மாற்றி யோசியுங்கள் சினிமா உருப்படும்- ஆர்கே பேச்சு!

rk-pm7நடிகர் ஆர்கே நடித்து ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் உருவாகி வருகிறது. மக்கள் பாசறை நிறுவனம் தயாரிக்கிறது.

ஆர்கே வுடன் நீதுசந்திரா, கோமல் சர்மா  எம்.எஸ்.பாஸ்கர்,மனோபாலா,  சிங்கமுத்து நடித்துள்ளனர்.ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதையொட்டி ஆர்கே நிருபர்களிடம் பேசினார். அவர் பேசும் போது பலவற்றைப் பகிர்ந்து கொண்டார்.

‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் பற்றி..?

” இந்த ‘வைகை எக்ஸ்பிரஸ்’ரயிலில் நடக்கும் பின்னணி கொண்ட கதை. சென்னையிலிருந்து மதுரை செல்லும் ரயிலில் நடக்கிற கதை. தீவிரவாதத்தை ஒழிக்க மக்கள் ஆதரவு தேவை. அவர்களிடம் விழிப்புணர்வு வேண்டும் என்று சொல்கிற படம். அதற்காகவே எடுக்கப்பட்ட படமிது. இதற்காக நான் அமெரிக்கா சென்று  15 நாட்கள் சண்டைக்காட்சிகளில் நடிக்க பயிற்சி பெற்று வந்து நடித்தேன். இது நான் ஷாஜி கைலாஷுடம் இணைந்துள்ள 3 வது படம்.தொடர்ந்து உங்களை மலையாள இயக்குநரே இயக்குகிறாரே என்கிறார்கள். இந்தக் கதைக்கு யார் இயக்குநர் என்று பார்க்கும் போது அவர் பொருத்தமாகத் தெரிந்தார். மக்கள் பாசறையின் அடுத்தபடம் ஒரு குழந்தைகள் படமாக இருக்கும். அதைத் தமிழ் இயக்குநர்தான் இயக்குவார். படத்தின் பெயர் ‘பைரவா’

எனது புதிய திட்டம் பற்றி !

நூறு ஆண்டுகள் கண்ட சினிமா எவ்வளவோ மாறி இருக்கிறது. முதலில் கறுப்பு வெள்ளைப் படம் ஊமைப்படம் வந்தது. பிறகு பேசும் படம் வந்தது.  பிறகு  கலர் படம் வந்தது.  சினிமா  நெகடிவில் வந்தது.  பாசிடிவில்.வந்தது. டிஜிட்டலில் வந்தது.  இப்படி எவ்வளவோ மாறிவிட்டது. நூறு ஆண்டுகள் கண்ட சினிமா தொழில் நுட்ப ரீதியாக எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால் வியாபார ரீதியாக அப்படியே இருக்கிறது. இன்னமும் மாறவே இல்லை.

காலையில் குளித்துவிட்டு சட்டை வேண்டும் என்று புக் பண்ணினால் சட்டை வீடு தேடி வருகிறது. எல்லாமும் வீடு தேடி வருகிறது. சினிமா மட்டும் வீடுதேடி வரக் கூடாதா? சினிமா வியாபாரத்தை மாற்றாததால் சினிமாக்காரர்கள் தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.இப்படி யோசிக்காததால் திருட்டு விசிடி மட்டும் வீடு தேடி வருகிறது.

மாற்றத்தை நான் தொடங்குகிறேன். !

நான் இந்த புதிய மாற்றத்தை  இந்த ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் மூலம் தொடங்குகிறேன். விநியோக முறையை மாற்றினால் சினிமா நிச்சயம் மாறும். வைகை எக்ஸ்பிரஸ் வர்த்தக ரீதியாக மாற்றி வெளிவருகிறது. வெற்றி பெறவும் போகிறது. படம் எடுக்க ஆறேழு மாதம் கஷ்டப்படும் நாம் அதை வியாபாரம் செய்ய சிந்திக்காமல் தியேட்டருக்கு ஆள் வரவில்லை. என்கிறோம். இது என்ன நியாயம்?
எல்லா நெட் ஒர்க் சிம் கார்டும் எங்கும் எளிதில் கிடைக்கும்படி விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள்.இப்படி ஒவ்வொன்றுக்கும் பத்து லட்சம் விநியோகஸ்தர்கள்இருக்கிறார்கள்.

பத்து பேர் விநியோகஸ்தர்கள் உள்ள சினிமாவுக்கு  பத்து லட்சம் பேர் விநியோகஸ்தர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து உருவானதுதான் என் புதிய திட்டம். சினிமாவில் இருக்கிற 10 விநியோகஸ்தர்களும் இப்போது பைனான்சியர் ஆகிவிட்டார்கள். சினிமா விநியோகஸ்தர்கள் 10 பேர் இருப்பது ஒரு லட்சமானால் வியாபார முறை மாறும். என்னுடைய  ”வைகை எக்ஸ்பிரஸ்”  திரைப்படத்திற்கு தமிழகத்தில் மட்டும் பத்தாயிரம்  விநியோகஸ்தர்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளேன். அதற்காக ஆறு மாதங்களுக்கு மேல் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.எப்படி என்றால் ஒரு ஊரில் உள்ள ஒரு பகுதி திரையரங்கிற்கு ஆயிரம் டிக்கெட் வாங்குபவர் ஒரு விநியோகஸ்தர் ஆவார். அதே போல் டிக்கெட் வாங்கும் ரசிகர்களுக்கு பயனளிக்கும் வகையில் பத்து டிக்கெட்டுக்கு ஒரு டிக்கெட் இலவசம் என்ற முறையைப் பயன்படுத்துவதின் மூலம் ரசிகர்களின் வரவேற்பு வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற தினங்களிலும் அதிகமாகும்.

சினிமாவும் வீடு தேடி வரும் !

எல்லாப் பொருள்களும் வீடு தேடி வரும் போது சினிமா மட்டும் வீடு தேடி வரக்கூடாதா? எல்லாப் பொருள்களும் வீட்டுக்கதவை தட்டும் போது சினிமா மட்டும் வீட்டுக் கதவைத் தட்டக் கூடாதா?

இப்போது 25 ரூபாய் பொருள் கூட வீடு தேடி வரும் போது 100 கோடிரூபாய் புழங்கும் சினிமா வீடு தேடி போகக் கூடாதா? விநியோகஸ்தர்கள்  10 லட்சம் பேர் இருந்தால் சினிமா காப்பாற்றப்படும். சினிமாவை கேளிக்கையாக பார்க்கும் ரசிகனுக்கு வியாபாரமாக அறிமுகப் படுத்தும் திட்டம் இது. வியாபாரமாக மாற்ற எனக்கு ஆசை.

தீபாவளிக்கு ஒரு சட்டைவாங்கினால் 2 இலவசம்  என்று சொல்கிற காலம் இது. தீபாவளிக்கு சினிமாவில்  மட்டும் 50 ரூபாய் டிக்கெட் 500 ரூபாய் என்பது என்ன நியாயம்?

அப்புறம் எப்படிக்  கூட்டம் வரும்? இத்தனைக் காலம் வெறும் ரசிகனாக போஸ்டர் ஒட்டி தோரணம் கட்டிக் கொண்டு இருந்தவனை வியாபாரியாக்கும் முயற்சி இது. இதற்காக சம்பாதிக்கும் நோக்கம் கொண்ட பத்தாயிரத்தும் மேலான இளைஞர்களைத் திரட்டிவிட்டேன். எனது படத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். மற்ற பெரிய நடிகர்களின் படங்களையும் வாங்கி வெளியிடவுள்ளேன்.

இதுவரை பெரிய நடிகர்கர்கள் தங்கள் கோடிக்கணக்கான ரசிகர்களை கட் அவுட் வைக்கவும், பாலாபிஷேகம் செய்யவுமே பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த கோடிக்கணக்கான ரசிகர்கள் தன் படத்தின் மூலம் ஒரு பைசா சம்பாதிக்க வழிவகை செய்ததில்லை. வீட்டில் அவனுக்கு வெட்டிப்பயல் சினிமா பைத்தியம் என்ற அவப்பெயர் மட்டுமே மிஞ்சும். எனது இந்த முயற்சி அதை மாற்றும். கட் அவுட் வைக்கிற ரசிகனும் தனக்கு தெரிந்தவர்களுக்கு டிக்கெட் விற்பதின் மூலம் வீட்டிற்கு காசு கொடுக்கும் நிலையை உருவாக்கலாம். இதை செய்தே தீருவேன்.இதன் மூலம் செல்போன் டாப் அப் செய்வதைப் போல சினிமாவையும் டாப் அப் செய்ய முடியும் 10 டிக்கெட் வாங்கினால் ஒன்று இலவசம்  என்பது லாபமும்கூட , .100 டிக்கெட் வாங்கினால் 10 இலவசம் என்றால் ரசிகனுக்கு நல்லது தானே? லாபமும்தானே ? எனக்கேன் இந்த வேலை என்கிறீர்களா  ?அம்பானி முடி திருத்தும் தொழிலில் இறங்கும்  போது ஆர்கே சினிமா டிக்கெட் விற்கக் கூடாதா?” இவ்வாறு ஆர்.கே பேசினார்.
நிகழ்ச்சியில் வசன கர்த்தா வி.பிரபாகர், நடிகைகள் நீதுசந்திரா, கோமல்சர்மா, அர்ச்சனா ஆகியோரும் பேசினார்கள்.