யுவன் மியுசிக்கல் எக்ஸ்பிரஸ்

u1இளைஞர்களை மெய்சிலிர்க்கும் இசையால் தன்வசம் இழுத்த ‘இளைய’ ராஜா இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் கோலாகலமான இசை நிகழ்ச்சி  மே 9 ஆம் தேதி மாலை  திருநெல்வேலியின் பெல்பின்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கில் குழுமியிருந்த ரசிகர்களின் கரகோஷத்தின் வரவேற்பில் தனக்கே உரித்தான வாஞ்சையுடன் வந்திறங்கிய யுவன் சக பாடகர்களுடன் இணைந்து குடும்பத்துடன் திரளாய் வந்திருந்த நெல்லையின் இனிய நெஞ்சங்களுக்கு இசையென்னும் இன்விருந்து  படைத்தார்.

இசைப் பிரியர்களான நெல்லை மக்களுக்கு தொடர்ந்து 5 மணி நேரம் பல பாடல்களை பாடி மகிழ்வித்தனர் யுவன் குழுவினர் பாடகர்கள் நேஹா பசின், ப்ளாசி, கிரீஷ், ஸ்வேதா பண்டித், ஸ்ரீரம்யா, சத்யன், ஹரிசரண் என தென்னகம் மற்றும் இந்தியா முழுதும் பிரசித்தி பெற்ற பல பாடகர்களை உள்ளடக்கிய இசைக்குழு  தங்கள் மென்மையான இசையைக் கேட்கும் செவிகளை மகிழ்வித்த வேளையில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, பவதாரிணி என தனது சகோதரன் யுவனுடன் இணைந்து பாடினர். இயக்குநர் விஷ்ணுவர்தன் , நடிகர் கிருஷ்ணா ஆகியோரது வருகையும் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

மொத்தம் ஏழு பகுதிகளாக நடந்த இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு பகுதியும் சுவாரஸ்யத்தின் உச்சம். யுவனின் அதிர வைக்கும் அறிமுகம், அனைத்து பாடகர்களும் யுவனுடன் இணைந்து பாடியது, யுவனின் நண்பரும் நடிகருமான கிருஷ்ணா பாடியது, இயக்குநர் விஷ்ணுவர்தன் தங்கள் பாலிய நினைவுகளை எடுத்துரைத்து, தனது சகோதரி மற்றும் சகோதரர்களுடன் இணைந்து பாடியது, இயக்குநர் வெங்கட் பிரபுவின் மங்காத்தா அனுபவங்கள் என ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாய் அமைந்திருந்தது யுவன் மியுசிக்கல் எக்ஸ்பிரஸ்