துள்ளார்.தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராஜீவன்,எடிட்டிங் : அனில் பசாலா,கலை இயக்குநர்: ஏ பன்னீர் செல்வம்,எழுத்தாளர்கள்: எம்.வி.எஸ். பரத்வாஜ், ஷ்ரவன் மாதால,சண்டைக்காட்சிகள்: திலிப் சுப்பராயன்
நடன இயக்குநர்கள்: ராஜு சுந்தரம், சேகர் விஜே, விஸ்வ ரகு.

இந்தப் படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது .வம்சி கிருஷ்ணா ரெட்டி-  பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர்.

விளையாட்டு சார்ந்த படங்களுக்கு என்று ரசிகர்கள் இருக்கிறார்கள் .அதற்கான ஒரு கதை அமைப்பு சூத்திரமும் இருக்கிறது அந்த வகைமைக்குள் உருவாகி இருக்கும் படம் தான் ‘பைக்கர்’.ஆனால் கதை உருவாக்கத்திலும் காட்சி அமைப்புகளிலும் கால மாற்றத்தை உணர்த்தும்வகையில் சமகாலத் தன்மையுடன் இப்படம் உருவாகியுள்ளது.

ஏற்கெனவே இந்த ‘பைக்கர்’ திரைப்படம் இந்தியாவின் முதல் மோட்டோகிராஸ் படமாக நிலைநிறுத்திக்கொண்டு, அதற்கான விளம்பரங்கள் மூலம் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இப்படத்தின் கதை என்ன?
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இக்கதை நடக்கிறது. இந்தியாவை உலக மோட்டோகிராஸ் வரைபடத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறார் சுனில் நாராயணன் . அவர் முன்னாள் மோட்டோகிராஸ் வீரர்.
அவர் தனது மகன் விகாஷ் நாராயணனைச் சிறந்ததொரு பைக்ரேஸ் வீரனாக உருவாக்கி,தன் கனவை மகன் வழியாகப் பார்க்க நினைக்கிறார்.

விகாஷ், தன் தந்தையை ஒரு மாதிரியாக, முன்னோடியாக, வழிகாட்டியாக, கதாநாயகனாக பார்த்து வளர்கிறான்.அவரின் விருப்பப்படியே உடல், மனம் என வளர்ச்சி பெற்று சிறந்த வீரனாகிறான்.ஆனால் ஒரு ஆபத்தான விபத்தைச் சந்திக்கிறான்.அதனால் அவனது மனைவி போட்டிகளில் இருந்து விலகச் சொல்லி வலியுறுத்துகிறாள்.மனைவியின் அழுத்தத்தால் போட்டியில் இருந்து விலகுகிறான் .தனது தந்தையிடமிருந்தும் விலகிச் செல்கிறான்.
மீண்டும் அவனைத் தேடி சர்வதேசப் போட்டி வாய்ப்பு வருகிறது ,பெரும் கனவுத் திட்டத்தோடு. அவனைத் தோற்கடிக்கவும் பல சதித் திட்டங்கள் நடக்கின்றன.அவன் தந்தையிடம் சென்றால்தான் அவர் தயாரித்து உருவாக்குவார். இந்த நிலையில் அவன் மீண்டும் தந்தையைச் சந்திக்கிறானா? போட்டியில் கலந்து கொள்கிறானா ?அதில் வரும் சவால்களை எதிர்கொள்கிறானா? என்பதை பார்வையாளர்களின் இதயத்துடிப்புகளை ஓட விட்டுச் சொல்வது தான் 162.30 நிமிடங்கள் கொண்ட ‘பைக்கர்’ படத்தின் மீதிக் கதை.

விகாஷ் கதாபாத்திரத்திற்கு ஷர்வானந்த் கச்சிதமாகப் பொருந்துகிறார்.தோற்றத்திலும் உடல் மொழியிலும் ஒரு பந்தய வீரரின் கட்டுப்பாட்டையும் சுய ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தி உரிய நடிப்பை வழங்கி அந்தக் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.அவர் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளிலும், குறிப்பாக தந்தை-மகன் தருணங்களில்,உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சுனில் நாராயண் கதாபாத்திரத்தில்  டாக்டர் ராஜசேகர்,நடித்துள்ளார். அவரது அலட்டிக் கொள்ளாத உடல் மொழியும் அதிகம் பேசாத கம்பீரமும் அவரது பாத்திரத்திற்குக் கூடுதல்  எடை சேர்த்துள்ளது.
அனுபவம் மிக்க முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.ஆக்சன் அதிரடி தீவிரத் தன்மை கொண்ட பாத்திரங்களில் நடித்த அவர் இப்படி நிதானமாகத் தோன்றுவதே ஒரு பெரிய வித்தியாசமாகத் தெரிகிறது.
படத்தின் பிற்பகுதியில் அவருக்கும் ஷர்வானந்துக்கும் இடையிலான உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் தனித்துவம் கொண்டவை. அதேபோல் பேரனுக்கும் அவருக்குமான பிணைப்பைக் காட்டும் காட்சிகளும் உள்ளன .

மாளவிகா நாயர்  வசீகரமான தோற்றத்தில் வருகிறார். அவருக்கான காட்சிகள் குறைவு என்றாலும் திரையை நிறைக்கிறார்.,பிரம்மாஜி, துளசி, அதுல் குல்கர்னி மற்றும் பலர் தங்களது பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஜே. யுவராஜின் ஒளிப்பதிவு ஒரு முக்கிய பலமாகும். பந்தயக் காட்சிகள் மிகுந்த விசையுடனும் தெளிவுடனும் படமாக்கப்பட்டுள்ளன. படம் பார்ப்பவர்களை நேரடியாகவே பந்தயப் பாதைக்குள் இழுத்துச் செல்கின்றன உயிர்ப்பு கொண்ட அந்தக் காட்சிகள்.1

குறிப்பாக ஜெர்மனி பைக் பந்தயத்தை தத்ரூபமாகப் படமாக்கிப் படத்திற்கு பெரிய பரபரப்பையும் செறிவுத்தன்மையும் வழங்கி இருக்கிறார்கள்.கண் முன்னே தீ பறக்க ஓடும் பைக்குகளைப் பார்க்கும்போது அந்தக் காட்சிகளை எப்படித்தான் எடுத்தார்களோ என்கிற ஆச்சரியத்தையும்  ஏற்படுகிறது.நிச்சயம் அற்புதமான காட்சி அனுபவம் தான்.ஆங்காங்கே அர்த்தம் பொதிந்த வசனங்களும் மின்னல் போல் ஒளிர்கின்றன.

படத்தொகுப்பாளர் அனில் பசாலாவின் படத்தொகுப்பு படத்தில் தொய்வில்லாத தன்மையை வழங்கியுள்ளது.

ஜிப்ரானின் இசை, பாடல்களை விட பின்னணி இசையிலேயே அதிகம் ஈர்க்கிறது .’முன்னேறு முன்னேறு நீ இங்கே காட்டாறு’ என்கிற பாடல் நரம்புகளை முறுக்கேற்றும்.

யுவி கிரியேஷன்ஸின் தயாரிப்பில் படத்தின் தரத்துக்காகவே செலவு என்பதை வெளிக்காட்டும் வகையில் காட்சிகள் உள்ளன.அதுவே படத்திற்கு ஒரு தரச் சான்றாக விளங்குகிறது.

மொத்தத்தில், ‘பைக்கர்’ சரியான நோக்கங்களுடன் சிறப்பாக உருவாக்கப்பட்ட ஒரு படம் என்பதில் சந்தேகமில்லை.நம்பி வரும் ரசிகரகளை எந்த வகையிலும்  இப்படம் ஏமாற்றது.

ரேட்டிங் :3.5 /5