‘மகான்’ விமர்சனம்

காந்தி பற்றியும் காந்தியம் பற்றி பலவிதமான கருத்துக்களைக் புதிய சிந்தனைகள் ஏற்பட்டு வரும் இந்த காலம் இது.

காந்தியம் என்பது இப்போது நடைமுறை வாழ்க்கைக்கு பின்பற்ற சாத்தியமுள்ளதா ? இல்லாததா? என்ற விவாதங்கள் நடைபெறுகின்றன.ஆனால் காந்தியம் வாழ்க்கைக்கு ஆதார சுருதியாக விளங்கும் அறத்தைக் கொண்டுள்ளது என்பதை பலரும் ஒப்புக் கொள்வர். அதனால்தான்

காந்தியக் கொள்கைகள் இன்றும் இளைஞர்களால்
தீவிரமான வாசிப்புக்கு உள்ளாகின்றன.

காந்தியக் கொள்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் எழுந்து நிற்கும் இரண்டு கதாபாத்திரங்களை மோதவிட்டு உருவாகியுள்ள படம் தான் மகான்.

காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதன் வழி நடக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர் விக்ரம்.அதனால் அவருக்கு காந்திமகான் என்று பெயர் வைக்கிறார்கள்.அவரிடம் சிறுவயது முதலே மது ஒழிப்பு, அகிம்சை உள்ளிட்ட காந்தியக் கொள்கைகள் தாக்கங்கள் உண்டு.அரசுப் பள்ளியில் ஆசிரியர்.

விக்ரமுக்கு வாழ்க்கையில் நாற்பது ஆண்டுகளாக எந்தவிதப் பிடிப்பும் சுவாரசியமும் இல்லாதது போல் தோன்றுகிறது.சுதந்திரமற்ற வாழ்க்கை வாழ்வதாக ஒரு உணர்வு. ஒருநாள் எதேச்சையாக தனது பால்யகால நண்பன் சத்யவான் (சிம்ஹா) மற்றும் அவரது மகன் ராக்கி (சனந்த்) இருவரையும் சந்திக்கும் விக்ரமின் வாழ்க்கை அன்றோடு தலைகீழாக மாறிவிடுகிறது. இருவரும் சொந்தமாக மதுபானம் தயாரித்து மிகப்பெரிய தொழிலதிபர்களாக ஆகும் அளவிற்கு அதிரடி மாற்றங்கள். அவர்களுக்கு அரசியல்வாதி ஒருவர் உதவுகிறார். அவர் யார் என்றால்,அவர்களுடைய மற்றோரு பால்ய நண்பர் ஞானம்.

விக்ரம் மற்றும் சிம்ஹா வாழ்க்கையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தாதா என்னும் ஒரு போலீஸ் அதிகாரி டைனோசரஸ் போல் சவாலாக எதிரே நிற்கிறார்.அவர்தான் துருவ் விக்ரம்.அதன் பிறகு கதையின் போக்கு பாதை பயணம் தான் ‘மகான்’.

காந்தி மகானாக விக்ரம்.படம் முழுக்க விக்ரமின் ராஜ்ஜியம் தான் கொடி கட்டி கொடி கட்டிப் பறக்கிறது. ஒற்றை ஆளாக படம் முழுக்க தன்னுடைய அட்டகாசமான நடிப்பினாலும், நுணுக்கமான உடல்மொழிகளாலும் நின்று ஆடுகிறார். ஒரு நல்ல கலைஞனுக்குத் தேவை அவனது முழுமையான நடிப்பை வெளிக்கொண்டு வரும் ஒரு நல்ல கதாபாத்திரம் தான் என்பதற்கு இப்படம் ஒரு நல்ல உதாரணமாக சொல்லலாம்.நவரசம் காண்பிக்க கொடுத்த வாய்ப்பை அவரும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
விக்ரம் என்கிற யானைக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் நல்ல தீனி போட்டிருக்கிறார்.

விக்ரமுக்கு உண்மையான மறு பிரவேசம் என்று இப்படத்தைச் சொல்லலாம். .

தாதாவாக துருவ் விக்ரம். ‘ஆதித்ய வர்மா’வில் பார்த்ததைப் போலவே படம் முழுக்க இதிலும் விறைப்பாகவே வருகிறார்.

நடிப்பு, நடனம் என அப்படியே விக்ரமை பிரதி எடுக்காமல் தனக்கென ஒரு வழியைக் கண்டு பயணித்தால் நல்ல எதிர்காலம் உண்டு.

கார்த்திக் சுப்புராஜ் படங்களில் மட்டும் சிம்ஹாவுக்கு நடிப்பு எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. அவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர்கள் தவிர சிம்ரன், முத்துகுமார், சனந்த் என அனைவரும் தங்கள் வேலையை . செய்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணனின் இசை மற்றும் ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு அசத்தல் ரகம். இவை படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது,பல இடங்களில் படத்தைக் காப்பாற்றிக் கொண்டு செல்கின்றன.

திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இரண்டாவது பாதியில் நீளத்தைக் கத்திரி போட்டிருந்தால் மிகச் சிறந்த கேங்ஸ்டர் படங்களில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும்.எப்படி இருந்தாலும் விக்ரமின் நடிப்பிற்கு இப்படம் சிறந்ததொரு அடையாளமாகத் திகழ்கிறது. கார்த்திக் சுப்பராஜ் திரைப்பட ஆக்கத்திற்கும் நற்சான்றிதழாக விளங்குகிறது.