‘போர்’ விமர்சனம்

அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், டிஜே பானு, சஞ்சனா நடராஜன், அம்ருதா சீனிவாசன், மெர்வின் ரோசாரியோ நடித்துள்ளனர்.
சைத்தான், டேவிட், சோலோ,ஸ்வீட் காரம் காபி,வாஷிர் போன்ற  படங்களை இயக்கிய,பிஜோய் நம்பியார் இயக்கி உள்ளார்.

ஒளிப்பதிவு ஜிம் ஷி காளியாட் மற்றும் பிரஸ்லி ஆஸ்கார் டிசெளசா .இசை சஞ்சித் ஹெக்டே , துருவ் விஸ்வநாத். கெளரவ் காட் கிந்தி,கலை மணிமொழியன் ராமதுரை

தயாரிப்பு டி சீரிஸ், கேட்வே பிக்சர்ஸ், ரூக்ஸ் மீடியா.

இதில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இருவரும் படத்தைப் பாதிப் பாதியாக பகிர்ந்து கொள்கிறார்கள் என்று சொல்லலாம்.

‘போர்’ தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியிருக்கிறது. எந்த ஒரு பெரிய யுத்தத்திற்கு ம மூல காரணமாக இருப்பது ஒரு சின்ன ஆணவமோதல் தான்.இப்படி சிறு வயது பகை வளர்ந்து பெரிதாகிப் பெரிய ரணகளம் ஆகிற கதை தான் இது.

உலகம் முழுக்க பள்ளியில் புல்லிஸ் என்கிற பிரச்சினை உண்டு.காரணமே இல்லாமல் ஒருவனைப் பிடிக்காது. மற்றவர்கள் அவனைத் துன்புறுத்துவார்கள். அதனால் பாதிக்கப்படுவது அந்த அப்பாவிதான். யாதுமறியாத ஒருவனுக்கே உலகத்தில் இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது.பகை கொள்வதற்கும் பழி வாங்குவதற்கும் மோதுவதற்கும் காரணம் இருந்தால் கேட்க வா வேண்டும்?அப்படி ஒரு பகை தான் அர்ஜுன் தாசுக்கும் காளிதாஸ் ஜெயராமுக்கும் சிறு வயது முதல் உள்ளது.

சீனியர் மாணவர் அர்ஜுன் தாஸ், ஜூனியர் மாணவர் காளிதாஸ் ஜெயராம், இருவரும் பள்ளியில் படித்துவந்த போது, காளிதாஸ் ஜெயராம், சீனியர் மாணவர்களால் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார். பாலியல் ரீதியாகவும் கூட. அந்தக் கொடுமை ஆழமாக மனதில் பதிகிறது.இதற்கு அர்ஜுன் தாஸ் தான் காரணம் என, காளிதாஸ் ஜெயராம் நினைக்கிறார். பள்ளியை விட்டும் செல்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு,அர்ஜுன் தாஸ் படித்துக் கொண்டிருக்கும்,கல்லூரியில்சேர்கிறார், காளிதாஸ் ஜெயராம்.
பள்ளிக்காலத்தில் தனக்கேற்பட்ட சம்பவத்திற்கு, பழி தீர்க்க நினைக்கிறார். அர்ஜுன் தாஸிடம் மோதுகிறார். இந்தப் பகை உணர்ச்சி வன்மமாக மாறி இறுதி எல்லை வரை செல்கிறது. முடிவு என்ன என்பதுதான் ‘போர்’ படத்தின் கதை.

இதில் வழக்கமான கல்லூரி தேர்தல், அரசியல் ஊடுருவல், காதல், மோதல், கலாட்டா, அடிதடி என்று வணிக சினிமா அம்சங்கள் என்று கருதப்படுபவற்றைக் கலந்து திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார், இயக்குநர் பிஜோய் நம்பியார்.

அர்ஜுன் தாஸ், வழக்கத்தை விட நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.ஆவேசம் பொங்கும் கோபக்கார இளைஞராக அவர் தோன்றுகிறார். அப்போது திரையில் தீப்பிடிக்கும் உணர்வை உண்டாக்குகிறார்.அந்த அளவிற்குக் காட்சிகளில் வெப்பம் தகிக்கிறது.

இதுவரை மென்மையான பாத்திரங்களில் தோன்றி நடித்து வந்த காளிதாஸ் ஜெயராம், கரடுமுரடான பாத்திரத்தில் வந்து வியப்பளிக்கிறார்.நடிப்பில் காளிதாஸ் பல படிகளில் ஏறி இருக்கிறார். இப்படத்தில் அவரது பாத்திரம் அவருக்கு ஒரு முக்கியமான குறிப்பிட்டுச் சொல்லும் படியாக இருக்கும்.

மனித மனத்தின் குரூரத்தை விளக்க முயன்ற இயக்குநர் பிஜாய் நம்பியார் கல்லூரிக் காலங்களில் கல்லூரி மாணவர்களிடம் நிலவும் சுதந்திரம் என்கிற பெயரில் பரவியுள்ள போதைப் பழக்கம், பாலியல் மீறல்,அடிதடி, வன்முறை ஆகியவற்றையும் காட்டியுள்ளார் .இதன் சதவீதம்தான் கவலை கொள்ள வைக்கிறது.

டி.ஜெ.பானு, சஞ்சனா நடராஜன்,அம்ருதா ஸ்ரீனிவாசன், மெர்வின் ரோசரியோ, ஜான் விஜய் உள்ளிட்டவர்களும் தேவைக்கேற்ப நடித்துள்ளனர்.

இயக்குநர் நினைத்தபடி ஒளிப்பதிவாளர்கள்  ஜிம் ஷி காளியாட் மற்றும் பிரஸ்லி ஆஸ்கார் டிசெளசாபயணம் செய்துள்ளார்கள்.

இரைச்சல்கள் நிறைந்த இந்தக் கதைக்குள் இசையமைப்பாளர்கள் சஞ்சித் ஹெக்டே , துருவ் விஸ்வநாத். கெளரவ் காட் கிந்தி தன் பங்கை ஆற்றியுள்ளார்கள்.

பட உருவாக்கத்தில் நேர்த்தியும் தொழில்நுட்ப மேன்மையையும் தெரிகின்றன. மனித மனத்தின் வன்மத்தை மட்டும் உளவியல் ரீதியாகக் காட்டியிருந்தால் இந்தப் படம் வேறு நல்ல திசையில் சென்றிருக்கும் . அதீத வன்முறை போன்ற வணிக அம்சங்களைக் கவனத்தில் கொண்டதால் சாதாரண வணிகப் படமாக மாறிவிட்டது.